அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை மூடப்படுகிறது

அமெரிக்காவின் லிபர்டி தீவில் உள்ள சுதந்திரதேவி சிலை, பராமரிப்புப் பணிகள் காரணமாக, ஓராண்டுக்கு மூடப்பட உள்ளது. அமெரிக்க சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்காக, பிரான்ஸ் நாடு, சுதந்திரதேவி சிலையை அமெரிக்காவுக்கு அன்பளிப்பாக கொடுத்தது. அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி குரோவர் கிளிவ்லண்ட், இந்த சிலையை லிபர்டி தீவில் நிறுவி, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த சிலை நிறுவப்பட்டு, வரும் அக்டோபர் மாதத்துடன் 125 ஆண்டுகள் நிறைவடைகின்றன. தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், லிபர்டி தீவுக்கு வந்து, சுதந்திரதேவி சிலையை சுற்றிப்பார்த்துச் செல்கின்றனர். இந்நிலையில், இந்த சிலையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, சிலை ஓராண்டுக்கு மூடப்பட உள்ளது.

பராமரிப்பு பணிகளுக்காக, 13 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க உள்துறை செயலர் கென் சலாஜர் கூறியுள்ளார். பிரமாண்டமான இந்த சிலையின் கீழிருந்து தலையில் உள்ள கிரீடம் வரை ஏறிச்செல்ல படிகள் உண்டு.கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின், சிலையின் உள்ளே படிகளில் ஏறிச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

பராமரிப்புப் பணிகளுக்காக, சிலை மூடப்பட்டு, அதைச் சுற்றிலும் பிரமாண்டமான அளவில் ஏணிகளும், மின் தூக்கிகளும் அமைக்கப்பட உள்ளன. பராமரிப்புப் பணிகளுக்குப் பின், 2012ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சிலை திறக்கப்படும். சிலை மூடப்பட்டிருந்தாலும், லிபர்டி தீவுக்குள் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply