அரசியல் கைதிகளின் வழக்கு இனி சாதாரண சட்டத்தின் கீழ் விசாரணை
அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றங்களில் முன்னிலைப் படுத்தப்பட்டு, சாதாரண சட்டங்களின் ஊடாகவே இனி விசாரணைக்கு உட்படுத்தப்படுவர்; புதிய சட்டங்கள் எதுவும் கொண்டு வரப்படமாட்டாது என்று தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று உதயன் பத்திரிகைக்குத் தெரிவித்தார்.
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ள போதிலும், அதற்குப் பதிலாக நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சில ஒழுங்கு விதிகளை அரசு அறிமுகம் செய்யவுள்ளது என்று செய்திகள் வெளியாகியிருந்தன. அப்படிப் புதிய சட்டங்கள் எவையும் கொண்டுவரப் படமாட்டா என்று வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்ததாவது;
தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சில ஒழுங்கு விதிகளைக் கொண்டுவந்து, சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைத் தொடர்ந்தும் தடுத்து வைக்க வேண்டிய தேவை ஒன்றும் அரசுக்குக் கிடையாது. அவ்வாறு புதிய ஒழுங்கு விதிகளும் கொண்டு வரப்படமாட்டாது.
அவசரகாலத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, தடுப்பில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீது தற்போதைய சாதாரண சட்டங்களைக் கொண்டே நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
நடைமுறையிலுள்ள சாதாரண சட்டங்கள் ஊடாகக் குறித்த அரசியல் கைதிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள். விசாரணை செய்யப்படுவார்கள்.இவர்கள் தொடர்பான விசாரணை உட்பட நீதிமன்ற நடவடிக்கைகள் தமிழ் மொழியிலேயே நடைபெற்று வருகின்றன; இனியும் நடைபெறும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply