இலங்கைக்கான இராணுவ உதவி நிறுத்தப்படாது; கோடிப்புறத்தை வெளிநாட்டாரின் விளையாட்டு மைதானமாக்க விரும்பவில்லை

இலங்கைக்கான இராணுவ உதவியை நிறுத்திவிடுமாறு தமிழக அரசியல் கட்சிகள் இந்திய மத்திய அரசாங்கத்தை கடுமையாக வலியுறுத்திவரும் நிலையில் அதனை மன்மோகன்சிங்கின் அர சாங்கம் நேற்றுமுன்தினம் வியாழக் கிழமை திட்டவட்டமாக நிராகரித்திருப்பதுடன் இலங்கையின் பாதுகாப்பு இந்தியாவின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது என்று அறிவித்திருக்கிறது.

இந்திய பாராளுமன்றத்தின் மேல்சபையான ராஜ்ய சபாவில் இது தொடர்பாக வியாழனன்று கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, எமது பின்புறத்தில் வெளிநாட்டவர்களின் பிரசாரத்தை இந்தியா விரும்பவில்லையென்றும் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக விளக்கமளித்த பிரணாப் முகர்ஜி, இலங்கைத் தீவின் கேந்திர முக்கியத்துவத்தை நாம் மறந்துவிடக் கூடாது. இது அவர்களின் (இலங்கையின்) பாதுகாப்பு மட்டுமல்லாமல் எமது பாதுகாப்புடனும் நெருக்கமான தொடர்புகளை கொண்ட விடயமாகும் என்று கூறியுள்ளார்.

அண்மையில் கொழும்பு சென்ற மூன்று இந்திய அதிகாரிகளின் (எம்.கே.நாராயணன், சிவ்சங்கர் மேனன், விஜே சிங்) பயணத்தின் நோக்கம் பற்றி விபரித்த முகர்ஜி, “அவர்களின் (இலங்கை ) பாதுகாப்புத் தேவைகளை நாம் நிறைவேற்றுவோம். வேறு இடங்களை நாடவேண்டாம் என்று நாம் அவர்களுக்கு கூறியுள்ளோம்’என்று தெரிவித்தார்.

“எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்? என்ன மாதிரியான உதவி அவர்களுக்கு தேவைப்படுகிறது? அவர்களின் பாதுகாப்பு தேவை என்ன? என்பனவற்றில் பொதுவான மதிப்பீடு இருக்கவேண்டும். ஏனெனில் இந்தப்பிரச்சினை எமக்கு நெருக்கமான ஒன்றாகும். எமது கோடிப்புறத்தை சர்வதேச விளையாட்டு வீரர்கள் விளையாட்டு மைதானமாக்க நாம் விரும்பவில்லை என்பது நிச்சயமான விடயமாகும் . இலங்கை நிலைவரம் தொடர்பான மதீப்பீடுகளில் இந்த விடயங்கள் யாவும் உள்வாங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் இனநெருக்கடிக்கு இராணுவ வழியிலன்றி பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வை இலங்கை காண வேண்டும் என்றும் முகர்ஜி மீள வலியுறுத்தியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply