அரசியல் தீர்வு வழங்கினால் அரசாங்கம் வீடு செல்ல நேரும்: தே.தே.இ

அதிகாரப் பகிர்வை அரசியல் தீர்வாக வழங்கினால் அரசாங்கத்திற்கு வீட்டுக்குச் செல்ல நேரிடும் என்று எச்சரித்துள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், 13 ஆவது திருத்தச் சட்டத்தை தேசிய அரசியலில் இருந்து நீக்குவதற்கான பாரிய மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது. பிரிவினைவாத சக்திகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அரசின் செயற்பாடுகள் அமைந்து விடக் கூடாது. இன்று அரசாங்கத்திற்குள் தமிழீழ கொள்கைதாரிகள் ஊடுருவியுள்ளார்கள் என்றும் அந்த இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

நேற்று வியாழக்கிழமை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக அதிகாரப் பகிர்விற்கு எதிராகவும், 13 ஆவது திருத்தச் சட்டத்தை உடனடியாக ரத்துச் செய்ய வலியுறுத்தியும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தது. இதன் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய அவ் இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர கூறுகையில்,

யுத்தம் முடிவடைந்து நாட்டில் சமாதானம் பிறந்து சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். இந்த ஒற்றுமையை சீர்குலைக்க பல உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் முயற்சி செய்கின்றன. குறிப்பாக அரசியல் தீர்வு என்ற பெயரில் வடக்கிற்கு சுயநிர்ணய ஆட்சியை வழங்கும் முயற்சிகள் நடைபெற்றுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளிலும் பாரிய சந்தேகங்கள் தோன்றியுள்ளன. எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதிகாரப் பகிர்வை தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வாக முன் வைக்கக் கூடாது. இதற்கு ஒரு போதும் அனுமதி வழங்க இந்த நாட்டு மக்கள் இடமளிக்கமாட்டார்கள்.

அவ்வாறு பிடிவாதமாக அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கம் செயற்பாட்டால் ஆட்சியிலிருந்து விரட்டியடிப்பதற்கான போராட்டத்தை முன்னெடுப்போம். எனவே அரசாங்க பிரிவினைவாத சக்திகளின் தேவைகளுக்கு இடமளிக்காது நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply