ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு அரச அனுசரணை: மங்கள சமரவீர

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னரே வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் நூற்றுக்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டும், கொலை செய்யப்பட்டும் உள்ளனர். ஆனால் இன்றுவரை ஒரு வரையாவது இந்த அரசு கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தவில்லை. காரணம் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் அனைத்துக்கும் அரச அனுசரணை உண்டு” என்று குற்றஞ்சாட்டினார் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர.

உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் குகநாதன் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து கொழும்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:
ஊடகங்கள் மீதான மாபியா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் கட்டுப் பாட்டிலேயே செயற்படுகின்றது. ஜனாதிபதி பதவி யேற்ற காலம் முதல் வகை தொகையின்றி ஊடகவியலாளர்கள் காணாமல் போயுள்ளனர். பலர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பலர் நேரடியாகவே பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இப்பொழுதும் உதயன் செய்தி ஆசிரியரைக் கொலை செய்யும் நோக்கத்துடனேயே தாக்கியுள்ளனர்.

இதுவரை காணாமல்போனவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. கொலைகளுடனும், தாக்குதல்களுடனும் தொடர்புடையவர்கள் கைதுசெய்யப்படவில்லை. எனவே பாதுகாப்புக்குப் பொறுப்பான ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுமே இதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டும் என்றார் மங்கள சமரவீர.

மனோ கணேசன்

யாழ்ப்பாணத்தில் இராணுவத்துக்குத் தெரியாமல் மனிதர்கள் அல்லர், ஒரு எலி கூட அங்கும் இங்கும் அசையமுடியாது. அப்படியான சூழ்நிலையில் உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் குகநாதனைத் தாக்கியவர்கள் தப்பிச் சென்றது எப்படி? அரச அனுசரணையுடனேயே இந்த மிலேச்சத்தனத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்கிறார் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்.

அவர் தொடர்ந்து கூறியதாவது:
கடந்த உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரத்துக்காக நான் யாழ்ப்பாணத்தில் தங்கி இருந்தபோது மூத்த ஊடகவியலாளரும் எனது நண்பருமான குகநாதன் உதயன் பத்திரிகைக்காக என்னைப் பேட்டிகண்டார். அப்போது கடந்த காலங்களில் அவருக்கு ஏற்பட்ட கொலை அச்சுறுத்தல்கள், உதயன் பத்திரிகை அலுவலகம் மீது குண்டர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது உயிரிழந்த சக நண்பர்கள் தொடர்பாக மிகவும் வேதனையுடன் கூறினார். இப்பொழுதும் கூட அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. மேலதிக பாதுகாப்பு கேட்டு கோரிக்கை விடுத்தும் பாதுகாப்புப் பிரிவினரால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் என்னிடம் கூறினார்.

இப்படி அவர் கூறிய சில தினங்களின் பின் குகநாதன் மிலேச்சத்தனமாகத் தாக்கப்பட்டுள்ளார். தாக்கப்பட்ட இடத்தில் இருந்து கிட்டத்தட்ட முப்பது மீற்றர் தூரத்தில் இராணுவச் சோதனை நிலையம் இருக்கின்றது. அப்படியானால் தாக்குதலின் பின்னணியில் இருந்து செயற்பட்டது யார்? 25 வருட அனுபவம் மிக்க ஜனரஞ்சகப் பத்திரிகை உதயன். ஒரு ஊடகம் நினைத்தால் எதையும் செய்யமுடியும் என்பதற்கு உதாரணம் உதயன்.உதயனின் உண்மைத் தன்மையால் குடாநாட்டு மக்கள் உதயனின் பக்கமே இருக்கின்றனர். உதயன் மீது மக்கள் கொண்டுள்ள அதீத நம்பிக்கையையும் அதன் வளர்ச்சியையும் ஆரம்பம் முதலே விரும்பாத ஒரு குழுவினரே இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருக்கின்றனர். அதற்கு அரசின் முழு அனுசரணையும் கிடைத்துள்ளது. இதற்கு அரசே பதில் சொல்லவேண்டும் என்றார் மனோ கணேசன்.

ஐ.தே.கட்சி எம்.பி. தயாசிறி ஜயசேகர

யாழ்ப்பாணத்தில் அதி உத்தம ஜனாதிபதி முதல் எல்லா அமைச்சர்களும் கூடாரம் அடித்துக் கொண்டு தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டனர். ஆனால் யாழ்ப்பாண மக்கள் இவர்கள் முகத்தில் சேற்றைப் பூசி அனுப்பிவிட்டனர். அரசுக்கு ஏற்பட்ட படுதோல்விதான் உதயன் செய்தி ஆசிரியர் மீதான தாக்குதலுக்கு வழிவகுத்தது என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர.

அவர் மேலும் தெரிவித்ததாவது:
இது தனிப்பட்ட முறையில் குகநாதன் மீது நடந்த தாக்குதல் அல்ல. ஒரு பலம் மிக்க பத்திரிகை மீதும் ஊடக சுதந்திரம் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் இது. இந்தக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
ஜனநாயக ரீதியில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் தைரியம் இல்லாத கோழைகளால் மேற்கொள்ளப்பட்டதே இந்தத் தாக்குதல். இதனுடன் தொடர்புடையவர்களைக் கண்டுபிடித்துச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது அரசின் கடமை. இந்த விடயத்தில் அசட்டை காட்டாமல் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார் தயாசிறி ஜயசேகர.

ஜயந்த கெட்டகொட எம்.பி.

ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜயந்த கெட்டகொட கூறுகையில், உதயன் செய்தி ஆசிரியர் குகநாதன் மீதான தாக்குதல் உண்மையின் மீது விழுந்த அடி என்றே கூறவேண்டும் என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கொட்டகொட. அவர் மேலும் தெரிவித்தாவது:

உண்மையை வெளிப்படுத்தும் எவையாக இருந்தாலும் அவற்றை அடியோடு அழித்து ஒழித்துவிட வேண்டும் என்பதே இந்த அரசின் கொள்கை.ஜனநாயக நாட்டில் சுதந்திரமாகப் பேசவும், கருத்துகளைக் கூறவும்கூட முடியாதுள்ளது. இராணுவ அடக்குமுறைகள் அதிகரித்துள்ளன. சட்டமும் ஒழுங்கும் குறைந்து விட்டன. தனிமனித பாதுகாப்பு கேள்விக்குரியதாகிவிட்டது.

ஊடகவியலாளர்கள் கடத்தப்படுதலும், காணாமல் போவதும், கொலை செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் சர்வ சாதாரணமாகிவிட்டன. இதனைத் தட்டிக் கேட்க எவரும் இல்லை.இவற்றை வெளிப்படுத்தும் ஊடகங்களும் அச்சுறுத்தப்படுகின்றன. இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக நன்றாகக் குரல் கொடுப்போம் என்றார் ஜயந்த கெட்டகொட.இதே கருத்தை முன்னாள் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் துணைவியார் அனோமாவும் தெரிவித்தார்.

விக்கிரமபாகு கருணாரட்ன

இப்பொழுது வடக்கில் இராணுவ சர்வாதிகார ஆட்சியே இடம்பெறுகின்றது. அங்கு ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் காணிகளை எல்லாம் இராணுவம் அபகரித்துள்ளது. அதி உயர் பாதுகாப்பு வலயம் என்று தமிழ் மக்களின் வீடுகளை எல்லாம் தன்னகப்படுத்திக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார் விக்கிரமபாகு கருணாரட்ன. அவர் மேலும் தெரிவித்தாவது: இப்படியான நிலையில் புலம் பெயர் தமிழர்களை மீண்டும் வாருங்கள் என்று அழைப்பு விடுக்கின்றது. அவர்கள் நாடு திரும்பினால் தாமும் கொல்லப்படுவோமா என்று அஞ்சுகின்றனர்.

வடக்கில் ஏற்பட்ட தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாத அரசு யாழ். மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளது. இது ஒரு அரசியல் பழிவாங்கல்.உதயன் பத்திரிகை மீது இன்று நேற்று அல்ல, அது ஆரம்பித்த காலம் முதல் தொடர்ச்சியாகப் பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.குகநாதன் தாக்கப்பட்டமையும் அரசின் பங்களிப்புடனேதான் இடம்பெற்றுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு முகமூடி கிழிக்கப்படவேண்டும் என்றார் விக்கிரமபாகு கருணாரட்ன.

மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரன்

உதயன் பத்திரிகை ஆரம்பித்த காலம் முதலே பலத்த சோதனைகளுக்கு முகம் கொடுத்து எதிர்நீச்சல் போட்டு வெற்றி கண்டுள்ளது என்று தெரிவித்தார் மூத்த ஊடகவியலாளரும் உதயன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான ந.வித்தியாதரன்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

யுத்த காலத்திலும்கூட உண்மையான செய்திகளை மக்களுக்குத் துணிச்சலாக வழங்கியது.
பல தடவைகள் நேரடியாகத் தாக்குதல்களுக்கும் முகம் கொடுத்தது. மிலேச்சத்தனமான கூலிப் பட்டாளங்களின் தாக்குதலின்போது சக ஊடகவியலாளர்களை இழந்துள்ளோம். குண்டுவெடிப்புகள், மரண அச்சுறுத்தல்கள் இடம்பெற்ற போதெல்லாம் குகநாதன் மிகவும் தெம்புடன் செயல்பட்டவர்.இன்று தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களின் இந்தக் கோழைத்தனமான தாக்குதலை ஊடக சமூகமே வன்மையாகக் கண்டிக்கின்றது. விசேடமாகக் கூறவேண்டுமானால், பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் ஆபத்து நிறைந்த வண்டியிலும் துணிச்சலுடன் ஏறிப் பயணம் செய்தவர். அவரது துணிச்சல்கள் பாராட்டப்படவேண்டியவை என்றார் வித்தியாதரன்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply