கிளிநொச்சியில் 65 ஆயிரம் பேர் வாக்களித்த தகுதி
இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் அரசியல் தலைநகரமாகத் திகழ்ந்த கிளிநொச்சி மாவட்டத்தில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் மக்கள் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் வாக்களிக்கவிருக்கின்றார்கள். அதிகாரப் பரவலாக்கலின் ஓர் அம்சமாக இந்த உள்ளுராட்சி சபைகள் கருதப்படுகின்றன. இவற்றிற்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக இப்போது கிடைத்துள்ள இந்த ஜனநாயக சந்தர்ப்பம் குறித்து அந்த மக்கள் அதிகம் அக்கறை கொள்ளாதவர்களாகவே காணப்படுகின்றார்கள்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளுக்கான தேர்தல் நடைபெறவிருக்கின்றது. இந்தத் தேர்தலில் 65 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றிருப்பதாகக் கூறும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், இம்முறை தேர்தல் நடவடிக்கைகள் யாவும் கிளிநொச்சி அரச செயலகத்தினால் கையாளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
போரினால் பாதிக்கப்பட்டு சகல ஆவணங்களையும் இழந்துள்ள இந்த மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான மக்கள், தேர்தலில் வாக்களிப்பதற்குத் தங்களை அடையாளம் காட்டுவதற்குரிய தேசிய அடையாள அட்டைகளின்றி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வாறானவர்களுக்குத் தேர்தலின்போது பயன்படுத்துவதற்கு வசதியாகத் தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தைப் போன்று கிளிநொச்சியிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த வேட்பாளர்கள் நெருக்கடிகளுக்கு ஆளாகி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
பல இடங்களில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தெரிவிக்கின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply