யாழ். மாவட்ட எம்பிக்கள் தொகை குறைக்கப்படுவது இடை நிறுத்தப்படவேண்டும் : மனோ

யாழ். மாவட்டத்தின் எம்பிக்கள் தொகை ஒன்பதிலிருந்து 5 ஆக குறைக்கப்படவிருப்பதாக தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார். இதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையாளருக்கு இருந்தாலும் கூட, இதன் பின்னணி அரசியல் அடிப்படை கொண்டதாகும். எனவே அரசியல் ரீதியான தீர்வு காணப்படும் வரை இந்நடவடிக்கை இடை நிறுத்தப்படவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது,

யாழ். மாவட்டத்தில் 2009 வரை 816,005 வாக்காளர்கள் பதிவாகி இருந்தனர். இதில் 331,214 பெயர்கள் அகற்றப்பட்டு, தற்போதைய 2010ஆம் வருட பதிவில் 484,791 எஞ்சியுள்ளன. இந்த அடிப்படையிலேயே எம்பிகளின் தொகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளையில் யாழ். மாவட்ட பதிவிலிருந்து குறைக்கப்பட்ட சுமார் 330,000 பேரில் ஒரு தொகையினர் வெளிநாடு சென்றுவிட்டதாகவும், பிறிதொரு தொகையினர் மேல்மாகாணத்திற்கு குடிபெயர்ந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. நாட்டைவிட்டு தமிழர்கள் வெளியேறி உள்ளமைக்கு போரும், தேசிய இனப்பிரச்சினையும் பாரிய காரணங்களாக அமைந்திருக்கின்றன.

இன்று வெளிநாடுகளில் குடியேறியுள்ள அனைவருமே அந்தந்த நாடுகளின் குடியுரிமை பெற்றுவிட்டார்கள் என்றுகூற முடியாது. அத்துடன் சுமார் 1 இலட்சம் இலங்கையர் தமிழ் நாட்டிலே அகதிகளாக இருக்கின்றார்கள். அத்துடன் வழமையிலிருந்த இரட்டை குடியுரிமை முறைமையும் தற்சமயம் அரசியல் நோக்கத்துடன் கடுமையாக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தேசிய இனப்பிரச்சினையுடன் சம்பந்தப்பட்டவையாகும். எனவே தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் வரை இந்நடவடிக்கை ஒத்திவைக்கப்படவேண்டும். இவ்விவகாரம் அரசிற்கும், கூட்டமைப்பிற்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்படவேண்டும்.

மேல்மாகாணத்திற்கு குடிபெயர்ந்த அனைவரும் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் புதிய பதிவுகளை பெற்றுக்கொண்டுள்ளார்கள் என்று கருதப்படுவதும் தவறாகும். ஒரு சிறுதொகையினரே இவ்விதம் புதிய பதிவுகளை பெற்றுள்ளனர். கடந்த 10 வருடங்களாக கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் உள்ள தமிழ் வாக்காளர்கள் தொகையில் இயற்கையான அதிகரிப்பு மாத்திரமே காணப்படுகின்றது.

உண்மையில் தேசிய ரீதியாக சனத்தொகையில் 69 வீதமானவர்கள் வாக்காளர்கள். அந்த அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் வாழ்கின்ற 3 இலட்சம் தமிழர்களில், 2 இலட்சம் தமிழ் வாக்காளர்கள் இருக்கவேண்டும். கம்பஹா மாவட்டத்தில் வாழ்கின்ற 1 இலட்சம் தமிழர்களில், சுமார் 70 ஆயிரம் தமிழ் வாக்காளர்கள் இருக்கவேண்டும். இந்தளவிற்கு தமிழ் வாக்காளர்கள் இங்கே இல்லையென்று தேர்தல் ஆணையாளருக்கு தெரியும். இதுபற்றிய தகவல்களை அவருக்கு நான் வழங்கியுள்ளேன்.

இது வாக்காளர்களை வருடா, வருடம் பதிவு செய்யும் முறைமையில் உள்ள குளறுபடியாகும். ஆகவே இத்தகைய குளறுபடிகளுக்கெல்லாம். தீர்வு காணப்படும் வரை இந்நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படவேண்டும். இது சம்பந்தமாக தமிழ் அரசியல் கட்சிகளினதும், தேர்தல் கண்காணிப்பாளர்களின் நிறுவனங்களினதும் விசேட மாநாட்டை தேர்தல் ஆணையாளர் நடத்தவேண்டும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply