அரசியலாக்கப்படும் இலங்கைத் தமிழ்ப் பெண்களின் சமுதாய நிலை

இலங்கையின் பல பகுதிகளிலும் பெண்களைத் தாக்கும் மர்ம மனிதர்கள் நடமாடுவதாகவும் இதனால் இலங்கை புராவும் மக்கள் பீதியடைந்திருப்பதாகவும் பத்திரிகைகள் எழுதிக்கொண்டிருக்கின்றன. அண்மைக்காலங்களில் வரும் செய்திகளின்படி , இந்த மர்மமனிதர்கள் இலங்கை அரசால் தமிழ்ப் பெண்களை அவமானம் செய்ய ஏவப்பட்டதாகத் தமிழ்ப் பத்திரிகைகள் ஓலமிடத் தொடங்கியிருக்கின்றன.

இந்தியாவிலுள்ள இலங்கைத் தமிழரின் பாதுகாவலரர்களாகத் தங்களைத் தாங்களே நியமனம் செய்துகொண்ட ‘சினிமா சீமான்’ போன்ற ‘பெரிய மனிதர்கள’ தமிழ்ப் பெண்களின் மார்பகங்கள் சிங்கள பேரினவாதிகளால் அறுக்கப் படுவதாக அலறத் தொடங்கியிருக்கிறாhகள்;. இதைத்தொடர்ந்து இந்தியாவில் உள்ள தமிழுணர்வு வாதிகளால், இலங்கைத் தமிழ்ப் பெண்களின் மார்பகங்களைக் காப்பாற்றப் போராட்டஙகள் விரைவில் நடாத்தப்படலாம். சட்டைக்குள்ளிருக்கும் பெண்களின் அங்கங்கள் அரசியல்வாதத்தின் ஆயுதமாக மாறிவிட்டன. எதற்கெடுத்தாலும் தமிழ்ப்பெண்களின் மானம் சம்பந்தப்பட்ட விடயங்களை முன்னெடுப்பது தமிழ்த்தேசியத்தின் பரம்பரைப்பழக்கம். இதனால் உணர்ச்சிளை ஏற்றிவிட்டு உயிர்களைப் பலியெடுப்பது அடிக்கடி நடக்கும் விடயங்கள்.

இரண்டுமாதத்துக்கு முன் சிங்களப்பகுதியில் நடந்த இருவேலைக்காரப்பெண்களின் மரணமும் அதைத்தொடர்ந்த ‘மர்மவாதி;பற்றிய வதந்திகளும் காட்டுத்தீ போல் பல பகுதிகளிலும் பரவிக்கொண்டிருக்கின்றன. மர்ம மனிதன் விடயம் இலங்கையிலுள்ள மக்களை, இன, மத, பிராந்தியபேதமின்றித் தாக்கியிருக்கிறது. சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மதமென்று வித்தியாசம் பார்க்காமல் இந்த மர்ம மனிதன் பெண்களின் மார்பகங்களைக் கீறீக்கிழிப்பதான வதந்தி பல பகுதிகளிலும் அடிபடுகின்றன.

இந்த மர்ம மனிதன் பற்றிய தகவல்களையறிய வழக்கம்போல், இலங்கையிலுள்ள பலதரப்பட்ட மட்டத்திலுமுள்ள சிலரைக் கடந்த சில நாட்களாகத் தொடர்பாகத் தொடர்பு கொண்டேன்.

வடக்கு , கிழக்கு, சிங்களப்பகுதி என்ற பேதமின்றி, கிறிஸ் பூசிக்கொண்டுதிரியும் இந்த மர்ம மனித விடயம் விஸ்வருபம் எடுத்திருப்பதால் பல பகுதிகளிலும் தொடர்பு கொண்டேன். பொதுமக்கள், பேராசிரியர், மந்திரிமார், பழைய பாராளுமன்றவாதி, இன்றைய பாராளுமன்றவாதி, அரசாங்க அதிபர், எழுத்தாளர்கள், சமுகநலவாதிகள் என்ற பல தரப்பட்டமக்களுடனும் தொடர்பு கொண்டேன்.

மட்டக்களப்புப் பகுதிப் பொது மக்கள் மிகுந்த பீதியிலிருக்கறார்கள். தமிழ், முஸ்லிம் பகுதிகளில், மர்ம மனிதனால் ஏற்பட்ட வதந்திகளை ஒட்டிக் கலவரங்களும் நடந்திருக்கின்றன். சில பகுதிகளில் அப்பாவிப் பொதுமகன்கள், ‘மர்ம மனிதன்’ என்ற வதந்தியால் உயிரிழந்திருக்கிறார்கள். சில இடங்களில் இராணுவம் போடப்பட்டிருக்கிறது. பல பகுதிகளில் பொலிஸ் நிலையங்கள் தாக்கப்பட்டிருக்கின்றன. ஓரு சில கிராமங்களிலுள்ள பழமைவாதிகளான பொதுமக்களின் மனத்தில் பயத்தை உண்டாக்கி ஒரு சமுதாயக் குழப்பத்தை உண்டாக்கச் சில விஷமிகள் கூட்டம் வேலைசெய்வதாகச் சிலர் சொல்கிறார்கள். இப்படிப் பல தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இலங்கையிலிருந்து வருவதால் இதுபற்றி அறியச் சிலரைத் தொடர்பு கொண்டேன்.

கிழக்கிலங்கை, பேய்களுக்கும் சூனியங்களுக்கும் பெயர்போன பகுதியானபடியால் மர்மமனிதனைப்பற்றிய பயம் தமிழ் மக்களிடையே அளவிடமுடியாதவாறு பதிந்திருக்கிறது. புல தரப் பட்ட தகவல்களைச் சொன்னார்கள்

அவையிற் சில:

மகிந்த ராஜபக்ஸா இலங்கையின் சக்கரவர்த்தியாக வருவதற்கு, அவருக்கு இப்போது மாயமாக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் துட்டகைமுனுவின் அதிமிகு சக்தி வாய்ந்த கிரீடமும் வாளும் தேவை, அதற்கு யாகம் செய்ய முதற் கண்ணாகப் பல இளம் தமிழ்ப் பெண்களின் மார்பகங்கள் வெட்டுப்பட்டு அந்த உதிரத்தில் இந்த பூமி நனையவேண்டும், அதற்காக இந்த அரசு தங்கள் புலனாய்வுத் துறைப்பகுதியைத் தமிழ்ப் பகுதிகளுக்கு அனுப்புகிறது’ (இந்த வதந்தியின் பின்னணியில் யார் இருப்பார்கள் என்று புத்திஜீவிகள் ஆராயவும், என்ன கேடு கெட்ட தமிழுணவாளர்கள் இந்த வதந்தியைப் பரப்புகிறார்கள் என்று ஒரு புத்திஜீவி துக்கப்பட்டார்)

‘தமிழ் மக்களை இலங்கையிலிருந்து துரத்த இலங்கை அரசு முடிவு கட்டி விட்டது. அதன் ஆரம்பம்தான் இந்த முலையறுப்புக்கள் நடவடிக்கை’( தமிழ்பேசும் மக்கள் கிட்டத்தட்ட நாற்பது லட்சமாகும் அவர்களை ஒட்டுமொத்தமாக நாட்டை விட்டு எப்படித்துரத்துவது?)

‘காட்டுமரக் கடத்தற் கள்ளர்கள், காட்டுக்குள் போதைகள் வடிக்கும் திருட்டுக் கூட்டம் இப்படியான கதைகளைப் பரப்பி விட்டுத் தங்கள் வேலையைச் கச்சிதமாகச்செய்கிறது’

‘ பாதுகாக்கப்படவேண்டிய வனப்பகுதிகளில் மான்மரைகளைச் சுட்டுவிற்பவர்கள செய்த புரளியிது’

இங்கிருக்கும் ஆமிக்காரன், பொலிஸ்காரருடன் பிரச்சினையையுண்டாக்கி, பொதுசன எழுச்சி (அராபிய எழுச்சி மாதிரி)களையுண்டாக்கி அரசியல் இலாபம்தேடும் கூட்டத்தின் பிரசாரம் இது’

‘பெண்களை ஆமிக்காரன் கொடுமை செய்கிறான் என்ற வதந்தியைப் பரப்பி; புலிகள் மீண்டும் தலையெடுககப் பார்க்கிறார்கள்’

‘காட்டில் புதைத்து வைத்திருக்கும் ஆயதங்களைக் கிராமத்துக்கள் கொண்டுவரப் புலிகள் இந்த வதந்தியைப் பரப்புகிறார்கள்’ இப்படி எத்தனையோ தகவல்ககைப் பொது மக்கள் சொன்னார்கள்.

முஸ்லிம்பகுதிகளில், இந்த மர்ம மனிதனின் பின்னணியில் பல குழப்பங்கள் நடக்கின்றன. போலிஸ் நிலையங்கள் எரிக்கப் படுகின்றன. நாட்டின் பல பகுதிகளிலும் பிரச்சினைகள் தொடர்கின்றன.

கிழக்கின் முன்னாள்ப் பாராளுமன்றவாதியான தங்கேஸ்வரியின் கருத்துப்படி, பொது மக்களின் வாழ்க்கை சீர் குலைந்திருக்கிறது. பெண்கள் பாடசாலைக்கும் ரியுசனுக்கும் போகப் பயப்படுகிறார்கள்’ என்று சொன்னார்.

ஆலையடிவேம்புப் பிரதேசத்தைச்சேர்ந்த பாராளுமன்ற வாதியான பியசேனாவைத் தொடர்பு கொண்டபோது, ‘ சமுகத்தில் உள்ள சமூக நலவிரோதிகளும் இம்மாதிரியான வதந்திகளைப் பரப்பி இலாபம் தேட முயற்சிக்கிறார்கள். இரவில் கண்டபாட்டுக்குத் திரியும் காவாலிகள் இந்த வழியால ஒருத்தன் ஓடகிறான்’ என்று கூக்கிரலிட்டால் பெண்கள் தங்கள் வீட்டுப்பக்கத்தாலும் மர்ம மனிதன் ஓடியாதாகவும் , ஒரு சிர பெண்கள் மர்மனிதன் தங்கள் மார்பகங்களைக் கீறியதாகவும் முறைப்பாடு கொடுக்கிறார்கள். அதிகாலை வேலையில் களை பிடுங்கும், தமிழ் முஸ்லிம் ஏழைப் பெண்களைக்கேட்டால் , அவர்களின் கருத்துப்படி அதெல்லாம் ஒருசிலர் வேண்டுமென்றே கட்டி விடும் கதைகள். நாங்களும்தான் கருக்கல் (இருள் பிரியும் காலைநேரம்) நேரத்தில வயலுக்குப்போறம் ஏன் இந்த மர்ம மனிதன் எங்களப் புடிக்கல்ல என்று கோபத்துடன் கேட்டார்கள்’ என்று சொன்னார்.

பேராசிரியர் திஸவிதாரண (உயர் விஞ்ஞானத் தொழில் நுட்பக் கல்வி மந்திரி) அவர்களை விசாரித்தபோது, ‘ நான் இப்போது எட்டியாந்தோடடையில் நிற்கிறேன், என்னிடமும் சில பொதுமக்கள் இதுபற்றிச் சொன்னார்கள். சில கிராமப்புற மக்கள் பேய்பிசாசில் நம்பிக்கை கொண்டவர்கள். இதெல்லாம் வெறும் வதந்தியே. இதனால்ச் சில அப்பாவிப் பொதுமக்களும் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படிச் சில வதந்திகள் படிப்பறிவற்றவர்களாலும், மந்திரம் மாயங்களால் நன்மை பெறுவர்களாலும் மக்களிடம் பரப்பப்படுகிறது என்றுதான் நினைக்கிறேன்’ என்று சொன்னார்.

சமூக சேவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் இதுபற்றிக் கேட்டபோது, ‘ இப்படி எத்தனையோ வதந்திகளைப் பரப்பி மக்களைக் குழப்புவது தவிர்க்கப்படவேண்டும்’ என்றார்.

யாழ்நகர அதிபர் இமெல்டாவைத் தொடர்பு கொண்டபோது’ யாழ்ப்பாணத்திலும் இந்த வதந்திகளைத் தொடங்கியிருக்கிறார்கள். அதில் எந்த அடிப்படையும் கிடையாது. யாழ்ப்பாணத்துக்கு எந்த விதமான மர்மமனதர்களும் வரத் தேவையில்லை. ஆர்மிக்காரின் தலையிற் பழியைப்போட்டுவிட்டு எங்களுர்ப் பெரியவர்கள் என்னென்ன சேட்டைகளைப் பெண்களுக்குச செய்கிறார்கள் என்ற அறிக்கையைப் பார்த்திருப்பீர்கள். இங்கு பெண்களுக்குக் கொடுமை செய்பவர்கள், பெண்களின்; குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், படிக்குமிடத்திலுள்ள ஆசிரியர்கள், வலதுகுறைந்தோரைப்பராமரிக்குமிடத்திலுள்ள பராமரிப்பாளர்கள் சொந்தக்காரர் வேடத்திலுள்ள காமவெறிபிடித்த ஆண்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், விடுதிகள் வைத்து நடத்தும் புலமபெயர் தமிழர்கள்.’

அவர் மேலும் தொடரும்போது, ‘நான் இங்கு போன ஒக்டோபர் மாதம் வேலைக்கு வந்தேன், இதுவரை பத்துப்பெண்கள் தங்கள் கணவரால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு மிகவும் வயது குறைந்த பெண்கள் பாலியல் வன்முறைக்காளாகிய கர்ப்பவதிகளாக வந்து நின்று கதறுகிறார்கள். பெண்கள் வேலைக்குப் போகுமிடத்தில் நடக்கும் கொடுமைகள் எத்தனையோ. இன்று தமிழ்ப் பகுதிகள் முழுக்கத் திருவிழாக்களும் தேரோட்டங்களும் நடக்கின்றன. பக்தர்களில் பெரும்பானோர் பெண்கள். பலவித நேர்த்திக் கடன்களுடன் கடவுள்களிடம் வருபவர்கள். இத்தனை நெருக்கமான இடத்தில் ஏன் மர்மமனிதன் வந்து மார்பு தொட்டு விளையாடவில்லை?. இதெல்லாம், இலங்கையில் ஒரு நிம்மதி இருக்கக்கூடாது என்று திட்டம்போடும் ஒரு கூட்டத்தின்சதி’ என்று கோபத்துடன் வெடித்தார்.

தங்களின் நலனுக்குத் தமிழ்ப் பெண்களின் மரியாதையை விலை கொடுக்கும் அரசியல்வாதிகள் மீதான கோபம் அவர் பேச்சில் தெரிந்தது.

கிளிநொச்சிப் பகுதிகள் பற்றிச்சில சமுகநலவாதிகளை விசாரித்தபோது, இங்கு மர்மமனிதர்கள் வரத்தேவையில்லை. தமிழ்ப் பெண்களை நாசம் பண்ணும் வேலையை எங்கள் தமிழர்களே கச்சிதமாகச் செய்கிறார்கள். இளம் விதவைகள், வேலையற்ற பழையப் போராளிப் பெண்களுக்கு வேலை கொடுப்பதாக ஏமாற்றிப் பலர் அந்த அப்பாவிப் பெண்களை விபச்சாரச் சாக்கடைக்குள் தள்ளி விடுகிறார்கள். தங்கள் வியாபாரத்துக்கு இந்த மர்மமனிதன் படலத்தையும் அவர்கள் பாவிக்கத் தயங்கமாட்டார்கள்’ என்று சொன்னார்கள்.

சிங்கள தமிழ் எழுத்தாளரும், பொதுநலவாதியுமான மத்துக்கிரிய விஜயரட்னாவைத் தொடர்பு கொண்டபோது அவர் சொன்னதாவது,’ இந்த மர்ம மனிதன் படலம் இரத்தினபுரிப்பகுதியிற்தான் தொடங்கியது;. இரண்டு வேலைக்காரிகள் கள்வர்களால் கொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் பிடிபடவில்லை. அதனால் அந்தக் கொலைகள், பெண்களைப்பழிவாங்கி மந்திரங்கள் செய்யும் மர்மமனிதர்களால் செய்யப்பட்டது என்ற வதந்தி பரவியது. ஆதன் பின் ஊர் ஊராகத் திரிந்து மந்திரம் சொல்லியும் உடுக்கடித்தும் பிழைக்கும் ஏழை மந்திரவாதிகளுக்கு நல்ல இலாபம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து பல கிராமங்களுக்கும் இந்த கிறிஸ் பூசிய மர்மமனிதன் வதந்தி பரவிக்கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் பல தரப்பட்ட கெட்ட சக்திகளும் இன்று உலாவுகின்றன’ என்றார்.

ஓரு சமூகத்தில் ஒழுக்கம் பண்பு என்பனவற்றைப் பாதுகாப்பவர்களே வேலியே பயிரைமேய்வதான வேலைகளைச்செய்தால் ஏழைகள் யாரை நம்புவார்கள்?

பல வருடங்களக்கு முன் யாழ் ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளரான கணேசலிங்கம் என்பரால், பாலியற்கொடுமைக்காளானதாகச் சொல்லப் பட்ட பதின்நான்கு வயது, முள்ளியவளையைச்சேர்ந்த ஏழைப்பெண் யோகேஸ்வரிபற்றிக் குரல் கொடுத்தபின் இந்தப் பல்கலைக்கழக விரிவுரையாளர் பதவி நீக்கம் செய்யப்படடார். அந்தப் பெண்ணுக்கான வழக்கும் பதிவு செய்யப்பட்டது. கொஞ்சகாலத்தின்பின் அந்த வழக்கு பற்றி ஒரு தகவலுமில்லை. போர்முடிந்தபின் யாழ் சென்றிருந்தபோது அப்பெண்ணைப்பற்றி விசாரித்தேன். பல்கலைக்கழக விரிவுரையாளர் தனது பதவிக்குத் திரும்பி வந்து விட்டார். அந்த ஏழைப்பெண்ணைக் கொண்டுபோய் ‘முடித்து’ விட்டார்கள் என்று சொல்லப் பட்டது. இதுதான் தமிழ் மேல்மட்டவாதிகள் சிலரின் மனிதநேயம்!

2005ம் ஆண்டு சவுதி அரேபியாவில் வேலைக்குப் போனவிடத்தில், அவள் பராமரிக்கவேண்டிய சிறு குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட றஷீனா நபிக் என்ற மூதுரைச் சேர்ந்த பெண்ணுக்காக நான் மனிதநேயக் குரல் கொடுத்துபோது, உலகம் பரந்தவித்தில் முஸ்லிம் மக்கள் அந்த ஏழைப்பெண்ணின் உயிர் பிச்சைக்குப் பிரசாரம் செய்தார்கள். பல வருடங்களின் பின், பல தரப்பட்ட மனிதநேயவாதிகள், இலங்கை அரசு, சவுதி மன்னர், இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸ் என்போரின் தலையீட்டால் அந்தப் பெண்ணுக்கு உயிர்ப்பிச்சை கிடைக்கும் நிலையிருக்கிறது. ஆனால் பண்பு கலாச்சாரம் கற்பு, பத்தினி விரதம் பார்க்கும் தமிழ்ச் சமுதாயத்தால் யோகேஸ்வரி போன்ற ஒரு ஏழைப்பெண்ணின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. அவளுக்கு என்ன நடந்தது என்று தெரிந்தும் தெரியாமல் இருந்துவிட்டார்கள். இதுதானா எங்கள் தமிழர்களின் மனித நேயம்?

தமிழ் மக்களைப் பிரதி நிதிப்படுத்தும் பாராளுமன்றவாதிகள் ஏழைத் தமிழ் மக்களுக்கு என்ன செய்கிறார்கள்? வாழ்க்கை முழுதும் பாதுகாப்பானதும் வசதிகளும் நிறைந்ததுமான வாழ்க்கையில் உல்லாசம் காணும் பாராளுமன்றவாதிகள் தமிழ்ப் பகுதிகளில் அல்லற்படும் கிட்டத்தட்ட 89,000 விதவைகளின் விடிவுக்காக என்ன திட்டங்களை வைத்திருக்கிறார்கள்? ஆயிரக்கணக்கான அனாதைக்குழந்தைகளின் எதிர்கால விடிவக்கு இவர்களின் செயற்பாடுகள் என்ன? இன்று கிறிஸ் பூசிய மர்மமனிதன் என்ற பெயரில் அவதிப்படும் பெண்களுக்கு என்ன செய்கிறார்கள்? அந்த மர்ம மனிதன் யார் என்று கண்டுபிடிக்கும் சமூகநலவாதிகள் அங்கில்லையா? பாராளுமன்றவாதிகளுக்கு மக்கள் நலத்தை மேம்;படுத்தும் கடமையிருக்கிறது. தன்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு இவர்கள் என்ன செய்து கொடுத்தார்கள்? கல்விநிலையங்களைக் கட்டினாhகளா, கலாச்சார மண்டபங்களை உருவாக்கினாhகளா? தொழில் வளர்ச்சிக்கான தொழிற்சாலைகளை உருவாக்கினார்களா? பெண்களின் முன்னேற்றத்துகான என்ன பணியைச் செய்தார்கள்? இளம் தலைமுறைக்கு என்ன செய்தார்கள்?

ஓரு பாராளுமன்றவாதி ஒருமாதம், தனது மக்களுக்கு எதுவும் செய்யாமலே பல்லாயிரம் ரூபாய்களை ஊதியமாகப்பெறுகிறார். எங்கள் பாராளுமன்றவாதிகள் தமிழரின் பெயரில் இதுவரை கோடானுகோடிகளை மக்களுக்கு எந்த உதவியும் செய்யாமலே பெற்றுக்கொண்ட அதிர்ஷ்டசாலிகள். இவரின் ஒட்டுமொத்த மாத வருமானம்; கிட்டத்தட்ட:

-மாத சம்பளம்———————————————————42,000
-ஆபிஸ் ———————————————————14,000
-கைச்செலவு ———————————————————-10,000
-பிரயாணச்செலவு—————————————————– 48,000
-ஒரு தடவை பாராளுமன்றம் சென்றால்- ———500

கார்—இலவசம்

அளவற்ற ட்ரெயின் பிரயாணம்-முதல் வகுப்பு —இலவசம்

குடும்பத்துடன் விமானப் பிரயாணம் 40 தடவை? இலவசம்!

கொழும்பில் தங்க குவாட்டர்ஸ்-இலவசம்

சொந்த வீட்டு எலக்ரிசிட்டி 50.000 யுனிட்ஸ் இலவசம்

ரெலிபோன் கால்ஸ்—-17.000 இலவசம்.

பாராளுமன்றத்தில் ஆடு, மாடு, கோழி, இறால், நண்டு, கணவாய்ச்சாப்பாடு- 150ரூபாய்கள் மட்டுமே.

(இவை நம்பிக்கையாகக்கிடைத்த தகவல்களாகும்)

இதுவரையும் தமிழர்களின் துயர் சொல்லிக்கொண்டு பாராளுமன்றம் போகும் தமிழ்ப்பாராளுமன்றவாதிகள், இன்று துன்பத்தில்வாடும் ஏழைப் பெண்களின் வாழ்வும் வளத்துக்கும் பிரயோசனமாக ஏதும் செய்வார்களா? அனாதைகளுக்கும், அங்கம் இழந்தவர்களுக்கும் ஏதும் உதவிகள் செய்வார்களா? இனஒற்றுமை, நாட்டின் ஒற்றுமை, பொருள் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி பற்றி ஒரு உருப்படியான திட்டத்தை முன்வைப்பார்களா?

:இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply