சிரியாவில் போராட்டக்காரர்கள் கொலை ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம்
சிரியாவில், அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் கொல்லப்படுவது குறித்து, ஐ.நா., பாதுகாப்பு சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டுனீஷியா, எகிப்தை அடுத்து, சிரியாவில் கடந்த மார்ச் 15ம் தேதி முதல், அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிராக, மக்கள் போராட்டங்கள் துவங்கின. இப்போராட்டங்களில் இதுவரை, ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்; 3,000 பேரை காணவில்லை. 12 ஆயிரம் பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த வாரம் மீண்டும், அந்நாட்டின் பல நகரங்களில் அதிபருக்கு எதிராக, மக்கள் ஆர்ப்பாட்டங்களைத் துவக்கினர். ஆர்ப்பாட்டத்தை ஒடுக்குவதற்காக, அங்கு ராணுவ பீரங்கிகள் குவிக்கப்பட்டன. கண்மூடித்தனமாக, மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 140 பேர் பலியாகியுள்ளனர்.
ஐ.நா., கண்டனம்: ஐ.நா., பாதுகாப்பு சபையின், இந்த மாதத்துக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. ஐ.நா.,வுக்கான இந்தியத் தூதர் ஹர்தீப் சிங் புரி, சிரியாவுக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தைப் படித்தார். “சிரியாவில் வன்முறை உடனடியாக கட்டுப்படுத்தப்பட வேண்டும். அரசு அலுவலகங்கள் மீதும் பொது மக்கள் மீதும், நடத்தப்படும் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும். வன்முறைக்கு உரியவர்கள், இழப்புக்கு பொறுப்பேற்க வேண்டும். சர்வதேச சட்ட திட்டங்களுக்கு மதிப்பளித்து, சிரிய அரசு மனித உரிமையைப் பாதுகாக்க வேண்டும். சிரியாவில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களால், அங்கு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலவில்லை’ என, ஐ.நா., கண்டன தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply