பட்டினிச்சாவை எதிர்நோக்கும் அவலத்தில் வன்னி மக்கள்
வன்னிப் பகுதியில் மீளக் குடியமர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த உலர் உணவு நிவாரணம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த இடைநிறுத்தம் காரணமாக வறுமைக் கோட்டுக்குள் வாழும் மக்கள் போஷாக்கின்மையையும் பட்டினிச் சாவையும் எதிர்நோக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீளக் குடியமர்வு என்ற பெயரில் அநாதரவாக விடப்பட்டுள்ள நிலைமையே தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தொழில் முயற்சிகள் திட்டமிட்டு மறுக்கப்பட்டு வருவதாகவும் இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மக்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள்
மகேஸ்வரி
முதலில் விவசாயம் செய்து பார்த்தேன். சரிவரவில்லை. பிறகு கோழிக்கூடு கட்டி, கோழி வளர்த்துப் பார்த்தேன். எல்லோரும் கோழி வளர்க்கத் தொடங்கிவிட்டதால் அதுவும் சரிவரவில்லையென்கிறார் மகேஸ்வரி. காணாமல் போயுள்ள தனது கணவரைத் தேடியவாறு தனது மூன்று பெண் குழந்தைகளுடன் தனித்து அவர் போராடுகின்றார். தனது பிள்ளைகளுடன் வசிக்க சிறிய கொட்டில் வீடொன்றை அவர் இப்போதுதான் கட்டி முடித்துள்ளார்.
கோமதி
கோமதியின் நிலை அதைவிட மோசமானது. 20 வயதேயான அவருக்கு ஒரு வயதில் குழந்தை இருக்கின்றது. கணவரைப் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள். எங்கு என எந்தவொரு தகவலுமில்லை. தாய், தந்தை ஷெல் வீச்சில் கொல்லப்பட்டுவிட அநாதரவான மூன்று சகோதரிகளும் அவரிடமேயுள்ளனர். கூலி வேலைக்குச் செல்வதைத் தவிர தனக்கு வேறு எதுவும் தெரிந்திருக்கவில்லையென்கிறார் இவர்.
துளசி
துளசியின் கதையோ வேறு விதமாக இருக்கின்றது. 18 வயதேயான அவரை பள்ளிக்குச் செல்லவில்லையாவென்ற கேள்விக்கு இல்லையென்று அவசரமாக தலையாட்டி பதிலளிக்கின்றார். அவரை விட வயது குறைந்த மூன்று தங்கைகள் மற்றும் தம்பி கூட பாடசாலை செல்வதில்லை. அண்ணா இயக்கத்தில் போய் செத்துப் போயிட்டார். அப்பா தடுப்பில் இருக்கிறார் என்கிறார் துளசி. இப்போதுதான் வீட்டில் கோழி வளர்க்க தொடங்கியுள்ளார். ஆனாலும் அது ஐந்து பேருக்கு ஒரு வேளை சாப்பாட்டிற்குத்தான் வருவாயைக் கொடுக்கின்றது. ஒரு பசு இருந்தால் வளர்க்க முடியுமென்பது அவரது ஆசை. அவ்வாறு கிட்டினால் இன்னுமொரு வேளை உணவு அவர்களுக்குக் கிடைக்கலாம்.
கோகுலன்
முன்னாள் போராளியான கோகுலனுக்கு யாராவது கோழிக்கூடொன்று அமைக்க உதவினால் போதுமென்றிருக்கின்றது. மீதியை நான் பார்த்துக்கொள்வேன் என்கிறார் அவர். 20 வருடங்களுக்கு மேலாக அரசியல் போராளியாக இருந்த அவர் அண்மையிலேயே தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே காலொன்றை இழந்துள்ள அவருக்கு வேறு தொழில்கள் தெரிந்திருக்கவில்லை. நல்லதாக கோழிக் கூடொன்றை அமைக்க சுமார் 40 ஆயிரம் வரையில் தேவைப்படுமென கூறுகின்றார். அவரது உழைப்பை நம்பியே மனைவியும் குழந்தைகளும் உள்ளனர்.
விடுதலைப் புலிகளது நிர்வாகத்தின் கீழ் வன்னி இருந்த காலப்பகுதியில் அவர்களது நிர்வாகக் கட்டமைப்பில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பணியாற்றியிருந்தனர் எண்ணாயிரம் முதல் பத்தாயிரம்வரை ஊதியத்தை பெற்றுக்கொண்டிருந்தபோதும் திருப்திகரமானதாக வாழ்வு இருந்திருந்ததாக அவர்கள் கூறுகின்றனர். போராளிகளது குடும்பங்கள் மற்றும் மாவீரர் குடும்பங்களென அனைத்து தரப்புகளும் இவ்வாறான உதவித் தொகையுடனேயே வாழ்ந்து வந்திருந்தன. அவை அனைத்தும் இப்போது அநாதரவாக கைவிடப்பட்டுள்ளன.
புதிதாக தொழில் முயற்சிகள் ஏது மற்றிருப்பதால் தொழில் வாய்ப்புகளை தேடிக் கொள்ள பலரும் போராட வேண்டியிருக்கிறது. எவருமே திரும்பிப் பார்க்கிறார்கள் இல்லை. அபிவிருத்திகள் ஏதாவது நடந்தால் தானே வேலை வாய்ப்புகள் கிடைக்குமென்கிறார் சண்முகம். வருவாய்க்கு வழியைக் காணோம். ஆனால், சாராயக் கடைகளும் தவறணைகளும் தாராளமாக திறக்கப்பட்டு வருகின்றன என்கிறார் அவர்.
ஏற்கனவே மக்களை விரோதமாகப் பார்க்கும் படைத் தரப்பினரின் பார்வை நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் இன்னும் மோசமாகியுள்ளது. கட்டட வேலைக்கான மணல் அள்ளக்கூட கூட்டமைப்பினரை கேட்குமாறு நையாண்டி செய்வதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அங்குலத்திற்கு அங்குலம் சோதனைச் சாவடிகளும், காவலரண்களுமென மக்கள் அவதானிக்கப்பட்ட வண்ணமேயிருக்கின்றனர்.
நெருக்குவாரங்கள் மத்தியிலும் மீண்டெழவே அம்மக்கள் பாடுபடுகின்றனர். அவர்களுக்கு அதற்கொரு கால அவகாசம் தேவையாக இருக்கின்றது. எம்மை யாராவது கைதூக்கி விடவேண்டும். உதவிகள் தேவைப்படுகின்றது. மரணங்கள், காணாமல் போதல்கள் மத்தியிலும் மீண்டெழுவதற்கான நம்பிக்கை உறுதியாக தெரிகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply