1980களிலும் பார்க்க இந்தியாவின் வளர்ச்சி இன்று அதிகரித்துள்ளது.
இந்தியாவுடனான உறவுகளை இலங்கை பலப்படுத்த வேண்டும். 1980களிலும் பார்க்க இந்தியாவின் சர்வதேச வளர்ச்சி இன்று அதிகரித்துள்ளது. விரும்பியோ, விரும்பாமலோ இந்தியாவின் புவியியல் கட்டுப் பாட்டுக்குள் இலங்கை உள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று ஐ.நா.சபையின் ஆயுதபரிகரண விவகாரங்களுக்கான துணைப் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தவரும் இலங்கையின் மூத்த ராஜதந்திரியுமான ஜயந்த தனபால லக்பிம ஆங்கில வாரப் பத்திரிகைக்குத் தெரிவித்திருக்கின்றார். அவர் மேலும் கூறியதாவது:
20 மைல்களுக்கு அப்பால் உள்ள இந்தியாவை நாம் தூக்கி எறிந்து விட முடியாது. இந்தியாவுடனான உறவை புத்திசாலித்தனமான முறையில் இறுக்கமாக வைத்து வந்த ஜனாதிபதியிடமிருந்து 2009 இற்குப் பின்னர் அந்தப் புத்திசாலித்தனத்தைக் காணமுடியவில்லை.
வரலாற்று ரீதியாக இந்திய வம்சாவழியினர்தான் இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர். இலங்கையில் நடக்கும் ஒவ்வொரு விவகாரமும் இந்தியாவின் தமிழ்நாட்டிலும் அதன் ஏனைய பகுதிகளிலிலும் நேரடித் தொடர்பு உடையதாகவே இருக்கின்றது.
13 ஆவது திருத்தச்சட்டம், அதற்கு அப்பால், இரண்டாவது சபை என்று கூறியது எல்லாம் போய் இப்போது நாடாளுமன்றத் தெரிவுக்குழு என்றெல்லாம் ஜனாதிபதி பேசுகின்றார், இந்திரா காந்தியைப் போன்று எம் கையை முறுக்கிய மாதிரியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்காது, அரசியல் தீர்வு காணும் முயற்சியை விரைந்து காணுமாறு இந்தியா சாந்தமாகக் கோருகின்றது. ஆனால் நாம் அந்தச்செய்திக்கு காது கொடுப்பது போன்று தெரியவில்லை.
இந்திய இலங்கை உடன் படிக்கையை 1980 களில் திணித்ததிலும் பார்க்க இந்தியாவின் சர்வதேச வளர்ச்சி இன்று 100 வீதம் அதிகரித்துள்ளது. பெரும்பாலான மேற்கு நாடுகள் இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் வழிகாட்டலையே எதிர்பார்த்து நிற்கின்றன.
உலகரீதியில் இந்தியாவிவுக்கு உள்ள செல்வாக்கை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. நாம் இந்தியாவுடனும் சீனாவுடனும் நல்ல உறவுகளைப் பேண முடியும். முன்னரும் இவ்வாறே நடந்துள்ளோம். இந்தியா தனது பொறுமையை இழக்கும் ஒரு நேரம் வரும் . அப்போது எமக்கு இந்தியாவின் செல்வாக்கு உதவ முடியாது போகும் நிலை ஏற்படும் என்றும் ஜயந்த தனபால தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply