முரசுமோட்டையிலிருந்து 52 பேர் மன்னாருக்கு இடம்பெயர்வு

தொடர்ச்சியான வான் தாக்குதல்கள் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள முரசுமோட்டையிலிருந்து மன்னார் மாவட்டத்திற்கு 52 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
 
முரசுமோட்டைப் பகுதியிலிருந்து கடந்த வியாழக்கிழமை 18 குடும்பங்களைச் சேர்ந்த 52 பேர் மன்னாரில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளனர். இவ்வாறு சென்றவர்கள் மன்னார் உயிலங்குளம் வண்ணாமோட்டையில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டிருப்பதாக மன்னார் செய்தியாளர் அறியத்தருகிறார்.

மன்னார்-பூநகரி வீதி ஊடாக இராணுவத்தினரின் உதவியுடன் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அழைத்துவரப்பட்டு தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களுக்குத் தேவையான உதவிகளைத் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழங்கிவருகின்றனர்.

இடம்பெயர்ந்த 52 பேருக்கும் தேவையான அடிப்படை உதவிகளை வழங்கிவருவதாக மன்னார் சர்வோதயம் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் எஸ்.யுகேந்திரன் கூறினார்.

இவர்களுக்கு மூன்று நாட்களுக்கான சமைத்த உணவுகளை வழங்குவதற்கு மன்னார் வாழ்வுதயம் அமைப்பு முன்வந்துள்ளது.

அதேநேரம், முரசுமோட்டைப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கான மேலதிக நிவாரணங்களை வழங்குவது தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.நிக்கலொஸ்பிள்ளை தலைமையில், அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கூடி ஆராய்ந்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply