பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழர் பூர்வீக நிலங்கள் அபகரிப்பு: ஸ்ரீதரன்
தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழ் மக்களது பூர்வீக நிலங்களை அபகரிக்கும் செயற்பாடாகவே அரசின் இந்த அறிவிப்பை நோக்க முடிகிறது எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வடக்கின் சில பிரதேசங்களில் தற்போதைக்கு மீள்குடியேற்றம் செய்வது சாத்தியம் இல்லை என நேற்று அரச முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்த கருத்துத் தொடர்பாகத் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது; வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பெருமளவான பிரதேசங்கள் உயர்பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. நந்திக்கடல் கடற்கரைப் பகுதி முற்றுமுழுவதுமாக இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் வடக்கு, மேற்கு, தெற்கு அம்பலவன் பொக்கனை ஆகிய பிரதேசத்து மக்களை கோம்பாவில் பகுதியில் இப்போது அரசு மீள்குடியமர்த்தியுள்ளது. இது அகதி முகாம் போலவே உள்ளது. இந்தப் பகுதியிலேயே இவர்களுக்கு நிரந்தர காணிகள் வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.முல்லைத்தீவின் கடற்கரைப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் இராணுவத்தினர் சிங்கள மக்களை இரகசியமாக குடியமர்த்த திட்டமிட்டு வருகின்றனர் மீன் வளத்தைச் சுரண்டுகின்றனர்.
தவிர போர்க்குற்றத்தை மறைக்கும் வகையில் இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் அதனை அண்டிய பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள தமிழ்மக்களது உடலங்கள் எச்சங்கள் அழியும் வரை அவற்றை உயர்பாதுகாப்பு பகுதியாகவே வைத்திருக்க அரசு முயல்கிறது.தற்போது வடக்கில் புதிய காணிச் சட்டங்களை அமுல்படுத்தி தமிழ் மக்களது காணிகளை அபகரிக்கும் முயற்சியிலும் அரசு ஈடுபட்டுள்ளது.
ஆனால் மயிலிட்டி, கட்டுவன், தெல்லிப்பளையில் பல இடங்களில் மக்களை மீளக் குடியமர்த்த அனுமதி வழங்கப்படவில்லை.இவைதவிர வடக்கில் மண்டைதீவில் 42 செம்மண் தோட்டத்தில் கடற்படைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.பூநகரியில் இரணைதீவு 12 சதுர கிலோமீற்றர் பரப்பைக் கொண்டது அங்கு 1990 க்கு முன்னர் 900 குடும்பங்கள் இருந்தன. இப்போது இராணுவத்தினரே அங்கு நிலை கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி பரவிப் பாஞ்சான் கிராமம் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ளது. இங்கு வசித்த 400 குடும்பங்கள் வேறு இடங்களிலேயே தங்கியுள்ளன. 120 ஏக்கருக்கும் அதிகமான பரப்புடைய வெள்ளாங்குளம் பண்ணை கார்கில்ஸ் நிறுவனத்துக்கு அரசு இரகசியமாக விற்றுள்ளது.இவ்வாறு தமிழ் மக்களது பூர்வீக நிலங்களில் பல்வேறு கோணங்களில் அரசு ஆக்கிரமித்து வருகிறது.
இவ்வாறான அரசின் இனப்பாரபட்சமான நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது. இதனை வெளி உலகுக்கு அம்பலப்படுத்துவதுடன் பொதுமக்களை இணைத்து ஜனநாயக ரீதியில் வெகுஜனப் போராட்டங்களை நடத்தவுள்ளோம் என்றார் சிறீதரன் எம்.பி.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply