தமிழ் மக்கள் இழந்து வரும் சந்தர்ப்பங்கள்
தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பாக ஒரு அடிப்படையான புரிந்துணர்வுக்கு வரமுடியாதலையாகத்தான் இருக்கின்றன.
இந்த பரிபக்குவக் குறைவு அண்மையில் டெல்லியிலும் எதிரொலித்தது.
மனித உரிமைகள் , உலகபொருளாதார வளர்ச்சிக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பின் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சுதர்சன நாச்சியப்பன் இலங்கை வடக்கு-கிழக்கு தமிழ் கட்சிகளுக்கு அழைப்பொன்றை அனுப்பியிருந்தார்.
ஆகஸ்ட் 23ம் , 24ம் திகதிகளில் டெல்லியில் ‘துயரும் தீர்வும’ என்ற தலைப்பின் கீழ் கலந்துரையாடல் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. ஆகஸ்ட 25ம் திகதி இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை விவாதிக்கப்படவிருந்தது.
24ம் திகதி மாலை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்த-குறிப்பாக தமிழ் நாடு 30 நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடும் வாய்ப்பும் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழ்கட்சிகள் 2 பகல் பொழுதுகள் அமர்ந்து பேசியும் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பாக ஒரு உடன்பாட்டிற்கு வரமுடியவில்லை.
உயர்பாதுகாப்பு வலயங்கள் மக்களின் மீள் குடியேற்றம் , இராணுவ மயமாக்கம், திட்டமிட்ட குடியேற்றம் ,மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஒரு கருத்தொருமைப்பாட்டிற்கு இழுபறிகளுடன் வர முடிந்தது. இனப்பிரச்சனை தீர்வு தொடர்பாக அவ்வாறு வரமுடியவில்லை.
இந்தியாவும், உலகமும், இலங்கையில் அமைதியையும் சமாதானத்தையும் விரும்பும் கணிசமான மக்களும் நியாயம் என்று சொல்லக் கூடிய ஒரு தீர்வை கருத்தொருமைப்பாட்டுடன் முன்வைக்க முடியவில்லை.
இது மிகவும் அவலமானது.
சுயநிர்ணய உரிமை, தமிழ் தேசம், தனித்துவமான தேசம் பற்றிய கருத்துக்கள் கலந்துகொண்ட கட்சியினரில் ஒரே ஒரு கட்சியினரால் ஆரவாரமாக முன்வைக்கப்பட்டது. இந்த சொற்பதங்கள் அல்லது அவற்றின் நியாயப்பாடுகள் அல்ல இங்கு பிரச்சனை.
இன்றைய நிலையில் சொற்சிலம்பங்கள் பிரச்சனையைத் தீர்க்க உதவுமா என்பது தான் பிரச்சனை.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் கலந்து கொண்ட திரு கஜன் பொன்னம்பலம் இதனைத் திரும்பத் திரும்ப உச்சரித்துக்கொண்டிருந்தார். இது அதிதீவிர நிலைப்பாடு எனத் தெரிந்து கொண்டும் இந்த நிலைப்பாட்டிற்கு மாற்றான யதார்த்தமான நிலைப்பாடொன்றிற்கு மற்றைய கட்சியினருடன் சேர்ந்து முன்வருவதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்தது.
இறுதியாக இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் ஒரு நியாயமான நிலைப்பாட்டினை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துரைப்பதற்கான சந்தர்ப்பம் இழக்கப்பட்டது. நாம் நியாயமானதும், முக்கியமானதுமான சில விடயங்களை வலியுறுத்தியிருக்கமுடியும்.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் தலைவர்களிடம் அறிய முயன்றது நறுக்குதெறிக்க நச்சென்று சொல்லக் கூடிய விடயங்களையே. ஆனால் கோவிலில் கந்தபுராண பாராயணம் செய்வதைப்போன்ற ஆங்கிலேயர் காலம் தொடக்கம் இன்று வரையான வரலாற்றையோ, அல்லது தமிழீழத்திற்கு நிகரான ஏற்பாட்டையோ அல்ல.
இலங்கையின் அரசியல் முறைமையில் தமிழர்கள், முஸ்லிம்கள், மலையக மக்கள் முறையான பங்குதாரர்கள் ஆக்கபடும் விதமான அரசியலமைப்புச் சீர்திருத்தம் தமிழ் சிங்கள் மக்கள் சரிநிகர் சமானமாக ஐக்கிய இலங்கைக்குள் வாழும் நிலை ஏற்படுத்தப்படுதல்,
நிதி அதிகாரம், சட்டம் ஒழுங்கு, நிலப்பயன்பாடு அதிகாரங்கள் பகிரப்படுதல், இவ்வாறு விடயங்களை நாம் முன்வைப்பதில் நியாயம் இருக்கிறது. இந்தியாவிலுள்ள அதிகாரப்பகிர்வு முறைக்கு இசைவு பட்டதும் கூட.
தமிழ் தேசிய கூட்டமைப்பு திரு கஜன் பொன்னம்பலத்தின் உரத்த அதிதீவிரமான குரலுக்கு முன்னால் ஏனோ மௌனமாகிப்போனார்கள். பிரச்சனை தீர்க்கபட்டவேண்டிய இடம் இலங்கை . அதற்கு இந்தியாவின் அனுசரணை தேவை. பிரச்சினைக்கு தீர்வுகாணவேண்டிய, முன்முயற்சி எடுக்கவேண்டிய பிரதான பிரிவினர் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள்.
புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் உள்நாட்டில் பிரச்சனை தீர்க்கப்படுவதற்கு ஒத்துழைக்க வேண்டும். அதை விடுத்து தமது தேசியவாத நாடு கடந்த கனவுகளை உள்ளூர் மக்கள் மீது திணிக்க கூடாது. ஜனநாயகபூர்வமாக நாட்டு நிலைமையை, எமது மக்களின்நிலையை கருத்திற்கெடுத்ததாக ஆக்க பூர்வமானவையாக அவர்களின் பங்களிப்பு அமைய வேண்டும்.
சமூகப் பொறுப்பில்லாத செயற்பாடுகளால் ஒரு ஆக்க பூர்வமான வரலாற்று பாத்திரத்தை வகிக்கவேண்டிய சந்தர்ப்பம் இழக்கப்பட்டது. தற்போது கிறிஸ்பூதப் பீதியூட்டும்- சமூகத்தையே மனநோயாளியாக்கிவிடும், பாதுகாப்பற்ற, நிம்மதியற்ற, நிராதரவான, நிர்க்கதியான நிலையினால் மக்கள் அல்லோலகல்லப்படுகிறார்கள். மரத்தால் விழுந்தவரை மாடேறி மிதித்த அவலத்தை விஞ்சிய நிலை தான் மக்களின் வாழ்வு. அநியாயங்களை தட்டிக்கேட்கும் ஐக்கியப்பட்ட வீரியம் மிக்க தலைமைத்துவத்தின் அவசியம் உணரப்படுகிறது
ஆக்கபூர்வமாக ஒரு தீர்வை, ஐக்கிய இலங்கைக்குள் தமிழ்மக்கள் தமது பகுதிகளில் சுயநிர்வாகம் செய்யக்கூடிய சுயாட்சி முறையொன்றை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளில் தீவிர ஈடுபாடு செலுத்துதல் இன்று தமிழ் சமூகத்தின் இருப்புடன் தொடர்புபட்டது. நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் இதனை உணாத்துகின்றன.
மக்களின் எதிர்காலத்துடன் விளையாடுவது தார்மீக உணர்வு கொண்ட தலைமைத்துவங்கள் செய்யக் கூடிய காரியமாகாது. இதில் எமக்கு பட்டறிவு இருக்கவேண்டும்.
இலங்கையில் ஜனநாயகம் , சமத்துவமான இன நல்லுறவு, பல்லினப்பாங்கு, மனித உரிமைகள் மீது அக்கறை கொண்ட அனைத்து சத்திகளும் மற்றைய பேதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றிணைந்து செயற்படுவதே தமிழர்களின் மீட்சிக்கும், எண்ணிக்கையில் சிறுபான்மையான தேசிய சமூகங்களின் மீட்சிக்கும் , ஒட்டுமொத்த இலங்கையின் மீட்சிக்கும் உதவிகரமாக அமையும்.
தி.ஸ்ரீதரன்
பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலைமுன்னணி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply