மர்ம மனிதர்களின் அடாவடித்தனத்தை நிறுத்தக்கோரி உண்ணாவிரதம்
யாழ். குடாநாடு உட்பட நாட்டின் பல பகுதிகளில் இடம் பெற்று வரும் மர்ம மனிதர்களின் அடாவடித்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கோரி எதிர்வரும் 10 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பா ணத்தில் உண்ணாவிரதப் போராட்டமொன்று இடம்பெறவுள்ளது. இதற்கான தீர்மானம் நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி தலைமையில் நடைபெற்ற கூட்டமொன்றின்போதே எடுக்கப்பட்டுள்ளது.
குடாநாட்டில் மர்ம மனிதர்களின் ஊடுருவல் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. மர்ம மனிதர்களின் அடாவடித் தனத்தினால் மக்கள் நிம்மதி இழந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
மர்ம மனிதர்களை பொதுமக்கள் பிடிக்கச் செல்லும் போது ஏற்படும் முரண்பாடுகளை அடுத்து படையினர் பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். எனவே மர்ம மனிதர்களின் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் மர்ம மனிதர்களின் விவகாரத்தினால் எழுந்துள்ள நிலை குறித்து விரிவாக ஆராயப்பட்டது. மர்ம மனிதர்களின் நடமாட்டம் மற்றும் நடவடிக்கைகளினால் குடாநாட்டில் குறிப்பாக பெண்கள் உடல், உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். மர்ம மனிதர்களை துரத்திப் பிடிக்க முயன்ற பொதுமக்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதனால், குடாநாட்டில் மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்வதாகவும் இதனைத் தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு பலரும் சுட்டிக்காட்டினர்.
இதனை அடுத்து குடாநாட்டிலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மர்ம மனிதர்களின் விவகாரத்தால் ஏற்பட்டுள்ள அச்சநிலையைப் போக்குவதற்கு அரசாங்கம் காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். மர்ம மனிதர்களின் செயற்பாட்டிற்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுப்பது என்றும் இந்தச் சந்திப்பில் யாழ்ப்பாண சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சமயத் தலைவர்கள், புத்திஜீவிகள், அரசியல்வாதிகள், என்போரை உள்ளடக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள பாராளுமன்ற கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்குகிழக்கில் குறிப்பாக குடாநாட்டின் இன்றைய நிலைமை தொடர்பில் பாராளுமன்றத்தின் கவனத்தை ஈர்ப்பது என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்துவது எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களான சுரேஷ்பிரேமச்ந்திரன், ஈ. சரவணபவன், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் எம்.பி.க்களான எம். கே. சிவாஜிலிங்கம், என். ஸ்ரீகாந்தா, தமிழரசுக்கட்சியின் நிர்வாக செயலாளர் எஸ். குலநாயகம், சூழலியலாளர் பொ. ஐங்கரநேசன், மற்றும் மதத் தலைவர்கள், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply