அரசு கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையை முறிக்கவில்லை

தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையை அரசாங்கம் முறித்துக் கொள்ளவில்லை. பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் எந்நேரமும் தயாராகவே உள்ளது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் தொடர்ந்த அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தையை அரசாங்கம் ஒருபோதும் இடைநிறுத்தியதில்லை என குறிப்பிட்ட அமைச்சர் பிரேமஜயந்த, எவ்வேளையிலும் அப்பேச்சுவார்த்தை மீண்டும் தொடரலாம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநடொன்றில் ஐக்கிய தேசியக் கட்சியானது அரசு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையிலான பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டதால் ஏற்படும் விளைவுகள் சம்பந்தமாகவும் இந்நிலை நீடித்தால் அரசாங்கத்துக்கு எதிரான சர்வதேச அழுத்தம் அதிகரிப்பதற்கு அது காரணமாகலாம் எனவும் அக்கட்சியின் எம்.பி. ஜயலத் ஜயவர்தன தெரிவித்திருந்தார். இது தொடர்பில் நேற்று அமைச்சரின் கருத்தினைக் கேட்ட சந்தர்ப்பத்திலேயே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காணும் நோக்கில் அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்குமிடையில் தொடர்ச்சியாகப் பத்து சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

பத்தாவது பேச்சுவார்த்தை முடிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அரசாங்கத்துக்கு தமது தரப்பில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் அரச தரப்பின் நிலைப்பாட்டைக் கோரியிருந்தது. அரசாங்கம் அது தொடர்பில் தமது நிலைப்பாட்டினை அறிவிக்கும் பட்சத்தில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்குத் தாம் வரமுடியும் என்ற வேண்டுகோளை விடுத்திருந்தது.

பேச்சுவார்த்தையை தொடர்வது தொடர்பில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் நேற்று வினவிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசாங்கம் எந்நேரத்திலும் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடர தயாராகவுள்ளதென்பதையும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply