இலங்கை முஸ்லிம்கள் வெளியேற்றப்பட வேண்டும் : பிரிவிக்
இலங்கை வாழ் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட வேண்டுமென அண்மையில் நோர்வேயில் தாக்குதல்களை நடத்திய என்ட்ராஸ் பிரிங் பிரிவிக் தெரிவித்துள்ளார். இலங்கை, ஐரோப்பா, பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். நோர்வே பிரதமர் அலுவலகம் மற்றும் இளைஞர் முகாம் ஒன்றின் மீது குறித்த நபர் மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடத்தியிருந்தார். இந்தத் தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்ததுடன் சொத்துக்களுக்கும் பாரியளவில் சேதம் ஏற்பட்டிருந்தது.
பிரிவிக் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, ஐரோப்பாவை புறச் சக்திகளிடமிருந்து பாதுகாக்கும் நோக்கில் தாக்குதல்களை நடத்தியதாகத் தெரிவித்திருந்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட கொள்கைப் பிரகடனம் ஒன்றையும் பிரிவிக் வெளியிட்டுள்ளார்.
இந்தக் கொள்கைப் பிரகடனத்தில் நவீன போர்த் தந்திரோபாயங்கள் மற்றும் பயங்கரவாத அமைப்புக்கள் பற்றி சுட்டிக்காட்டியுள்ளார். ஐரோப்பிய சுதந்திரப் பிரகடனம் என அந்த அறிக்கைக்கு பெயர் சூட்டியுள்ள பிரிவிக், இலங்கையின் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றியும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட வேண்டும் எனவும் அதற்கு பூரண ஆதரவளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நான்காம் தலைமுறை யுத்தம் பற்றி குறிப்பிட்டுள்ள பிரிவிக், ஆயுதங்களை மட்டும் பயன்படுத்தி யுத்தம் மேற்கொள்ள முடியாது எனவும், சமூக கலாச்சார மற்றும் ஏனைய விழுமியங்கள் பற்றியும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹாத்மா காந்தியின் அஹிம்சை வழிப் போராட்டம் தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளினால் ஐரோப்பா மீது செலுத்தி வரும் தாக்கங்களுக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply