யுத்தம் முடிவடைந்தாலும் வன்னி பிரதேசத்தில் ஆசிரியர் பற்றாக்குறை

முப்பது ஆண்டுகால யுத்தத்தினால் நூற்றுக்கணக்கான பாடசாலைகள் வன்னி பிரதேசத்தில் முற்றாக அழிவுற்றன. இன்று யுத்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவுற்ற போதிலும், பிள்ளைகளின் கல்வி பழைய நிலைக்கு முற்றாகத் திரும்ப முடியாத கஷ்டம் தோன்றியுள்ளது.

யுத்தம் முடிவடைந்ததை அடுத்து, யுத்தத்தினால் பாதிப்புக்குள்ளாகிய வட மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் எண்ணத்துடன் அரசாங்க பாடசாலை மற்றும் ஆஸ்பத்திரி, கட்டடங்களை துரிதகதியில் புனர்நிர்மாணம் செய்யும் பணிகள் இப்போது திருப்திகரமான முறையில் பூர்த்தி செய்துள்ளது.

இவ்விதம் பாடசாலைக் கட்டடங்கள் புதிதாக புனர்நிர்மாணம் செய்யப்பட்டு அங்கு கல்விக்கான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்ற போதிலும், பிள்ளைகளுக்குக் கல்வி புகட்டுவதற்குத் தேவையான ஆசிரியர்களின் பற்றாக்குறை உச்ச கட்டத்தில் இருந்து வருகின்றது. இதனால் பாடசாலைகளில் இருந்தும் ஆயிரக் கணக்கான பிள்ளைகள் தங்கள் கல்வியை சிறந்த முறையில் தொடர முடியாத கஷ்ட நிலையில் இருந்து வருகிறார்கள்.

வவுனியாவின் தென் பகுதியில் உள்ள பாடசாலைகளின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இங்குள்ள பாடசாலைகளுக்கு 197 ஆங்கில ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். ஆயினும் அப்பாடசாலைகளுக்கு அதைவிட அரைவாசி குறைந்தளவிலான ஆசிரியர்களே இருக்கிறார்கள். இதேபோன்று, அங்குள்ள பாடசாலைகளுக்கு 199 விஞ்ஞான ஆசிரியர்கள் தேவைப்பட்டுள்ள போதிலும், அவற்றுக்கு 87 விஞ்ஞான ஆசிரியர்களே இருக்கிறார்கள்.

வவுனியாவின் தென்பகுதியிலுள்ள இந்தப் பாடசாலைகளே இவ்விதம் பாதிக்கப்பட்டிருக்கும் போது, அதற்கு வட பகுதியில் வன்னி பிரதேசத்திலுள்ள பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறையை சிந்தித்துக்கூட பார்க்க முடியாது இருக்கிறது என்று ஒரு கல்வி திணைக்களத்தின் அதிகாரி கவலை தெரிவித்தார். இதுபோன்று யுத்தம் அதிகமாக நடைபெற்ற கிளிநொச்சி மாவட்டத்திலும் உள்ள பாடசாலைகளில் 400 ஆசிரியர்களின் பற்றாக்குறை இருந்து வருவதாக அறிவிக்கப்படுகிறது.

இரண்டாம் நிலைப் பாடசாலைகளிலும், ஆரம்பப் பாடசாலைகளிலும் ஆசிரியர் பற்றாக்குறை மோசமடைந்திருப்பதாகவும், அந்த கல்வித் திணைக்களத்தின் உயரதிகாரி தெரிவித்தார். நல்ல கற்றறிந்த மாணவர்களின் கல்வியில் அதிக ஆர்வம் கொண்ட ஆசிரியர்கள் வன்னி பிரதேசத்தில் இருப்பிட வசதிகளின்மை, சுகாதார வசதிகள் போதியளவு இன்மை, சுத்தமான குடிநீர் இன்மை போன்ற காரணங்களினால் வன்னி பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளுக்கு சென்று தொழில் செய்வதற்கு பின்வாங்குகிறார்கள் என்று அறிவிக்கப்படுகிறது.ஆசிரியர்கள் இங்கு வந்து தங்கியிருப் பதற்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்தால், அவர்கள் நிச்சயம் வன்னி பிரதேசத்திலுள்ள

பாடசாலைகளுக்கு வந்து கடமை யாற்றுவார்கள் என்று அரச சேவையில் இருந்து இளைப்பாறிய கல்வி உத்தி யோகத்தரான கந்தையா முருகநாதன் என்பவர் தெரிவித்துள்ளார். வெளியூர்களில் இருந்து ஆசிரியர் தொழில் செய்ய வருபவர்களுக்கு நல்ல வசதியான சுற்றாடலுடனான வீட்டு வசதிகளை செய்து கொடுத்தால், அவர்கள் அங்கு வந்து தங்கியிருந்து வன்னி பிரதேச பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறையை நிச்சயம் தீர்த்து வைப்பார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று பொதுவாக நாட்டில் ஆசிரி யர்களுக்கு பற்றாக்குறை இருந்து வருவதனால் அரசாங்கம் வட பகுதிக்கான ஆசிரியர்களை நியமிப்பதற்கு முன்னுரிமை அளித்துள்ள போதிலும், அப்பிரதேசங்களுக்கு இடமாற்றம் செய்யப்படும் ஆசிரியர்கள் தென்னிலங்கையிலும் மலையகத்திலும் ஏனைய பகுதிகளிலும் உள்ளார்கள். ஆசிரியர் வெற்றிடங்களை சுட்டிக்காட்டி அங்கு கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்ளும் அவல நிலையும் இப்போது தோன்றியுள்ளது.

ஆசிரியர்களும் மனிதர்களே. அவர்கள் ஒரு கல்விப் போதனை செய்யும் தெய் வீகத் தொழிலை ஏற்றுக் கொண்டிருக்கின்ற போதிலும், அவர்களும் தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக அத்தொழிலை கஷ்டமான பிரதேசங்களுக்கு சென்று மனமுவந்து ஏற்றுக்கொள்ள முடியாத இக்கட்டான நிலையில் இருக்கிறார்கள் என்ற யதார்த்தத்தை உணர்ந்து, கல்வி அமைச்சு அவர்களின் குறைகளை தங்க ளாலான அளவில் தீர்த்து வைத்தால், வன்னி பிரதேசத்திலுள்ள ஆசிரியர் பற் றாக்குறையை சுமுகமாக தீர்த்து வைக்க முடியும் என்று கல்விமான்கள் கூறுகிறார்கள்.

2010 ஆம் ஆண்டில் அரசாங்கம் 1500 ஆசிரியர்களுக்கும் கல்வி உத்தியோகத்தர் களுக்கும் பயிற்சி அளித்துள்ளது. நாட்டில் ஆங்கில, கணித மற்றும் விஞ்ஞானப் பாடங்களையும் தகவல் தொழில்நுட்ப பாடத்தையும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இருக்கும் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு இப்போது கல்வி அமைச்சு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வட மாகாணத்தில் எல்லாமாக 1016 பாடசாலைகள் இருக்கின்ற போதிலும், அவற்றில் 850 பாடசாலைகளே இப்போது முழுமையாக செயற்படுவதாக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

இவற்றில் 720 பாடசாலைகளின் கட்டடங்கள் புனர்நிர்மாணம் செய்யப் பட்டுள்ளன. இதற்கென 4.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட் டுள்ளன. வட மாகாணத்தில் தற்போது பாடசாலைக்கு செல்லும் வயதையுடைய 100,000 பிள்ளைகள் இருப்பதாகவும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply