கூட்டமைப்பின் அடுத்த நடவடிக்கை: சம்பந்தர் சனிக்கிழமை அறிவிப்பார்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விதித்த காலக்கெடுவுக்குள் அரசாங்கம் பதில் வழங்காத நிலையில், முக்கியமான தீர்மானங்களை இரா சம்பந்தன் அறிவிப்பாரென சில தமிழ் இணையங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எதிர்வரும் 20ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கான பதவியேற்பு நிகழ்வின்போது அது குறித்த அறிவிப்பை இரா.சம்மந்தன் வெளியிடுவாரென சொல்லப்படுகிறது.
அதேவேளை, இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முறித்துக் கொள்ளாது என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், அவ்வாறான அர்த்தத்தில் வெளியாகும் செய்திகளில் எந்த உண்மையும் கிடையாது என்றும் குறிப்பிட்டார்.
“மார்ச் மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது சில முக்கிய விடயங்கள் குறித்த அரசின் விளக்கத்தை அளிக்குமாறு நாம் கோரிக்கை விடுத்திருந்தோம். ஏப்ரல் இறுதிக்குள் அவை பற்றிய நிலைப்பாட்டை விளக்குவதாக அரசாங்கம் கூறியபோதும் அது நடக்கவில்லை. அதனால், மூன்று முக்கிய விடயங்கள் குறித்தேனும் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு முன்னர் தெளிவுபடுத்துமாறு கடந்த தடவை நாம் கோரியிருந்தோம். இதுதான் உண்மை” என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், “இவற்றை நிபந்தனைகள் என்றும், கூட்டமைப்பு அரசாங்கத்துக்குக் காலக்கெடு விதித்திருப்பதாகவும் வியாக்கியானிப்பது சரியல்ல” என்றார்.
“எந்தவித முன்னேற்றமும் இன்றி பேச்சுவார்த்தைகள் தொடர்வதில் அர்த்தமில்லை. எனவே, படிப்படியாக ஓரிரு விடயங்களிலேனும் இணக்கப்பாட்டை எட்ட முயன்று வருகிறோம். அதற்காக பேச்சுவார்த்தைகளை நாம் முறித்துக்கொள்ளப்போவதில்லை” என்று விளக்கினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply