பயங்கரவாதச் சட்டத்தில் சில புதிய ஏற்பாடுகள்
இலங்கையில் அவசரகாலச் சட்டம் நேற்று நள்ளிரவுடன் காலாவதியானாலும், அதில் இருந்த சில அதிகாரங்கள் பயங்கரவாதச் சட்டத்தின் சில விதிகளின் ஊடாக அமலுக்கு வந்துள்ளன.
இருந்தபோதிலும், அவசரகாலச் சட்டத்தை நீக்குவதற்காக இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மிகவும் காத்திரமானது என்று இலங்கை நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.
இலங்கை ஜனாதிபதியின் பரிந்துரையை அடுத்து அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவது அமலுக்கு வருகிறது.
இருந்த போதிலும், விடுதலைப் புலிகள் அமைப்பின் சந்தேக நபர்கள் என்ற வகையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் தடுத்து வைக்க வசதியாக பயங்கரவாதச் சட்டத்தில் சில புதிய விதிகளை இணைத்துள்ளதாக இலங்கை சட்ட மா அதிபரை ஆதாரம் காட்டி சில செய்திகள் வெளிவந்துள்ளன.
ஆனால், அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவதால், ஆயிரத்துக்கும் அதிகமான அரசியல் கைதிகள் விடுதலையாகும் வாய்ப்பு உள்ளது என்றும், பலமான ஆதாரங்கள் உள்ள ஏனையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையிலேயே பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.
அதேவேளை, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வந்திருக்கும் இந்த விதிகள் தற்காலிகமானவை என்றும் அவசரகால விளைவு விதிகள் என்று புதிய சட்டம் ஒன்று நாடாளுமன்றத்தினால் கொண்டுவரப்படும் வரை இந்த விதிகள் அமலில் இருக்கும் என்றும் சட்ட மா அதிபர் கூறியுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி பாதுகாப்பு வலயங்களை தொடர முடியுமா என்பது சந்தேகமே என்று கூறியுள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள், இருந்த போதிலும், புதிதாக வரவுள்ள சட்டம் குறித்து முழுமையாக அறிந்த பின்னரே அது பற்றி முழுமையான கருத்தைக் கூறமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply