168 ஆண்டுகளாக பிரிட்டனின் வெளிவந்த ‘நியூஸ் ஒஃப் தி வேல்ட்’ பத்திரிகையின் கடைசிப்பதிப்பு
பிரிட்டனில் 168 ஆண்டுகளாக வெளிவந்த “நியூஸ் ஒஃப் தி வேல்ட்” பத்திரிகை நேற்று தனது கடைசி பதிப்பை வெளியிட்டது. பல முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்ட சர்ச்சையில் சிக்கிய “நியூஸ் ஒஃப் தி வேல்ட்” பத்திரிகை நேற்றுடன் நிரந்தரமாக மூடப்பட்டது.
இதன்படி நேற்று வெளியான தனது கடைசி பதிப்பின் முதல் பக்கத்தில் தனது பழைய பதிப்புக்களின் புகைப்படங்களுடன் “நன்றி, சென்று வருகிறேன்” என கொட்டை எழுத்தில் பதிக்கப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் இரவு தனது கடைசி பதிப்பை அச்சிட்ட அந்த பத்திரிகையின் பணியாளர்கள் இரவு 10 மணியுடன் கடைசி பதிப்பின் பிரதிகளுடன் உணர்ச்சி மல்க விடைபெற்றனர்.
பிரிட்டனில் அதிக அளவில் விற்பனையாகிவந்த நியூஸ் ஒப் தி வேல்டின் கடைசி பதிப்பில் 5 மில்லியன் பிரதிகள் அச்சேற்றப்பட்டதாக அந்த பத்திரிகையின் ஆசிரியர் ஒருவரான டான் வூட்டோன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வழமையாக இந்த பத்திரிகை 2.5 மில்லியன் பதிப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். கடைசி வெளியீட்டில் வரும் விளம்பர வருவாயை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க இருப்பதாக அதன் உரிமையாளர் ஜேம்ஸ் மேர்டொக் குறிப்பிட்டார்.
நேற்றைய பதிப்பானது ‘நியூஸ் ஒப்தி வேல்ட்’ பத்திரிகையின் 8,674 ஆவது பதிப்பாகும்.
இந்நிலையில் மேற்படி பத்திரிகை மூடப்பட்டதைத் தொடர்ந்து அதில் பணிபுரிந்த 200 பணியாளர்கள் வேலையிழந்துள்ளனர். எனினும் இந்த பத்திரிகையின் பிரதான நிறுவனமான “நியூஸ் இன்டர்னஷல்” நிறுவனத்தின் ஏதாவது கிளை நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. “நியூஸ் இன்டர்னஷனல்” பிரிட்டனில் இயங்கும் பிரதான செய்தி நிறுவனமாகும்.
பிரிட்டனில் உள்ள அரசியல் தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள், அரச குடும்பத்தினர் என பல தரப்பினரின் தொலைபேசிகளை ரகசியமாக பதிவு செய்து பரபரப்பு செய்திகளை “நியூஸ் ஒப் தி லேல்ட்” வெளியிட்டது.
நியூஸ் ஒப் தி வேல்ட் பத்திரிகையின் கடைசி பிரதியுடன் அதன் பணியாளர்களை காணலாம்.
இந்த பத்திரிகை அத்துமீறுவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பிரபலங்கள் கூறினர். பிரபலங்கள் குரல் சார்ந்த மின்னஞ்சல் தகவல்களை எடுத்ததற்கு இந்த பத்திரிகை நிறுவனம் மன்னிப்பு கோரியது.
நடிகை சியன்னா மில்லருக்கு உரிய நஷ்டஈடு தொகை வழங்கியது.
குறிப்பாக இளம் பெண் ஒருவரின் ‘வொயிஸ் மெயிலை’ அந்த பத்திரிகையில் பணியாற்றி வந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர் ஒட்டுக்கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் அப்பெண் கொலையுண்டார்.
இந்த குற்றச்சாட்டுகளை அடுத்து அந்த பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூனின் முன்னாள் தொடர்பாடல் இயக்குனருமான அன்டி இலோசன், பத்திரிகையில் முன்னாள் அரச குடும்பம் தொடர்பான செய்தியாளர் கிலைவ் லொயிட் மற்றும் 63 வயதான நபர் ஒருவரை பிரிட்டன் பொலிஸார் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் நேற்று முன்தினம் பிணையில் விடுதலையாகியுள்ளனர்.
இந்த சர்ச்சைகளை தொடர்ந்தே மேற்படி பத்திரிகையின் உரிமையாளர் ஜேம்ஸ் மேர்டொக் பத்திரிகையை மூட தீர்மானித்தார். இது குறித்த அறிவிப்பை அவர் கடந்த வியாழக்கிழமை வெளியிட்டார். பத்திரிகையை மூடுவதை இட்டு பெரும் வேதனை அடைவதாக அவர் குறிப்பிட்டார்.
ஜேம்ஸ் மேர்டொக் 1969 ஆம் ஆண்டு “நியூஸ் ஒப் தி வேல்ட்” பத்திரிகையை வாங்கி சர்வதேச ஊடக சக்தியாக உருவெடுத்தார். இவர் அவுஸ்திரேலியாவில் பத்திரிகை நடத்தி வருகிறார்.
இவரது ‘நியூஸ் இன்டர்னஷனல்’ நிறுவனத்தில் சன், தி டைம்ஸ், சன்டே டைம் ஆகிய பிரதான பத்திரிகைகள் உள்ளன. இது தவிர ஸ்கை நியூஸ், பொக்ஸ் நியூஸ் போன்ற தொலைக்காட்சி சேவைகளும் இவருடையதாகும்.
‘நியூஸ் ஒப் தி வேல்ட்’ பத்திரிகையே கடந்த 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் ‘ஸ்பொட் பிக்சிங்’ சூதாட்டத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.
கிரிக்கெட் உலகையே பரபரப்பில் ஆழ்த்திய இந்த சர்ச்சையைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்களான சல்மான் பட், மொஹம்மட் ஆசிப் மற்றும் மொஹம்மட் அமீர் ஆகியோருக்கு ஐ.சி.சி. போட்டித்தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply