பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்க் கூட்டமைப்பு இடம்பெற்றால் ஐ.தே.க.வும் அதில் பங்கேற்கும் : ரணில்

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை தயாரிக்கும் நோக்கில் அமைக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கான பிரேரணை இன்னும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. பிரேரணை சமர்ப்பிக்கப் பட்டதும் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும். எவ்வாறெனினும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்கெடுத்தால் ஐக்கிய தேசிய கட்சியும் அதில் பங்கேற்பது குறித்து ஆராயும் என்று எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறாவிடின் ஐக்கிய தேசிய கட்சி அதில் அங்கம் வகிப்பது அர்த்தமற்ற விடயமாகும். அரசாங்கமும் தமிழ்க் கூட்டமைப்பும் பேச்சு நடத்தி அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இனப்பிரச்சினைக்கு தீர்வுத்திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்கவுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளமை தொடர்பிலும் அதில் ஐக்கிய தேசிய கட்சி பங்கேற்குமா? என்பது குறித்தும் ஊடகவியலாளர்களுக்கு விபரிக்கையிலேயே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க இவ்விடயம் குறித்து மேலும் கூறியதாவது:

தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை தயாரிப்பதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைக்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படவேண்டியுள்ளது.

இதேவேளை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு யோசனையானது நடைமுறைப்படுத்தப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் இதுவரை உறுதியில்லாமல் உள்ளது. அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் ஒருபுறம் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருகின்றன. இவ்வாறான பின்னணியில் அரசாங்கம் பாராளுமன்ற தெரிவுக்குழு யோசனையை முன்வைத்துள்ளது.

இந்நிலையில் முதலில் அரசாங்கம் பாராளுமன்ற தெரிவுக்குழு தொடர்பான பிரேரணையை பாராளுமன்றத்தில் முன்வைக்கட்டும். அதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சி ஆராய்ந்து முடிவெடுக்கும். அதாவது பாராளுமன்ற தெரிவுக்குழு என்ன வழியில் செயற்படும் என்று பார்க்கவேண்டும். காரணம் அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது. மேலும் அரசாங்கமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளவேண்டும் என்றே ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்துகின்றது. அந்தப் பேச்சுக்களில் எட்டப்படும் இணக்கத்துக்கு நாங்கள் ஆதரவு வழங்குவோம். இந்நிலையில் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கலந்துகொள்ளும் பட்சத்தில் ஐக்கிய தேசிய கட்சி அதில் பங்கேற்பது தொடர்பில் ஆராயும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கத்துவம் வகிக்காவிடின் நாங்கள் பங்கேற்பதில் அர்த்தம் இல்லை என்பதே எமது நிலைப்பாடாகும்.

ஏனைய கட்சிகள் எவ்வாறான முடிவை எடுக்கும் என்று எங்களுக்கு தெரியாது. மேலும் அரசாங்கம் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கான பிரேணையை பாராளுமன்றத்துக்கு கொண்டுவர ஏன் தாமதிக்கின்றது என்றும் எனக்கு தெரியாது. அதனை அரசாங்கத்திடம்தான் கேட்கவேண்டும். அரசாங்கம் கொண்டுவந்தால் பார்ப்போம். அரசாங்கம் பிரேரணையை இன்னும் கொண்டுவராத பட்சத்தில் நாம் அது தொடர்பில் விவாதித்துக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. எமது நிலைப்பாடு மிகவும் தெளிவானதாகும்.

அதாவது பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்படுமாயின் அது அரசியல் தீர்வு சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண்பதாக அமையவேண்டும். அதற்கு முதலில் யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி தேர்தலை நீதியானதாக நடத்தவேண்டும். வடக்குத் தேர்தலை நீதியாக நடத்துவதன் மூலமே இந்த விடயங்கள் தங்கியுள்ளன.

இதேவேளை பாராளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் அரசாங்கம் யோசனையை முன்வைத்துள்ளதே தவிர இன்னும் பிரேரணையை பாராளுமன்றத்தில் முன்வைக்கவில்லை. எனவே அவ்வாறு யோசனை முன்வைத்ததும் ஐக்கிய தேசிய கட்சி தனது முடிவை அறிவிக்கும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply