ஆனையிறவை நோக்கி முன்னேறும் இராணும்
கிளிநொச்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஆனையிறவைக் கைப்பற்றும் நோக்கில் இராணுவத்தின் விசேட படையணி-1 முன்னேறி வருவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை மற்றும் இன்று சனிக்கிழமை எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் விமானத் தாக்கதல்களுடன் ஆனையிறவு மற்றும் முல்லைத்தீவின் வடகிழக்குப் பகுதியை நோக்கி இராணுவத்தினர் நகர்வதாக சர்வதேச செய்திச்சேவையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதேநேரம், முல்லைத்தீவுப் பகுதியில் இன்று காலை 6.15 மணியளவிலும், முற்பகல் 10.30 மணியளவிலும் விமானப்படையினர் வான் தாக்குதல் நடத்தியிருப்பதாக தேசிய பாதுகாப்பு ஊடக நிலையம் அறிவித்துள்ளது. இனம்காணப்பட்ட விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீதே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஆனையிறவுப் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகள் வெளியேறி வருவதாக ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனையிறவிலிருந்து பரந்தன் அண்மையில் இருப்பதால், இராணுவத்தின் 58வது படைப்பிரிவு ஆனையிறவைநோக்கி முன்நகர்வதாகவும், இராணுவத்தினர் ஆனையிறவின் தென் பகுதியிலிருந்து 2 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் ஆனையிறவிலிருந்து வெளியேறிவரும் நிலையில் தைப்பொங்கலுக்கு முன்னர் முகமாலை, கிளாலி, முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் மற்றும் வற்றாப்பளை ஆகிய பகுதிகளை இராணுவத்தினர் மீட்டுவிடுவார்கள் எனவும் அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது. எனினும், வன்னிக் களமுனையில் நடைபெற்றுவரும் மோதல்கள் தொடர்பில் விடுதலைப் புலிகளின் கருத்துக்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply