மலையக தொழிலாளர்களின் சம்பளத்தைக் குறைக்கும் யோசனைக்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு

சர்வதேச சந்தைகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார தளம்பல்களால் இலங்கையில் தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள வருமான வீழ்ச்சியை ஈடுகட்டும் விதமாக தொழிலாளர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொழிற்சங்கங்கள் கண்டித்துள்ளன.

லிபியா, சிரியா மற்றும் இரான் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைமைகளால் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நாடுகளால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை விட, தொழிலாளர்களுக்காக அண்மையில் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தாலேயே தாம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை தேயிலை விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜயந்த கீரகல பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.

தொழிலாளர்களின் சம்பளத்தை 100 ரூபாய் வரை குறைப்பதன் மூலம் தமது நட்டத்தை ஈடுசெய்ய முடியும் என்றும் அதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட போவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆனால், சர்வதேச சந்தைகளில் ஏற்படுகின்ற தாக்கங்கள் தொழிலாளர்களிடத்தில் எந்த விதமான பாதிப்புகளையும் ஏற்படுத்த முடியாது என்று தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

லாபங்களில் பங்கு கொடுப்பது பற்றி இதுவரை காலமும் வாய்திறக்காத கம்பனிகள், நட்டம் ஏற்படும் போதுமட்டும் தொழிலாளர்களின் சம்பளத்தில் கை வைக்க நினைப்பது தவறான சிந்தனை என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் துணை பொருளாதார அமைச்சருமான முத்து சிவலிங்கம் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பையும் நாணயத்தின் பெறுமதியையும் கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட சம்பள அதிகரிப்பை எந்தக் காரணத்தைக் கொண்டும் மீண்டும் குறைப்பது பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்றும் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

இதேவேளை, தேயிலை ஏற்றுமதியாளர்கள் நெருக்கடிகளை சந்தித்தால் அவர்கள் வரிவிலக்கு மற்றும் மானியங்கள் போன்ற பரிகாரங்களை அரசிடமே நாட வேண்டும் என்று பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் செயலாளர் ஓ.ஏ. ராமையா தமிழோசையிடம் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் ஆடை ஏற்றுமதியாளர்கள் இவ்வாறான நெருக்கடியை சந்தித்த வேளையிலும் இவ்வாறான நடைமுறைகளே கையாளப்பட்டதாகவும் ராமையா சுட்டிக்காட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply