அரசியல் தீர்வை முன்வைப்பதற்கான தருணம் வந்துள்ளது : ரைம்ஸ் ஓவ் இந்தியா
புலிகளின் நிர்வாகத் தலைநகரான கிளிநொச்சி வீழ்ச்சியடைந்தமை இலங்கை இராணுவத்தின் பெரும் வெற்றியொன்றாக அமையும். புலிகள் இந்நகரத்திலேயே தம்மால் கட்டுப்படுத்தப்பட்ட நிர்வாகப் பகுதிகளைக் கொண்டிருந்தனர். ஒரு தசாப்த காலத்திற்கும் அதிகமாக இந்நகரம் கொழும்பு அரசாங்கத்தின் வரம்பிற்கு அப்பாற்பட்டதாக இருந்தது. கிளிநொச்சி கைப்பற்றப்பட்டமையால் அப்பிராந்தியத்தில் புலிகளுக்கு தளமொன்று இல்லாதிருப்பதுடன் போரின் போக்கிலும் மாற்றம் ஏற்படலாம். புலிகள் போரில் நிலைத்திருப்பதற்காக பெரும்பாலும் கெரில்லா போர் உத்திகளுக்குத் திரும்பக்கூடும். ஆனால் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக கொழும்பு அரசாங்கம் அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்கான தருணம் தற்போது கனிந்துள்ளது என இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழான ரைம்ஸ் ஓவ் இண்டியாவின் நேற்றைய ஆசிரிய தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் ஆசிரிய தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; சிறுபான்மை தமிழ் மக்களின் நியாயபூர்வமான அபிலாஷைகளை தீர்த்துவைப்பதற்கான அரசியல் தீர்வுப் பொதியொன்றை அமுல்படுத்துவதற்கு கொழும்பு, தமி ழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ ரீதியான தோல்வியை எதிர்பார்த்திருந்தது. அதில் ராஜபக்ஷ அரசாங்கம் இனியும் தாமதிக்கக்கூடாது. புலிகள் இயக்கம் 1970களில் தமிழ் மக்களைப் பிரதி நிதித்துவப்படுத்துவதாகக் கூறி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இராணுவ அமைப்பொன்றாக அது மாற்ற மடைந்தது. மாற்றுக் கருத்துடையோரையும் விலகிச் சென்றவர்களையும் அடக்குவதற்காக புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள் உலகெங்குமுள்ள பயங்கரவாத அமைப்புகளினால் பின்பற்றப்படும் வழிமுறைகளாகும்.
எவ்வாறெனினும் புலிகளின் அரசியல் இயல்பையும் தமிழ் மக்களின் கோரிக்கைகளையும் வேறுபடுத்துவது அவசியமானதாகும். அவர்களின் நியாயமான அபிலாஷைகள் பலாத்காரத்தினால் அடக்கப்பட்டுள்ளன. இப்போது புலிகள் பலவீனமடைந்த ஒரு சக்தியாக உள்ள நிலையில் கொழும்பு அரசியலமைப்பு சீர்திருத்தத்தங்களை ஆரம்பிப்பதுடன் அவற்றை அமுல்படுத்தவும் வேண்டும். இராணுவ வெற்றிகள் நிரந்தர சமாதானமாக மாற்றப்படுவதற்கு அரசியல் தீர்வொன்று அவசியமானதாகும். பல மாதங்களாக இலங்கை ஆயுதப்படைகளின் உக்கிரமான வான் தாக்குதலுக்கு முகம்கொடுத்த பொதுமக்களை வெற்றி கொள்வதென்பது இலகுவானதாக இருக்கப்போவதில்லை. அதற்கு நீண்ட காலம் எடுக்கும். ஆனால் அவர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. மூன்று தசாப்த கால யுத்ததினால் சீரழிந்த பிராந்தியத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேச சமூகம் உதவக்கூடும். ஆனால் தமிழ் மக்களை வென்றெடுப்பதற்கு கொழும்பு தலைமை வகிக்க வேண்டியிருக்கும்.
பெரும்பான்மை சிங்கள சமூகத்திற்கும் தமிழர்களுக்கும் இடையிலான இடைவெளியை நீக்குவதற்கு இலங்கை சிவில் சமூகமும் பங்காற்ற வேண்டியுள்ளது. புலிகளின் தோல்வி தமிழ் நாட்டிலும் தாக்கமொன்றை ஏற்படுத்தும். ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் இலங்கை யுத்தத்தில் தலையிடாதிருப்பதில் இதுவரை கவனமாக இருந்துவந்தது. அதுவே சரியான கொள்கை. இந்த அரசாங்கம் இப்போது அரசியல் தீர்வொன்றுக்கான அவரச தேவை குறித்து கொழும்பை வலியுறுத்தும் அதேவேளை தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் மத்தியில் இலங்கைத் தமிழர்கள் மீதான அவர்களின் கரிசனைகளையும் புலிகளின் அரசியல் இலக்குகளையும் வேறுபிரிப்பதிலும் செயலாற்றலாம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply