மர்ம மனிதர்களால் யாழ் மக்கள் அவதி: சுரேஷ் பிரேமச்சந்திரன்

இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டின் பல பகுதிகளிலும் சந்தேகத்திற்கு இடமானவர்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதனால் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கிரீஸ் பூதங்கள் என்று சொல்லப்படும் இந்த மர்ம நபர்கள் தொல்லை காரணமாக ஆண்கள் இரவு முழுதும் கண்விழித்திருக்க வேண்டியுள்ளது. இதனால் அவர்கள் பகல் வேளைகளில் வேலைக்குச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதாக அவர் கூறுகிறார்.

மக்கள் மாலை 6 மணியுடன் வீடுகளில் முடங்கிவிடுவதுடன், அச்சம் பீதி காரணமாக கிராமங்களில் ஒரே இடத்தில் பெண்களும் குழந்தைகளும் இரவைக் கழிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு பதட்டம் ஏற்பட்டிருப்பதாகவும் மக்கள் அச்சத்தில் உறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஊருக்குள் வருகின்ற மர்ம மனிதர்களைக் கண்டதும், அவர்களைப் பிடிப்பதறகாகப் பொதுமக்கள் ஒன்றுகூடி துரத்திச் செல்கின்றபோது, அங்கு வருகின்ற படையினர் மர்ம மனிதர்களைப் பிடிப்பதற்குப் பதிலாகப் பொதுமக்களையே கண்மூடித்தனமாகத் தாக்குவதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

மர்ம மனிதர்களுக்கும் இராணுவத்தினருக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாகப் பொதுமக்கள் தன்னிடம் தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த மர்ம மனிதர்கள் விவகாரம் குறித்து நாடாமன்றத்தில் விவாதிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்திருக்கின்றது.

இந்த விடயத்தில் பாராமுகமாக இருக்கின்ற அரசாங்கததின் போக்கு குறித்து சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக சுரேஷ் பிரமேச்சந்திரன் கூறினார்.

மர்ம மனிதர்களின் நடமாட்டம் என்பது கட்டுக்கதைகள் என்றும், மர்ம மனிதர்கள் என்று எவரும் கிடையாது என்றும் அரசாங்கம் கூறி வருகின்றது.

அத்துடன் இராணுவத்தினருக்கும் மர்ம மனிதர்களுக்கும் எந்திதமான சம்பந்தமும் கிடையாது என இராணுவம் கூறுகின்றது.

மர்ம மனிதனைக் காரணம் காட்டி மக்கள் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுப்பதை அனுமதிக்க முயாது என்றும் இராணுவம் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply