வடக்கு மக்களுக்கு தம்மைத் தாமே ஆளும் சுயநிர்ணய உரிமை வழங்க வேண்டும் : வாசுதேவ நாணயக்கார
வடபகுதி மக்களின் அபிலாஷைகளை புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வினை அரசாங்கம் வழங்கவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் பங்காளிக் கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில அரசியல் கட்சிகள் எதிர்த்தாலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இதனை வழங்க முடியுமென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சென்னையில் இடம்பெற்ற இந்திய மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் இலங்கையில் வடபகுதி மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டுமென நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் நிலைப்பாட்டை கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக தேசிய மொழிகள் மற்றும், இனங்களிடையேயான நல்லிணக்கம் தொடர்பிலான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில்,
வடபகுதி மக்களுக்கு தம்மைத் தாமே ஆளும் சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டுமென்பது எமது நிலைப்பாடாகும். இது தொடர்பில் அம் மக்களின் விருப்பத்தை அறிந்து கொண்டு அதற்கமைய இதனை வழங்க வேண்டும்.
அத்தோடு தற்போதைய சூழ்நிலையில் 12 ஆவது திருத்தத்திற்கமைவான தீர்வு பொருந்தாது. அதேவேளை இத் திருத்தத்திலுள்ள மத்திய அரசுக்கும், மாகாண சபைகளுக்கும் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.
இதனை நீக்க வேண்டும். அதேவேளை இந்தத் திருத்தத்தை ஒதுக்கி வைத்து விட்டு பேச்சுவார்த்தைகளை நடத்தி அதிகாரப் பகிர்வுடனான தீர்வுகளை வழங்க வேண்டும்.
அத்தோடு பொலிஸ் அதிகாரங்களையும் வழங்கலாம். எவ்வாறெனில் இவ் அதிகாரங்களிலுள்ள முக்கியமானவற்றை அதாவது தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்ட விடயங்களை மத்திய அரசாங்கம் வைத்துக் கொண்டு இது சிறு குற்றங்களை விசாரிக்கும் பொலிஸ் அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு வழங்க முடியும். இந்த நாட்டில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளே அதிகம் உள்ளது. எனவே காணி அதிகாரங்களை மத்திய அரசாங்கமும் மாகாண சபைகளும் இணைந்த குழுவை அமைத்து வழங்க முடியும். அதனை நாம் ஆதரிக்கின்றோம்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில பேரினவாதக் கொள்கைகள் கொண்ட அரசியல் கட்சிகள் எதிர்த்தாலும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இதனை வழங்க முடியும்.
18 ஆவது திருத்தம் ஜனநாயகத்திற்கு விரோதமானது இதற்கு எதிராக பாராளுமன்றத்தில் நான் உரையாற்றினேன்.
ஆனால் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியென்ற காரணத்தினால் ஆதரவாக வாக்களிக்கும் தார்மீகக் கடமை உருவானது.
வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது ஜனநாயக ரீதியாக தீர்க்கப்பட வேண்டிய விடயமாகும். இவ் இணைப்பு தொடர்பாக கிழக்கு மாகாண மக்களின் விருப்பத்தை அறிய வேண்டும். இந்திய மார்க்ஸ்சிட் கம்யூனிஸ் கட்சி நிறைவேற்றியுள்ள தீர்மானமானது ஜனநாயக ரீதியில் தீர்க்கப்பட வேண்டிய விடயமாகும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply