கூட்டமைப்புடன் பேச்சுகள் தொடர அரசு தயாரென்பது வெறும் பம்மாத்து

தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறவே அரசு இவ்வாறு கதையளக்கப்படுகின்றது. கூட்டமைப்புடன் பேசுவதற்கான நல்லெண்ணம் தொடர எந்நேரமும் அரசு தயார் என்பது எல்லாம் வெறும் பம்மாத்தாகும்.

முன்வைத்திருக்கும் மூன்று நிபந்தனைகளுக்கு அரசாங்கம் பதிலை முன் வைத்தாலேயே அதனுடனான பேச்சுக் குறித்து பரிசீலிக்க முடியுமென கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தேர்தல் சமயம் என்பதால் இரு கட்சியினரும் பேச்சுக் குறித்து பேசுகின்றனரே தவிர தமிழ் மக்கள் பிரச்சினைக்கான தீர்வு குறித்து உளப்பூர்வமான சிந்தனையில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சினை அரசாங்கம் முறித்துக் கொள்ளவில்லையெனவும் பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் எந்நேரமும் தயாராகவுள்ளதாகவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்த கருத்துத் தொடர்பில் அவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

அரசாங்கத்துக்கும் கூட்டமைப்புக்குமிடையிலான பேச்சுத் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினரும் ஐக்கிய தேசியக் கட்சியினரும் தற்போது பேசுவதற்கு தேர்தலே காரணமாகும். தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்கே பேச்சு முறியவில்லையெனவும் பேச்சு இடைநிறுத்துவது நீடித்தால் சர்வதேச அழுத்தம் அரசுக்கு அதிகரிக்குமெனவும் தெரிவிக்கின்றனர். உண்மையில் தமிழ் மக்கள் தீர்வு தொடர்பில் இரு கட்சியினருக்கும் மனப்பூர்வமான அக்கறையோ சிந்தனையோ இல்லை.

எம்மைப் பொறுத்தவரை அரசியல் தீர்வுக்காக நாம் முன் வைத்த யோசனையில் ஆட்சிக்கட்டமைப்பு, மத்திய மற்றும் அதிகாரப் பகிர்வுக்குரிய பிரிவுகளுக்கிடையே பங்கிடப்படும் விதம் மற்றும் வரி மற்றும் நிதி அதிகாரங்கள் குறித்த மூன்று விடயங்கள் குறித்து பதிலை அரசாங்கம் முன்வைத்தால் பேச்சு குறித்து பரிசீலிக்க முடியும்.

தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறவே இவ்வாறு கதையளக்கப்படுகின்றது. நல்லெண்ணம் தொடர எந்நேரமும் தயார் என்பது எல்லாம் வெறும் பம்மாத்தாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply