இலங்கை தனிமைப்படுத்தப்பட்டால் பெரும் ஆபத்து: ஐக்கிய தேசியக் கட்சி
சர்வதேச நாடுகள் முன்வைத்துள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு ஜெனீவா மாநாட்டில் இலங்கை பொறுப்புக்கூற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இம் மாநாட்டில் இலங்கை தனிமைப்படுத்தப்படுமாயின் எதிர்காலத்தில் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது.
இலங்கைக்கு எதிரான ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கை மற்றும் சனல் 4 வீடியோக் காட்சிகள் என்பன நாட்டிற்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு வலுசேர்த்து விடும். எனவே அரசாங்கம் தமது பிரதிநிதிகளை தயார் நிலையில் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி கருத்துத் தெவிக்கையில், ஜெனிவாவில் எதிர்வரும் 12ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை பேரவையின் மாநாடு நடைபெறவுள்ளது. இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சர்வதேசம் சுமத்தி வருகின்றது. இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆக்கபூர்வமாக அரசாங்கம் செயற்படவில்லை. இராஜதந்திர ரீதியில் உரிய முறையில் அணுகவும் இல்லை.
குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானவையாகும்.
இதற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையிலே சனல் 4 தொலைக்காட்சி வீடியோக்களையும் வெளியிட்டது. இந்த வீடியோ காட்சியானது மேற்குலக நாடுகளில் மாத்திரமல்லாது இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகளிலும் ஒளிபரப்பப்பட்டது.
எனவே சனல் 4 வீடியோவில் காணப்படும் போர் குற்றச்சாட்டுக்களும் சாட்சியங்களும் நாட்டிற்கு அபகீர்த்தியையே ஏற்படுத்தியுள்ளன. இவ்வாறான பாரியளவிலான விமர்சனப் பார்வையை இன்று இலங்கை மீது சர்வதேச நாடுகள் கொண்டுள்ளன. ஆகவே தான் ஜெனிவா மனித உரிமை பேரவை மாநாட்டில் இலங்கை விடயம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் இலங்கையர் என்ற வகையில் நாட்டை பாதுகாக்க வேண்டியது நம் அனைவனதும் கடமையாகும். மாநாட்டில் இலங்கைக்கு எதிராக சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகளுக்கு பொறுப் புடன் பதில் கூறப்பட வேண்டும். அரசாங்கம் முரண்பட்டு பிரச்சினைகளை வளர்த்துக் கொள்ளக்கூடாது எனவும் திஸ்ஸ அத்தநாயக்கா தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply