`மர்ம மனிதர்` விடயத்தில் படையினரும் பொலிசாரும் தடுமாறுவது ஏன்?

மர்ம மனிதர்களது விவகாரத்தால் நாடு முழுவதும் பீதிக்குள்ளாகியுள்ளது. பொதுமக்களும் மர்ம மனிதர்களும் நேரடியாக மோதிக்கொள்வதும் இதில் சிலர் காயத்திற்குள்ளாவதும் தொடர்ந்தவண்ணமுள்ளது.

பல பிரதேசங்களில் மர்ம மனிதர்கள் என்று சந்தேகிக்கப் படுவோரை மக்கள் துரத்திச் செல்லும் போது அவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களிலும் காவலரண்களிலும் நுழைவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான மோதல் நிலை வலுத்து வருகிறது. சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பை பொலிஸாரும் படையினரும் உரிய முறையில் நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டை பொது மக்கள் முன்வைக்கின்றனர்.

படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு வருவது எந்தவகையிலும் ஆரோக்கியமானதல்ல. அதனை விடவும் படையினர் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்துவருவது இவ் இக்கட்டான நிலையை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.

இதற்கு அரச தரப்பிலிருந்து காட்டப்படும் எதிர்வினைகள் திருப்தியூட்டுவனவாக இல்லை. சட்டம், ஒழுங்கைப் பேணுவது ஒரு அரசின் அடிப்படைக் கடமையாகும். சட்டம் ஒழுங்கை பொதுமக்கள் தமது கையில் எடுக்கக் கூடாது என அரசு வேண்டிக் கொண்டுள்ளது. இது உண்மைதான். எனினும், அரசாங்கம் இவ்விடயத்தைக் கையாளும் விதத்தில் மக்கள் அதிருப்தியுற்றிருக்கும் நிலையில் அரச தரப்பிலிருந்து கட்டளைகள் மட்டும் வருவது ஒருபோதும் திருப்தியளிக்கப் போவதில்லை.

அரசாங்கம் இவ்விடயத்தை போதிய அக்கறையுடன் கையாள்கிறதா என்ற சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாததாக உள்ளது. ஏனெனில், முழு நாடும் பீதியில் உறைந்திருக்கும் நிலையில் மக்களை ஆசுவாசப்படுத்தும் வகையிலான பதில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

மக்கள் மத்தியில் விழிப்புக் குழுக்களை அமைத்து, பொது மக்கள் படையினரிடையிலான சுமுகமான சந்திப்புகளையும் உறவாடல்களையும் அதிகரிக்க வேண்டும். இதனூடாக சிவிலியன்-படையினர் இணைந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், இவ்வாறான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை. இதனால், அரச தரப்பு இவ்விடயத்தை போதியளவு கவனத்தில் எடுக்காமல் அலட்சியப்படுத்தும் நிலை குறித்த சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது. அதனால்தான் அரசுக்கு சார்பான சக்திகளின் மறைகரங்கள் இம்மர்ம மனிதர்களது விவகாரத்துக்குப் பின்னால் நின்று விளையாடுகிறது என்று மக்கள் எண்ணத் தலைப்பட்டுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சமூக விரோதிகளும் திருடர்களும் போலியான பீதிகளை உண்டுபண்ணி, பரபரப்பை அதிகரித்து வருகின்றனர். மிகத்தெளிவாக இதனையும் அடையாளம் கண்டு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.

அத்தோடு, ஆங்காங்கே அப்பாவிகள் சிலர் சந்தேக வலைக்குள் அகப்பட்டு நையப்புடைக்கப்பட்டும் கொல்லப்பட்டும் வரும் சம்பவங்கள் அறிவிக்கப்படுகின்றன. இதனால், நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இயல்பு வாழ்க்கை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் தமது சொந்த வீடுகளில் சுதந்திரமாக இருப்பதற்கே அஞ்சுகின்றனர்.

இவ்வளவு பாரதூரமான நிலையை அவதானமாகக் கையாள முடியாமல் அரச படையினர் தடுமாறுவது ஏன்? இதுதான் இப்போது நாடு முழுவதும் எழுந்துள்ள கேள்வி. இந்தக் கேள்வியை அவ்வளவு எளிதில் புறக்கணிக்க முடியாது.

குறிப்பாக நீண்ட போரினால் அச்ச மனநிலையில் சிக்குண்டிருந்த மக்கள் இப்போதுதான் அதிலிருந்து விடுபட்டிருக்கின்றனர். ஆதலால் இந் நிலைக்கு உடன் பரிகாரம் காணப்பட வேண்டும்.

அரசு இனியாவது இதில் பொறுப்புணர்ச்சியுடன் செயற்படுமா?

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply