இனப் பிரச்சினைக்கான தீர்வில் தமிழ்த் தரப்புகளிடம் தெளிவு உண்டா?

இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிப் பேசிக் கொள்ளும் நாம், பிரச்சினைக்கான தீர்வு எது என்பது பற்றி இன்னமும் ஒரு தெளிந்த முடிவுக்கு வரவில்லை என்றே கூறவேண்டும். தமிழ் மக்கள் உரிமையோடு, சுதந்திரமாக வாழவேண்டும் என்பது பொதுவானது. தமிழ் மக்கள் உரிமையோடு சுதந்திரமாக வாழ வேண்டுமாயின் அதற்கான தீர்வு எவ்வாறு அமைய வேண்டும் என்பதை வரையறுத்துக் கொள்வது தமிழ் அரசியல் தலைமைகளின் தலையாய கடமை.

இருந்தும் தமிழ் அரசியல் தலைமைகள் அர்ப்பணிப்போடு சேவையாற்றத் தயாரில்லை. அவர்களுக்கு சொந்த வேலைகள் ஏராளம். எனவே சொந்த வேலைகளில் ஈடுபடும்போது குந்தியிருந்து இப்படித்தான் தீர்வுத்திட்டம் இருக்க வேண்டும் என ஆராய்ந்து அதனை எழுத்து வடிவிற்கு கொண்டு வருவது முடியாத காரியம்.

அண்மையில் கூட இந்தியாவிற்குச் சென்ற தமிழ் அரசியல் பிரதிநிதிகள், தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு எப்படி இருக்க வேண்டும் என அங்கிருந்து அவசர அவசரமாகத் தயாரித்ததாகத் தகவல். தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்டத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்த அதேவேளை, தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்வதில் இந்தியப் பிரதிநிதியின் தனிப்பட்ட ஆதிக்கமும் இருந்ததாகக் கேள்வி.எப்படியிருக்கிறது எங்கள் நிலைமை? இனப்பிரச்சினை என்பது இன்று, நேற்று ஆரம்பமானதல்ல. அதன் தொடக்கம் இலங்கையின் சுதந்திரத்தோடு ஆரம்பிக்கின்றது.

இருந்தும் எங்களால் இனப் பிரச்சினைக்கான தீர்வு இதுதான் என்று அறுதியிட்டு அச்சிடப்பட்ட பிரதிகளை வழங்கி அடித்துக் கூறும் திராணியில்லை. ஒவ்வொருவரும் தத்தம் அறிவுக்கும்- சந்தர்ப்பத்திற்கும் ஏற்றவாறு தீர்வுத் திட்டங்களை முன்வைக்கின்றனர். இந் நிலைமையானது தமிழ் அரசியல் தலைமைகளின் அறிவுப் பஞ்சத்தை பட்டவர்த்தனமாக எடுத்துக் காட்டும். எனவே இனிமேலாவது இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் எப்படி அமைய வேண்டும் என்பதை சகல தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் சேர்ந்து தயாரிக்க வேண்டும். அரசுடன் அல்லது வெளிநாடுகளுடன் யார் பேச்சுவார்த்தை நடத்தினாலும் அது பற்றிக் கவலையில்லை. எவர் பேசினாலும் முன்வைக்கப்படும் தீர்வு தமிழ் அரசியல் பிரதிநிதிகள் தயாரித்து அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவே இருக்கவேண்டும்.

இப்படியான ஒரு திட்டமிடல் எங்களிடம் இருக்குமாயின் மாநாடுகளில் பிடுங்குப்பட வேண்டிய சூழ்நிலையும் மற்றவர்களின் தலையீடுகளும் ஏற்படமாட்டாதல்லவா?

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply