கிறீஸ் பூதத்தின் பின்னணியில் அரசு: சுனில் ஹந்துன்னெத்தி
நாட்டின் அரசியல் மற்றும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணாத அரசாங்கம் கிறீஸ் பூதம் என்றதொரு மாயையை தோற்றுவித்து மக்களை திசைதிருப்பும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. கிறீஸ் பூதத்தின் பின்னணியில் அரசாங்கமே செயற்பட்டு வருகின்றது என்று ஜே. வி.பி.யின் கொழும்பு மாவட்ட எம்.பி. சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.
ஜே. வி.பி. தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் அதனைத் தெரிவித்தார்.
சுனில் ஹந்துன்னெத்தி எம்.பி. இங்கு மேலும் கூறுகையில், கிறீஸ் பூதம் என்றதொரு பயங்கரத்தை தோற்றுவித்து மக்களை திசை திருப்பும் நடவடிக்கையில் அரசாங்கமே பின்னணியில் இருந்து செயற்பட்டு வருகின்றது.
நாட்டையும் மக்களையும் சூழ்ந்து கொண்டுள்ள அரசியல் மற்றும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காண முடியாத அரசு தான் இவ்வாறு தானே கிறீஸை பூசிக் கொண்டு நழுவிக் கொண்டிருக்கின்றது.
நாட்டில் பாதுகாப்பு அமைச்சு என்றதொன்று இருக்கின்றது. பொலிஸ் இருக்கின்றது. உலகிலேயே மிகக் கொடூரமான யுத்தத்தை முடித்து வைத்த இராணுவம் தம்மிடம் இருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. இவ்வாறான நிலையில் மக்களை அச்சுறுத்தலுக்குள்ளாக்கி வருகின்ற மேற்படி கிறீஸ் பூதத்தை கண்டறிய அல்லது பிடிக்க முடியாதிருப்பது எவ்வாறு?
இவ்விடயத்தில் மக்கள் தெளிவடைய வேண்டும். ஏனெனில் கிறீஸ் பூதத்தின் பின்னணியில் அரசாங்கமே செயற்பட்டு வருகின்றது என்பதைப் புரிந்து கொள்தல் அவசியமாகும்.
இதுவரையான கிறீஸ் பூதத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் இந்த செயற்பாட்டை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் மக்களை அச்சுறுத்துகின்ற இந்த செயற்பாட்டுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூறவும் வேண்டும். அத்துடன் கிறீஸ் பூதம் தொடர்பில் நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதும் அவசியம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply