இராணுவத் தலையீட்டினால் பூநகரி மக்கள் பய பீதியில் : ஆனந்தசங்கரி

பூநகரிப் பகுதியின் சிவில் நிர்வாகத்தில் முறையற்ற தலையீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. பூநகரி வாழ் மக்கள் இராணுவத் தலையீட்டினால் பயத்துடனும் பீதியுடனும் வாழ்கின்றனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்தசங்கரி அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தோல்வியடைந்த ஓர் அரசியல் கட்சியின் நடவடிக்கைகளை கண்டிப்பதோடு மிகவும் விசனத்துடன் ஆட்சேபிக்கின்றேன். இராணுவத்தினர் ஏனைய வேட்பாளர்களைத் தடுத்துவிட்டு தாமாகவே முன்வந்து இக்கட்சி வேட்பாளருக்கு துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தல், சுவரொட்டி ஒட்டுதல் மற்றும் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டபோதும் அக்கட்சி தோல்வியையே தழுவியது.

பெருமளவு வாக்காளர்கள் வாக்களிக்கவிடாது தடுக்கப்பட்டனர். தற்போது இராணுவத்தின் உதவியைக் கொண்டு கூட்டுறவுச்சபைத் தேர்தலில் தலையிடுகின்றனர். அண்மையில் பூநகரி ப.நோ.கூ. சங்கத்தின் பல்வேறு கிளைகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் இராணுவத்தின் ஒரு பகுதியினர் உத்தியோகப்பற்றற்ற ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி தேர்தலிலும் உத்தியோகத்தர் தெரிவிலும் கலந்துகொள்ளவிடாது பலர் தடுக்கப்பட்டனர்.

கடமையுணர்வுள்ள இராணுவத்தினரை நான் எப்போதும் மதிப்பது எனது வழக்கம். ஆனால் இராணுவத்தில் உள்ள சில கறுத்த ஆடுகள் கடமையுணர்வுள்ள இராணுவத்திற்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் நடப்பதுண்டு. ஏனெனில் அவர்கள் எதைச் செய்தாலும் தங்கள் பெயரையே உபயோகிக்கின்றனர். அவர்கள் அரசாங்கத்திற்கும் நாட்டிற்கும் அபகீர்த்தி ஏற்படுத்த முற்படின், தயவுசெய்து அவர்களை எந்த இடத்திற்கு பொருத்தமோ அந்த இடத்திற்கு அனுப்பி வையுங்கள்.

இந்த நாட்டிலுள்ள பூநகரிப் பகுதியில் வாழும் இந்த மக்கள் இராணுவத்தினரின் தலையீட்டால் பயத்துடனும் பீதியுடனும் வாழுகின்றனர். இவ்வாறு இராணுவத்தின் உதவியைக் கோரியுள்ள அரசியல் கட்சியானது ஒவ்வொரு ப.நோ.கூ. சங்கத்தினிடமிருந்தும் ரூபா பத்து இலட்சம் ரொக்கமாகப் பெற்றுள்ளது.

இத்தகைய சம்பவங்களை ஐ.நா.சபை மட்டத்திலோ அல்லது வேறு நாடுகளுக்கோ முறையிட முடியாது. தயவு செய்து தாங்கள் இதில் தலையிட்டு கூட்டுறவு உதவி ஆணையாளர் மூலமாக இந்த முறைகேடுகள் சம்பந்தமாக ஒரு விசாரணை நடத்தி நடந்த தேர்தலை இரத்துச் செய்து புதிதாக தேர்தலை நடத்தும்படி கேட்டுக் கொள்கின்றேன்.

உங்களுக்கும் எமது நாட்டிற்கும் தமது நடத்தையால் அபகீர்த்தியை ஏற்படுத்தும் இராணுவத்தினர் மீது தயவு செய்து உரியமுறையில் நடவடிக்கை எடுத்து அப்பாவி மக்களுக்கு முறையான பாதுகாப்பும் அமைதியான வாழ்வும் கொடுக்க வேண்டியது தங்களது கடமையாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply