நமது அரசியலும், அரசியலின் அரசியலும்: யதீந்திரா
அரசியலின் இயங்குநிலை சதா மாறிக் கொண்டிருக்கிறது. மாற்றங்களுக்கு ஏற்ப சிந்தனை – மீள்சிந்தனை என்னும் அடிப்படையில்தான் நமது சிந்திப்பும் நிகழ்ந்து வருகின்றது. எவரொருவர் புறநிலைமைகளை உள்வாங்கிச் சிந்திக்கின்றாரோ அவரது சிந்திப்பு மாறிக் கொண்டே இருக்கும். அவர் முன்னர் கூறிய விடயங்களை அவரே மறுக்கவும் நேரலாம். காரணம் புறநிலைமைகள் அவரை அவ்வாறு நிர்ப்பந்திக்கின்றது. மனிதர்கள் புறநிலைமைகள் மீது தாக்கம் செலுத்துகின்றனர், புறநிலைமைகள் அவர்கள் மீது தாக்கம் செலுத்துகின்றன. இறுதியில் அவன் – அது இரண்டுமே மாற்றத்திற்கு உள்ளாகின்றன. இதுதான் சிந்திப்பின் அடிப்படையாக இருக்கிறது. நமது சிந்திப்பு மாற்றத்திற்கானது எனின், நாம் ஏன் மாற்றங்களைக் கண்டு அஞ்ச வேண்டும்?
நமது சூழலில் அரசியலை மாற்றங்களின் ஊடாக நோக்கும் பண்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது. இதன் விளைவே மாற்றங்களை தமது எழுத்துக்களில் பிரதிபலிக்க முயல்வோரை தீண்டத்தகாதோராக அல்லது தங்கள் போக்குகளுக்கு எதிரானவர்களாக சிலர் கருதும் அபத்தம் நிகழ்கிறது. ஸ்டாலினிய, மாவோ வகை மார்க்சிய புரிதலில் இருந்து உள்வாங்கப்பட்ட இந்தவகை அரசியல் பண்பினை பின்னர் தமிழ்த் தேசியவாதத் தரப்பினராகிய நாமும் உள்வாங்கிக் கொண்டோம். இதன் விளைவுதான் மாற்றுக் கருத்துக்கள் என்றவுடன் நம்மையறியாமலேயே நமக்குள் ஒருவகை அச்சம் தொற்றிவிடுகிறது. இதன் தொடர்ச்சிதான் சமூகப் பெறுமதியற்ற (துரோகி, திரிபுவாதி, ஏகாதிபத்திய அடிவருடி) சொற்களுடன் நாம் அதிகம் அல்லாட வேண்டி ஏற்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முப்பது ஆண்டுகால விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்ததைத் தொடர்ந்து நமது அரசியல் புதியதொரு பண்பு மாற்றத்தை வேண்டி நிற்கிறது. இந்தப் பின்புலத்தில் நமது அரசியல் இயங்குநிலையில் செல்வாக்குச் செலுத்தும் சாதக பாதக காரணிகளை துல்லியமாக மதிப்பிட்டு அதற்கு ஏற்ப நமது அரசியல் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களின் தலைமைகள் என்றுரைப்போருக்குண்டு. நமது அரசியல் நமக்கான அரசியலாக இருக்கும் அதே வேளை மற்றவர்களுக்கான அரசியலாகவும் இருக்கின்றது என்பதுதான் யதார்த்தம். இத்தகைய புரிதல் நமது சூழலில் இருக்கின்றதா? இதுபற்றி நான் முன்னரும் பல சந்தர்ப்பங்களில் பேசியிருக்கின்றேன்.
விடுதலைப்புலிகள் அமைப்பு தமது இராணுவ வலிமையால் தெற்காசியாவின் அரசியல் போக்கில் செல்வாக்குச் செலுத்தும் சக்தியாக இருந்தது. ஆனால் அத்தகையதொரு அமைப்பு மூன்றே வருடங்களில் எவ்வாறு துடைத்தழிக்கப்பட்டது? இந்தப் பின்புலத்தில் சிந்திப்போமானால், நமது அரசியல் பிற சக்திகளின் அரசியலாகவும் இருக்கின்றது என்பதை நாம் விளங்கிக் கொள்வது கடினமாக இருக்காது.
நமது அரசியல் என்பது இந்தியாவின் பிராந்திய நலன்களுடன் பின்னிப் பிணைந்து கிடக்கின்றது. அந்த வகையில் நமக்கான அரசியல் இந்தியாவின் அரசியலாகவும் இருக்கின்றது. இந்தியாவின் பிராந்திய நலன்களில் அமெரிக்காவின் புவிசார் அரசியல் நலன்களும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. அந்தவகையில் நமது அரசியல் அமெரிக்க – இந்திய கூட்டு நலன்சார் அரசியலாகவும் இருக்கின்றது. இந்தப் பின்புலத்தில் நம்மால் முன்னெடுக்கப்படும் நமக்கான அரசியல் என்பது, நமக்கானதாக இருக்கும் அதே வேளை மறுபுறமாக அது சர்வதேச சக்திகளின் அரசியலாகவும் இருக்கின்றது. அமெரிக்க – இந்திய கூட்டுநலன்கள் சீனாவின் நலன்களோடு முரண்படும்போது அது நமது அரசியலுக்கு பிறிதொரு பரிமாணத்தை வழங்குகின்றது.
புறச்சக்திகளிடையே இடம்பெறும் புதிய உறவுகள் – முரண்பாடுகள் நமது விருப்புநிலைகளைக் கடந்து நமது அரசியல் புரிதல்களில் தாக்கம் செலுத்துகின்றன. ஏனெனில் இந்த அரசியல் உறவுகளைத் தீர்மானிப்பவர்கள் நாங்களல்ல. இந்த உலக அரசியலை மிகப்பெரிய சதுரங்கப் பலகையாக (The grand Chessboard) நாம் எடுத்துக் கொண்டால், அதில் நாம் சில நேரங்களில் பார்வையாளர்களாக இருக்கின்றோம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நகர்த்தப்படும் காய்களாகக் கிடக்கின்றோம். எப்போதாவது அபூர்வமாக விளையாடும் ஆற்றலைப் பெறுகின்றோம். இது குறித்துரைக்கும் அடிப்படையான விடயம் யாதெனில் அரசியலில் தனித்து இயங்குதல் என்று ஒன்றில்லை என்பதே ஆகும்.
ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் சர்வதேச அரசியல் பற்றிப் பேசினால் அது முதல் அர்த்தத்தில் இந்தியாவின் பிராந்திய நலன்சார் அரசியல்தான். இந்தியாவை புறம்தள்ளும் ஒரு சர்வதேச அரசியல் ஈழத் தமிழர்களுக்கு ஒரு போதுமே இருந்ததுமில்லை, இருக்கப் போவதுமில்லை. நாம் தமிழ் நாட்டின் ஆதரவுத் தளம் பற்றிப் பேசுவோமானாலும் அதுவும் இந்திய அரசியலின் ஓரு பகுதிதான். இது எக்காலத்திலும் தவிர்த்துச் செல்ல முடியாத அரசியல் விதி. புலிகள் இதனை பிற்காலத்தில் உணர்ந்திருந்தாலும் அவர்களால் இந்திய ஆளும் தரப்பினரின் நம்பிக்கையைப் பெற முடியாமல் போய்விட்டது.
புலிகளை இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு அச்சுறுத்தலான சக்தியாகவே அவர்கள் பார்த்திருக்க வேண்டும். விடுதலைப் புலிகளின் நிர்ணயவாத அரசியலுடன் நாம் ஒன்றித்து இருந்ததாலும், இந்தியா புலிகளுக்கு எதிர் நிலையில் இருந்ததாலும் நமது அரசியல் சூழலும் ஒருவகை இந்திய எதிர்ப்பு மனோபாவத்திற்கு ஆட்படுவது தவிர்க்க முடியாததாக இருந்தது. இன்று பின்நோக்கிப் பார்த்தால். ஈழத் தமிழர்களின் அரசியல் நலன்களை பிராந்திய நலன்களுக்கு வெளியில் நோக்கியதன் விளைவே புலிகள்-இந்திய முரண்பாட்டின் அடிப்படையாக இருப்பதை நாம் பார்க்கலாம். அந்த நேரத்தில் புலிகளால் உலகளாவிய நோக்கில் சிந்தித்துச் செயலாற்ற முடியாமல் போயிருக்கலாம். அதன் விளைவாக தவறுகள் சிலதும் இடம்பெற்றிருக்கலாம்.
ஆனால் இப்போதைய நிலைமை வேறு. இப்போது நம்மால் இது குறித்து ஆழ்ந்து சிந்தித்துச் செயலாற்ற முடியும். ஏனெனில் நம்மிடம் கடந்தகாலம் குறித்த படிப்பினை இருக்கிறது. இதில் முரண்பட்டு நிற்பவர்களும் உண்டு. அவர்கள் தொடர்ந்தும் இந்திய எதிர்ப்பு அரசியலை முதன்மைப்படுத்துவது அவசியம் என்று கருதவும் கூடும். அவ்வாறானவர்களின் கருத்துக்களை இந்தப் பத்தி கருத்தளவில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளத் தயாராகவே இருக்கின்றது. அவர்கள் இந்திய எதிர்ப்பு அரசியலைப் பேணிக் கொள்ளுவதன் மூலம் ஈழத் தமிழர்கள் எதிர்காலத்தில் அடையவுள்ள நன்மைகளைக் குறிப்பிடுவதுடன், எந்தவொரு சர்வதேச தலையீடும் இன்றி ஈழத் தமிழர்கள் தமது அரசியலை முன்னெடுப்பதற்கான மார்க்கங்கள் குறித்தும் உரைப்பார்களாயின் அவர்களுடன் சமர் செய்ய இந்தப் பத்தி தயாராகவே உள்ளது.
இன்று ஈழத் தமிழர் அரசியலை முன்னெடுக்க வேண்டிய வரலாற்றுப் பொறுப்பைச் சுமந்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெருமளவிற்கு இந்தியாவையே சார்ந்திருக்கின்றது. இந்தியாவின் அழுத்தம் கருதியே மகிந்த அரசு கூட்டமைப்புடன் பேசிவருகின்றது என்ற கருத்து ஊடகமயப்பட்டுள்ளது. இதன் தொடராக சிங்கள கடும்போக்குவாதிகள் மத்தியில் உறக்க நிலையில் இருந்த இந்திய எதிர்ப்பு வாதம் மீண்டும் அசைவு பெற்றுள்ளது. கொழும்பு சீனாவுடன் அணைவதையே கடும்போக்கு சிங்களவாதிகள் விரும்புகின்றனர்.
ஆனால் நீண்டகால நோக்கில் சிந்திக்கும் சிங்கள அரசியல் கொள்கையாளர்கள் இந்தியாவைப் பகைத்துக் கொள்வதன் நீண்டகால ஆபத்துக்கள் குறித்து கொழும்பை எச்சரித்து வருகின்றனர். தயான் ஜயதிலக, றொகான் குணரத்தின போன்றவர்கள் இது குறித்து வெளிப்படையாகவே பேசிவருகின்றனர். இந்தியாவைப் பகைத்தால் அது மீண்டும் கொழும்பைத் தண்டிக்கத் தயங்காது என்ற கருத்து நிலவுகிறது. இந்தியா மீண்டும் தண்டிக்கத் தயங்காது என்ற கருத்து நிலையானது, இந்தியாவின் பிராந்திய முக்கியத்துவம், தமிழ்நாடு சார்ந்து தலையிடும் அதன் ஏதுநிலை ஆகியவற்றை விளங்கிக் கொண்டதன் விளைவான எச்சரிக்கை குறிப்பாகும். இது கொழும்புக்கு மட்டுமல்ல, ஒரு வாதத்திற்காக இந்திய நலன்களுக்கு முரணாக ஒரு தமிழீழம் புலிகளால் நிறுவப்பட்டிருந்தாலும் அது சில நாட்களுக்கு மேல் இருந்திருக்கப் போவதில்லை.
இன்னும் சற்று ஆழ்ந்து நோக்கினால் ஈழத் தமிழர்களின் தனித்துவமான அரசியல் கோரிக்கையானது பெருமளவிற்கு இந்தியாவின் பிராந்திய செல்வாக்கிற்குட்பட்ட ஒன்றாகவே இருந்திருக்கிறது. பிற்காலங்களில் இடம்பெற்ற புலிகள்-இந்திய மோதல்நிலையால் ஓரநிலைப்படுத்தப்பட்ட இந்த உண்மை குறித்து நமது அரசியல் ஆய்வுச் சூழலில் எவரும் இதுவரை பேசியதும் இல்லை.
1971இல் இந்தியாவின் பின்புல ஆதரவில் பங்களாதேஷ் என்னும் புதிய தேசம் உருவாகியது. இது ஈழத் தமிழர் அரசியல் முன்னெடுப்புக்களில் பெரியளவில் தாக்கம் செலுத்தியது. இது உருவாக்கிய புதிய நிலைமைகளைக் கருத்தில் கொண்டே அப்போதைய தமிழ் மக்களின் தலைவரான எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் 1972இல் தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம் வாய்ந்த விஜயமொன்றை மேற்கொண்டார். அங்கு பேசிய செல்வா, பிரிந்து செல்வது மட்டுமே தங்களுக்கான பாதுகாப்பை வழங்கும் என்று தமிழ் மக்கள் தனக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக குறிப்பிடுகின்றார். மேலும் இதனடிப்படையில் தாம் அகிம்சைப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும் அங்கு பிரகடனம் செய்கின்றார்.
இதே காலப்பகுதியில் வல்வெட்டிதுறையில் இடம்பெற்ற கட்சி (TUF) மாநாட்டில் ஈழத் தமிழ் மக்களுக்கான அடிப்படையான அரசியல் கோரிக்கைகளை முன்வைக்கின்றார். இது குறித்து தனது நூலில் விவாதிக்கும் கலாநிதி ஏ.ஜே.வில்சன் அவரது கோரிக்கைகள் பங்களாதேஷ் விடுதலைப் போராட்டத்திற்கு முன்னர் ஷேக் முஜிபுர் ரகுமானால் (Sheike Mujibur Rahman) முன்வைக்கப்பட்ட six-point formula வை நினைவுபடுத்துவதாகக் குறிப்பிடுகின்றார். வில்சனின் ஆய்வு, நமக்கு ஒரு உண்மையை உரைப்பதாக இருக்கிறது. மேலும் குறித்த ஆய்வு, தெற்காசியாவில் இந்தியாவின் பக்கபலத்துடன் பங்களாதேஷ் என்னும் புதிய நாடொன்று உருவாகியதை ஈழத் தமிழர்களுக்கான தனியரசுக் கோரிக்கைக்கு ஏதுவான புறச்சூழலாக செல்வா கருதியிருக்கின்றார், இதன் தொடராகவே 76இல் தனிநாட்டுக் கோரிக்கையை அவர் முன்வைக்கத் தலைப்பட்டிருக்கின்றார் என்ற புரிதலுக்கு வருமாறும் நம்மை நிர்பந்திக்கிறது.
இந்த அடிப்படையில் நோக்கினால் பிற்கால ஆயுதப் போராட்ட அரசியலின் அடிப்படையாக இருந்த வட்டுக்கோட்டைத் தீர்மானம் இந்தியாவின் பிராந்திய நகர்வுகளைக் கருத்தில் கொண்டே செல்வாவால் எடுக்கப்பட்டிருக்கிறது என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியுள்ளது. இதன் பின்னர் வெளிக்கிளம்பிய ஆயுத விடுதலை இயக்கங்கள் அனைத்தையும் இராணுவ நிலைக்குத் தயார்படுத்தியதும் இந்தியாதான். இந்தக் காலத்தில் இந்தியாவின் காய்நகர்த்தல்கள் அனைத்தும் அதன் பிராந்திய நலன்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டவைதான் என்பதில் இரகசியங்கள் ஏதும் இல்லை.
ஆனால் நாம் முன்னர் பார்த்தவாறு ஈழத் தமிழர் அரசியலை இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு வெளியில் நோக்கியதால் இந்தியா கொழும்புடன் செல்வது தவிர்க்க முடியாததாக அமைந்தது. எனவே இந்தப் பத்தி, இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு வெளியில் ஈழத் தமிழர்களின் அரசியல் ஒருபோதுமே தனித்து இயக்கம் கொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாக இங்கு பதிவுசெய்ய விரும்புகிறது.
ஈழத்தின் அரசியல் எதிர்காலத்தை இந்தியாவின் நலன்களுக்கு வெளியில் சிந்தித்ததன் விளைவாகவே புலிகளின் அத்தனை தியாகங்களும் வீணாக நேர்ந்தது. எனவே இங்கு அடிக்கோடிட வேண்டிய செய்தி – நமது அரசியலும் இந்தியாவின் பிராந்திய நலனும் இரண்டறக்கலந்த ஒன்றாகும். அது பிரித்து நோக்க முடியாத (Inseparable) அரசியல் நிலைமை. இந்த உண்மையை ஓரப்படுத்தி செயலாற்றலாம் என்று எண்ணும் போதெல்லாம் ஈழத் தமிழர்களின் அரசியல் வீழ்ச்சியைச் சந்திப்பதும் தவிர்க்க முடியாததாக அமையும்.
இதனையே இந்தப் பத்தி நமது அரசியலின் அரசியல் என்று வரைவிலக்கணப்படுத்துகிறது. இந்தியா, புலிகளின் வீழ்ச்சிக்கு பிற்பட்ட புதிய நிலைமைகளை எவ்வாறு கையாள முயலும் என்பதை பிறிதொரு பத்தியில் பார்ப்போம்.
நன்றி: பொங்குதமிழ்
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply