ஆப்கன் அதிபரின் சகோதரர்பாதுகாவலரால் சுட்டு கொலை

ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் சகோதரரும், கந்தகார் மாகாண கவர்னருமான அகமத் வாலி கர்சாய் நேற்று, அவரது பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலைக்குத் தலிபான் பொறுப்பேற்றுள்ளது.ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாயின் சகோதரர் அகமத் வாலி கர்சாய். இவர் ஆப்கன் அரசியலில் செல்வாக்கு மிக்கவராக இருந்தார்.
ஆப்கன் நாட்டில் ஓபியம் போதைப் பொருளை பல ஆண்டுகளாக வாலி கர்சாய் கடத்தி வந்ததாக, அவர் மீது குற்றச்சாட்டு உண்டு. போதைப் பொருள் கடத்தலில் வாலி கர்சாய் ஈடுபட்டிருப்பதாகவும், அவரிடம் இருந்து அதிகாரங்களை பறிக்கும்படி, ஹமீத் கர்சாய்க்கு, அமெரிக்கா உத்தரவிட்டதாகவும், கடந்த 2008ம் ஆண்டில், “நியூயார்க் டைம்ஸ்’சில் செய்தி வெளியானது.இதைத் தொடர்ந்து, சி.ஐ.ஏ.,யின் கட்டளைப்படி, ஆப்கனின் துணை ராணுவத்தை இயக்க, அமெரிக்காவிடம் இருந்து, வாலி கர்சாய் பணம் பெற்றதாக “டைம்ஸ்’ பத்திரிக்கையில் செய்தி வெளியானது.
இந்நிலையில், நேற்று “அகமது வாலியை அவரது வீட்டில் வைத்து,

அவரது பாதுகாவலர் சர்தார் முகம்மது சுட்டுக் கொன்றார்’ என்று கந்தகார் மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் ஜல்மாய் அயுபி தெரிவித்தார்.வீட்டிற்கு வந்திருந்த உறவினர்களை வரவேற்ற போது, இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால், “வாலி கர்சாயை அவரது வீட்டிற்கு வந்திருந்த உறவினர் ஒருவர் தான் சுட்டுக் கொன்றார்’ என்று ஆப்கன் புலனாய்வு அமைப்பான தேசிய பாதுகாப்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.வாலி கர்சாயுடன் அவரது உறவினர்கள் சிலரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக, பெயர் வெளியிட விரும்பாத அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.வாலி கர்சாய் கொலைக்கு தலிபான் பொறுப்பேற்றுள்ளது. தலிபான் செய்தித் தொடர்பாளர் யூசுப் அஹ்மதி வெளியிட்ட அறிக்கையில், இது தங்களின் சாதனைகளில் ஒன்று என குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply