சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிர்ப்பு
இலங்கை அரசாங்கத்தின் வளர்ச்சித் திட்டங்கள் காரணமாக தமது வாழ்வாதாரங்களை விட்டு வெளியேற நேர்வதாகக் கூறி நாட்டின் மீனவக் குடும்பங்களும் விவசாயிகளும் தொழிற்சங்க பிரதிநிதிகளும் தலைநகர் கொழும்பில் ஆத்திரம் மிக்க ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
குறிப்பாக அரசாங்கம் புதிதாக முன்னெடுக்கின்ற பெரிய சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களை இம்மக்கள் எதிர்க்கின்றனர்.
‘மகிந்த சிந்தனை’ என்று சொல்லப்படுகின்ற ஜனாதிபதி பெயரிலான அபிவிருத்தித் திட்டங்களின் கீழ் கட்டப்படுகின்ற கட்டமைப்பு பணிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் விமர்சித்திருந்தனர்.
நாடெங்கிலுமே சுற்றுலா மேம்பாடு என்ற பெயரில் நிலங்களை அதன் நியாயபபூர்வ உரிமையாளர்களிடம் இருந்து அரசாங்கம் அபகரித்துவருகிறது என்று அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.
நாட்டின் மேற்குக் கரையை ஒட்டியுள்ளாத கன்னித் தன்மை குலையாத சிறு தீவுக் கூட்டம் ஒன்றை அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடுவதையும், அங்கு அவை 17 சொகுசு விடுதிகளைக் கட்டவிருப்பதையும் தேசிய மீனவர் ஒற்றுமை இயக்கம் என்ற அமைப்பைச் சேர்ந்த ஹெர்மன் குமார சுட்டிக்காட்டினார்.
தாங்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த நிலங்களை மீனவர்களும் விவசாயிகளும் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஆனால் தனது சுற்றுலா வளர்ச்சிக் கொள்கை சரிதான் என அரசு வாதிடுகிறது.
யுத்தத்துக்கு பிந்தைய நாட்டின் அபிவிருத்ததித் திட்டங்களில் சுற்றுலாத் துறை மிகவும் முக்கியமான இடம் வகிப்பதாக அரசாங்கம் கூறுகிறது.
இலங்கைக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 2016 ஆம் ஆண்டுக்குள் ஐந்து மடங்காக அதாவது இருபத்து ஐந்து லட்சமாக உயர்த்த அரசாங்கம் விரும்புகிறது.
இலங்கையின் இயற்கை அழகை வெளிநாடுகளில் இருந்து மக்கள் வந்து ரசிக்க வேண்டுமானால், அதிகமான விடுதிகள் தேவைதான் என்கிறார் இலங்கை சுற்றுலாத்துறையின் தலைவர் நாளக கொடஹேவா கூறுகிறார்.
நாட்டின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு சுற்றுலா மிகவும் அவசியமானதுதான்.
ஆனால் அரசாங்கத்தின் திட்டங்களை உள்ளூர் சமூகங்கள் சொல்வதுபோல அவர்களது வாழ்வாதாரத்தை பாதிக்காமல் முன்னெடுக்க முடியுமா என்பதுதான் இப்போதுள்ள கேள்வி.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply