கூட்டணித் தர்மம் தமிழினத்தின் தலை விதியோடு விளையாடக்கூடாது

அமைச்சர்களான திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கடந்த வாரம் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்து நீண்ட காலத்துக்குப் பின் சிறுபான்மையினரிடம் ஓரளவு நம்பிக்கையைத் தோற்றுவிப்பதாக இருந்தது. அதிகாரப் பகிர்வின் மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்றும் வீதிகள் அமைப்பதும் பாலங்கள் கட்டுவதும் தமிழ் மக்களின் அபிலாசையைப் பூர்த்தி செய்யப்போவதில்லை என்றும் இவர்கள் கூறியது அரசாங்க உள்வட்ட அதிகார மையத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்குமோ தெரியாது.

அதிகாரப் பகிர்வின் அவசியம் பற்றிக் கூறியதோடு நிற்காமல் பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் எல்லாக் கட்சிகளும் பங்குபற்றவேண்டும் என்றும் மூன்று அமைச்சர்களும் வலியுறுத்தினார்கள். எதிரணிக் கட்சிகளின் நிலைப்பாடு எதுவாக இருப்பினும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் நோக்கம் பற்றிய வலுவான சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுகின்றது.

இலங்கையின் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு ஒரே சமயத்தில் முழுமை பெறுவது சாத்தியமில்லை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. படிப்படியான வளர்ச்சியின் மூலமே முழுமையான தீர்வை அடையலாம். இந்த நடைமுறையில் பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வே இன்றைய தேவை. ஆனால் அரசாங்க தரப்பிலிருந்து வெளியிடப்படும் கருத்துகள் இந்த நம்பிக்கையை ஏற்படுத்துவனவாக இல்லை.

பதின்மூன்றாவது திருத்தத்துக்கு அப்பால் சென்றால் அரசாங்கத்துக்கும் தேசிய வாதிகளுக்குமிடையே போராட்டம் இடம்பெறும் என்கிறார் கபினற் அமைச்சர் விமல் வீரவன்ஸ. தமிழ் மக்களுக்குத் தேவையான எல்லா உரிமைகளும் இப்போதைய அரசியலமைப்பிலேயே இருக்கின்றன என்கிறார் பாதுகாப்புச் செயலாளர். தீர்வின் ஒரு அம்சமாகப் பதின்மூன்றாவது திருத்தம் இருக்க வேண்டுமா என்பதைப் பாராளுமன்றத் தெரிவுக் குழுவே தீர்மானிக்கும் எனக் கூறினார் ஜனாதிபதி. இவ்வாறான கருத்துகள் காரணமாகவே,பாராளுமன்றத் தெரிவுக் குழு பற்றிய சந்தேகம் மக்களிடம் எழுகின்றது.

பதின்மூன்றாவது திருத்தத்துக்கு அப்பால் செல்லும் நோக்கம் இல்லையென்றால் பாராளுமன்றத் தெரிவுக் குழு எதற்காகத் தேவைப்படுகின்றது என்ற கேள்வி நியாயமானது தானே.

பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி உறுதியளித்திருப்பதால் மாகாண சபைக்குப் பொலிஸ் அதிகாரத்தைப் பெறுவதில் சிரமம் இருக்காது என்று அமைச்சர் டியூ கூறினார். மாகாண சபைகளுக்குப் பொலிஸ் அதிகாரம் தேவையில்லை என்று சில மாதங்களுக்கு முன் இவர்தான் சொன்னார். இப்போது மனமாற்றம் ஏற்பட்டிருப்பது போல் தெரிகின்றது. மாகாண சபைக்குப் பொலிஸ் அதிகாரம் இல்லை என்று இந்தியாவின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி திட்டவட்டமாகக் கூறியிருக்கும் நிலையில் பொலிஸ் அதிகாரம் பற்றி நம்பிக்கை எப்படி ஏற்படும்?

எவ்வாறாயினும் இடதுசாரி அமைச்சர்கள் இந்த அளவுக்காவது பகிரங்கமாகப் பேசுவதை வரவேற்கத்தான் வேண்டும். ஆனால் இதில் உறுதியாக நிற்பார்களா? பதினெட்டாவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாகவும் ஊடகவியலாளர் மகாநாடு கூட்டி இப்படித்தான் பேசினார்கள். அத்திருத்தத்தை ஏற்க முடியாது என்றார்கள்.ஆனால், பாராளுமன்றத்தில் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். கூட்டணித் தர்மத்தைப் பேணுவதற்காகவே அவ்வாறு வாக்களித்ததாக வாசுதேவ அண்மையில் விளக்கமளித்தார். அது எவ்வறாயினும், கூட்டணித் தர்மம் தமிழினத்தின் தலைவிதியோடு விளையாடாது என்று நம்புவோம்.

“அரசாங்கத்தை எதிர்த்தால் யூ.என்.பி.தலை தூக்கிவிடும்’ என்று அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இடதுசாரித் தலைவர்கள் அடிக்கடி கூறுவது வழக்கம்.யூ.என்.பி. பெரிய மேளங்கள் அரசாங்க பக்கத்தில் சமா வைக்கும் இன்றைய நிலையில் இந்தக் கதை எடுபடாது. இடதுசாரிக் கட்சிகள் அதிகாரப் பகிர்வு விடயத்தில் உறுதியாக நிற்க வேண்டும்.

வடக்கில் இடதுசாரிக் கட்சிகளுக்கும் கணிசமான செல்வாக்கு இருந்தது. அறுபதுகளின் முற்பகுதிவரை அந்தச் செல்வாக்கில் வீழ்ச்சி ஏற்படவில்லை. அறுபது மார்ச் பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இடதுசாரிக் கட்சிகளே இரண்டாவது இடத்தில் இருந்தன. தமிழரசுக் கட்சி 96,870 வாக்குகளையும் தமிழ்க் காங்கிரஸ் கட்சி 38,275 வாக்குகளையும் பெற்றன. இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியும் லங்கா சமசமாஜக் கட்சியும் கூட்டாக 40,363 வாக்குகள் பெற்றன. வடக்கில் இடதுசாரிக் கட்சிகளின் தேய்வு அறுபதுகளின் நடுப்பகுதியில் ஆரம்பமாகியதற்குத் தென்னிலங்கையின் இடதுசாரித் தலைவர்களே பொறுப்பாளிகள். வடக்கில் வீழ்ச்சி ஏற்பட்டாலும் தெற்கில் வளரலாம் என்ற நம்பிக்கையில் சிங்களத் தேசியவாதத்துடன் இழுபட்டுச் சென்றதால் நாடு முழுவதிலும் தேய்ந்துபோய் நிற்கும் கசப்பான வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு,அடிப்படைக் கொள்கையில் உறுதியாக நிற்கும் பட்சத்திலேயே வடக்கிலும் தெற்கிலும் இடதுசாரி அரசியல் மீண்டும் தலைதூக்க முடியும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply