மக்கள் விடுதலை முன்னணி தமிழ் மக்களுக்கு எதுவும் கொடுப்பதற்கு எதிரான கட்சியல்ல: ரில்வின் சில்வா

மக்கள் விடுதலை முன்னணி தமிழ் மக்களுக்கு எதுவும் கொடுப்பதற்கு எதிரான கட்சியல்ல. வடக்கில் உருவாக்கப்படும் இராணுவ ஆட்சியின் பலாத்காரத்திற்கு எதிராகவும் ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்காகவும் போராட வேண்டும். இதனையே வடக்கில் மக்கள் விடுதலை முன்னணி தலைமையேற்று நடத்திவருகின்றது என தோழர் ரில்வின் சில்வா தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணி தமிழில் வெளியிடும் கட்சிப் பத்திரிகையான செஞ்சக்திக்கு அவரளித்த பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இப்பேட்டியில் காணாமல் போனவர்களின் பிரச்சினை, கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்து கொள்வதற்காக, இடம்பெயர்ந்தவர்களின் மீள் குடியேற்றம், அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக மக்கள் விடுதலை முன்னணி எவ்வாறாக அதிகாரத்தில் உள்ளவர்களிடம் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது என்பது பற்றி விளக்கியதுடன் சமகால அரசியல் நெருக்கடியில் மக்கள் எடுக்கவேண்டிய நடவடிக்கை என்ன என்பது பற்றியும் விளக்கமளித்தார்.அவருடனான பேட்டியின் முழுமை வருமாறு

செஞ்சக்தி:
தற்போது உங்கள் கட்சி வடக்கு மற்றும் கிழக்கு பிரதேங்களில் மிகத் துரிதமான அரசி யல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிகிறது. இது எவ்வளவு தூரத்திற்கு வெற்றியளித்துள்ளது?

தோழர் ரில்வின் சில்வா: இப்போது மக்கள் விடுதலை முன்னணி வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் எமது அரசியல் நடவடிக்கைகளை நேரடியாகவும் துரிதமாகவும் முன்னெடுத்து வருகின்றது. விஷேடமாக வடக்கில் யுத்தம் முடிவுற்றதன் பின்னரே எமது அரசியலை முன்னெடுப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. நாம் இதற்கு முன்னர் 1983ம் ஆண்டு வரையில் வடக்கு கிழக்கில் எமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். ஆனால் அங்கு யுத்தம் தோன்றி அங்கு எமக்கெதிரான அச்சுறுத்தலகள் தோன்றியதன் காரணமாகவும் 1983ல் மக்கள் விடுதலை முன்னணி தடை செய்யப்பட்டதன் காரணமாகவும் அந் நடவடிக்கைகள் பிற்காலத்தில் தடைப்பட்டன.

இப்போது நாங்கள் மீண்டும் வடக்கில் அரசியல் பணிகளை தொடர ஆரம்பித்துள்ளோம். இப்போதும் அரசாங்கத்தினதும் பாதுகாப்பு படைகளினதும் அச்சுறுத்தலின் மத்தியிலும் எமது நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றோம்.

வடக்கு மக்கள் மத்தியில் நிலவும் சந்தேகம் நம்பிக்கையீனம் மற்றும் தவறான புரிதலின் காரணமாக தோற்றுவிக்கப்பட்டுள்ள நிலைமைகளை மாற்றியமைத்து எமது அரசியலை வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் ஓரளவுக்கேனும் கொண்டுச் செல்வதில் நாம் வெற்றி கண்டுள்ளோம்.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வடக்கில் சில உள்ளூராட்சி சபைகளுக்கு வேட்பாளர்களை நியமித்து தேர்தலில் போட்டியிட்டதே எமக்கு கிடைத்த பெரு வெற்றியாகும். அதேபோன்று வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு நாம் அவர்களோடு இணைந்து செய்யும் போராட்டமும் ஆர்பாட்டங்களும் பல இடையூறுகளுக்கு மத்தியில் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.

இடம்பெயர்ந்தவர்களை மீள் குடியேற்றல், அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுதல், காணமல்போனவர்கள் பற்றிய பிரச்சினை மற்றும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளைஞர் யுவதிகளின் பிரச்சினை, என பலதரப்பட்ட பிரதான பிரச்சினைகளுக்காக அவர்களுடன் வடக்கு கிழக்கு மக்களுடன் இணைந்து செயற்படுவதற்கும் போராடுவதற்கும் எம்மால் முடியுமாயிருக்கிறது.

இவற்றுக்கு மேலாக பல தடைகள் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அப் பிரதேச மக்கள் எம்முடன் கைகோர்த்துக் கொண்டிருப்பதை குறிப்பிட்டேயாக வேண்டும்.

செஞ்சக்தி: வடபகுதி உள்ளுராட்சி சபைத் தேர்தலில் உங்கள் கட்சிக்கு நடந்தது என்ன?

தோழர் ரில்வின் சில்வா: அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வடக்கில் நாம் சில சபைகளில் போட்டியிட்டோம். அது 30 வருடங்களுக்கு பின்னரான நிலையில் நாம் அங்கு போட்டியிட்ட நிலைமையாகும் அப்படியான சூழலில் சில சபைகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தியமையானது நாம் பெற்ற மிகப் பெரிய வெற்றியாகும். எமக்கு கிடைத்த வாக்குகள் மிகவும் குறைவானதுதான். ஆனால் இந்த இடத்தில் வடக்கு மக்கள் தமது பாரம்பரிய தமிழ் அரசியல் கட்சிகளிருந்து மீண்டு பல்வேறு அச்சுறுத்தல்கள், தடைகள் ஏமாற்றுதலுக்கு மத்தியிலும் கூட மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களித்தமையானது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

நாம் வடக்கில் தேர்தலில் போட்டியிட்டது அங்குள்ள சபைகளை கைபற்றுவதற்கல்ல. அப்படியான வாய்ப்புகள் எமக்கு இருக்கவில்லை. மக்களிடம் எமது அரசியலை கொண்டுசென்று மக்களை புரிந்துக் கொள்வதே எமது நோக்கமாக இருந்தது.

தற்போதைய முதலாளித்துவத்திற்கும் முதலாளித்துவத்தினால் உருவாக்கப் பட்டிருக்கும் இனவாத அரசியலுக்கும் எதிராக மாற்று சமூக முறையை பற்றி, சோஷலிசம் பற்றி, தேசிய ஒற்றுமை பற்றி கருத்தியலை கொண்டு செல்வதே எமது நோக்கமாக இருந்தது. ஆரம்ப கட்டமாக நாம் இதில் வெற்றியடைந்துள்ளோம் என்றே கருதுகின்றோம்.

செஞ்சக்தி: உங்களது கட்சியின் ஸ்தாபகர் தோழர் ரோஹண விஜேவீர அவர்கள் இல்லாது போனதுடன் தமிழ் மக்களின் பிரச்சினைத் தொடர்பான கொள்கைகளை மாற்றி இனவாத திசையில் கட்சி வீழ்ந்து விட்டதென தமிழ் மக்களிடையே குற்றச்சட்டு நிலவுகிறது. அதன் உண்மைத் தன்மையென்ன?

தோழர் டில்வின் சில்வா: நாம் ஒருபோதும் தேசியப் பிரச்சினைத் தொடர்பாக எமது நிலைபாட்டை மாற்றவில்லை. மக்கள் விடுதலை முன்னணி கொள்கைரீதியாக இனவாத கட்சியல்ல. நாம் எந்தவொரு இனவாதத்தையும் ஏற்றுக்கொள்வதில்லை. நமது நாட்டில் அனைத்து தேசிய இனங்களுக்குரிய பாட்டாளி வர்க்கத்தை ஒன்றிணைத்து, அமைப்பு ரீதியாக அணிதிரட்டி தற்போதைய முதலாளித்துவ முறையை தோற்கடிப்பதையும் பதிய சோஷலிச சமூகத்தை நிர்மணிப்பதையும் பிரதான நோக்கமாகக் கொண்டே நாம் உழைக்கின்றோம். தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமைக்காக உருவாக்கப்பட்ட கட்சியாகவே மக்கள் விடுதலை முன்னணி நிர்மாணிக்கப்பட்டது. ஆனால் எமது கட்சியின் எதிரிகளும் பல்வேறு இனவாத பிரிவினரும் எமக்கு கடந்த காலத்தில் இனவாத முத்திரையை குத்துவதற்கு முயற்சித்தனர்.

தோழர் ரோஹண விஜேவீரவைக் கூட ஒரு சிலர் சிங்கள இனவாதத் தலைவரென்று கூறிவந்தனர்.
அவர்கள் அதை நன்கு தெரிந்துக் கொண்டே செய்தனர். அவர்கள் வர்க்கத்தின் ஒற்றுமைக்கு அச்சத்தின் காரணமாகவே அப்படி செய்தனர். தமிழ் இனவாத பிரிவினர் எம்மை சிங்கள இனவாதிகளென்று குற்றம் சுமத்தும்போது தெற்கில் சிங்கள இனவாதிகள் எம்மை தமிழ் இனவாதிகளுக்கு உதவி செய்கின்றோமென பரப்புரை செய்தனர். ஆனால் நமது நாட்டில் யுத்தம் உக்கிரமடைந்த போதிலும் பொதுவான பிரச்சினைகளிலும் நாம் இனவாதத்திற்கு எதிராகவே செயற்பட்டிருக்கின்றோம்.

எப்படியாயினும் வடக்கில் பிரிவினைவாத அரசியல் பலம்பெற்று அது ஆயுதப் போராட்டமாக மாறி அதன் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த சந்தர்ப்பத்தில், ஏகாதிபத்தியவாதிகளும் இந்தியாவும் இலங்கையை பிரித்து துண்டாடுவதற்கு அப் போராட்டத்தை பயன்படுத்திக் கொண்டிருந்தனர். அச் சந்தர்ப்பத்தில் நாடு பிரிவதினால் ஏற்படவிருந்த பாரிய ஆபத்தான நிலைமையினைத் தடுப்பதற்கான காரணமாக நாம் செயற்பட வேண்டியிருந்தது. அதற்காக பல தந்திரேபாயங்களை பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் நேர்ந்தது.

அது மிகவும் சிக்கலானதும் நெருக்கடியானதுமான நிலமையாகும். அந்த நெருக்கடியான நிலமைகளின்போது நடவடிக்கைகளை எடுக்கும்போது, சில குறைபாடுகள் ஏற்பட்டிருப்தையும், சில வரையறைகள் பாதுகாக்கப் படவில்லையென்பதையும் நாம் ஏற்றுக் கொள்கின்றோம்.

அது பற்றி இப்போது நாம் கடுமையாக சிந்திக்கின்றோம்.

ஆனால் மக்கள் விடுதலை முன்னணி கொள்கை ரீதியாகவும் அடிபடை ரீதியாகவும் சகலவிதமான இனவாதத்தையும் நிராகரிக்கின்ற, உண்மையான தேசிய ஒற்றுமைக்காக போராடுகின்ற, சர்வதேசியத்தை ஏற்றுக் கொள்கின்ற வர்க்க ஐக்கித்தின் மூலம் தற்போதைய அநீதி நிறைந்த சமூகத்தை தோற்கடித்து புதிய சமூகத்தை நிர்மாணிப்பதற்காக போராடுகின்ற கட்சியென்பதை குறிப்பிடாக வேண்டும்.

செஞ்சக்தி: தமிழ் மக்கள் எதிர் கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அதிகாரப் பகிர்வே தீர்வாகுமென்று சிலர் நம்புகின்றனர். ஆனால் ஆரம்பம் முதல் உங்களது கட்சி இதற்கு எதிராக செயற்படுகிறது. ஏன் நீங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதை விரும்ப விலலையா?

தோழர் ரில்வின் சில்வா: நமது நாட்டில் உள்ள இந்த பின்தங்கிய வங்குரோத்தடைந்த முதலாளித்துவ முறையினாலும் ஏகாதிபத்தியத்தின் சூரையாடல்களினாலும் தமிழ் மக்களைப் போன்றே சிங்கள, முஸ்லிம் மக்களும் கஷ்டபடுகின்றனர். அதனால் சகல மக்களும் படும் கஷ்டங்களுக்கான காரணம் இந்த முதலாளித்துவ முறையாகும். அத்துடன் அதிலிருப்பது சுரண்டலும் அநீதியுமாகும். முதலாளித்துவம் தோற்றுவித்திருக்கும் சமத்துவமின்மையாலும் எமது மக்கள் இன்னல்களை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர்.

அவைகளின் மத்தியில் தமிழ் மக்களுக்கே உரிய விஷேடமான ஒடுக்குமுறைகள் உள்ளன. அந்த விசேட ஒடுக்குமுறைகள் அனைத்தும் இந்த முதலாளித்துவத்தின் தன்மையால் உருவாக்கப்பட்ட ஒடுக்குமுறைகளாகும். அதனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இருக்கும் உண்மையான விஞ்ஞான ரீதியான தீர்வு பிரிந்து போவதோ அல்லது அத்திசையை நோக்கிய முடிவுகளை எடுக்கும் நடவடிக்கைகள் அல்ல.

நாடுகளை பிரித்து நலிவடையச் செய்தல், அதன் ஊடாக வர்க்கத்தை பிரித்தல் என்பது ஏகாதிபத்தியத்தினதும், முதலாளித்துவ வர்க்கத்தினதும் நோக்கமாகும். அதில் தமிழ் பாட்டாளி வர்க்கத்திற்கோ அல்லது முஸ்லிம், சிங்கள பாட்டாளி வர்க்கத்திற்கோ எதுவுமே கிடைக்கப் போவதில்லை.

நாம் அதிகாரப் பகிர்வினை தவறென கூறுவது இதன் அடிப்படையிலாகும். இன்று உண்மையில் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும் தேவை யாருக்கு இருக்கிறது?

ஏகாதிபத்தியவாதிகளும், இந்திய ஆட்சியாளர்களும், தமிழ் முதலாளித்துவ தலைவர்களுகல்லவா ஆதரவளிக்கின்றனர்?

சதாரண தமிழ் மக்களுக்கு தேவைபடுவது அதிகாரத்தை பகிர்வது இல்லையல்லவா?

அதிகாரப் பகிர்வின்போது அவ்அதிகாரம் தமிழ் முதலாளி வர்க்கத்திற்கே நன்மையளிக்குமே தவிர அதன் மூலமாக தமிழ் மக்களுக்கு நன்மையளிக்காது.இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் மக்களுக்குக் கிட்டப்போவது ஒன்றுமேயில்லை.

தமிழ் நாட்டில் முதலமைச்சர் தமிழர் என்பதால் அங்கு வாழும் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கும் நன்மைகள் என்ன?

ஒன்றுமேயில்லை.

அதனால் அதிகாரப்பகிர்விற்கான கோரிக்கை ஏகாதிபத்தியத்தினதும் முதலாளித்துவத்தினதும் தேவைகளே தவிர பாட்டாளி வர்க்கத்தின் தேவையாக இருக்க கூடாது.

மக்கள் விடுதலை முன்னணி தமிழ் மக்களுக்கு எதுவும் கொடுப்பதற்கு எதிரான கட்சியல்ல. தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டுமென்றும் அவர்களுக்கான சம வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமென்றும் நாம் கூறுகின்றோம்.

ஆனாலும் அதிகாரத்தை பகிர்வதன் மூலம் சாதாரண தமிழ் மக்களுக்கு எதுவுமே கிடைக்கப் போவதில்லை என்பதினால் அது தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது.

அது தவறானது. அதற்குப் பதிலாக நாம் உண்மையான தீர்விற்காக போராட வேண்டும். தமிழ் முதலாளி வர்க்கத்தின் உயர் குடிகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள பொது மக்கள் இடமளிக்கக் கூடாது.

சிங்கள, முஸ்லிம் தலைவர்களைப் போன்றே தமிழ் உயர்குடி வர்க்கமும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் காண்பித்து தமக்கு சலுகைகள் பதவிகள், அமைச்சுப் பதவிகள், முதலமைச்சர் பதவிகளை பெற்றுக் கொண்டு அவர்கள் சாதாரண தமிழ் மக்களின் பிரச்சினைளை பொருட்படுத்தவில்லை என்பதினை நாம் மறந்துவிடக் கூடாது. அதன் காரணமாகவே அதிகாரப் பகிர்வு தவறான விடையென நாம் தொடர்ந்தும் கூறி வருகின்றோம்.

செஞ்சக்தி: அப்படியானால் இந்தப் பிரச்சினைக்கு மக்கள் விடுதலை முன்னணி முன்மொழியும் தீர்வு என்ன?

தோழர் ரில்வின் சில்வா: இலங்கையில் தேசிய பிரச்சினை தோன்றுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அது தனியாக விபரிக்கக் வேண்டிய கலந்துரையாடலாகும். மிகவும் சரளமாக எடுத்துக் கொண்டாலும் இந்த சகல பிரச்சினைகளுக்கும் காரணம் நமது நாட்டிலிருக்கும் நலிவடைந்த வங்குரோத்தடைந்த முதலாளித்துவ ஆட்சியாகும்.

முதலாளித்துவ வளர்ச்சியின் பாகுபாட்டின் காரணமாக மக்களிடையே சமத்துவமின்மை தோன்றியுள்ளது. அதேபோன்று அதிகாரத்திற்காக சகல முதலாளித்துவ தலைவர்களும் இனவாதத்தை பயன்படுத்துவதும் இனவாத முரண்பாடும் இதற்கு காரணமாக அமைந்துள்ளது. அதனால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு பிரிந்து போவதன் மூலம் அமையப்போவதில்லை. வர்க்க ஒற்றுமையின் மூலமாகவே அமைந்திருக்கிறது. சமத்துவமின்மையை ஒழித்தல் மற்றும் உண்மையான தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதன் மூலமாகவே இப் பிரச்சினைக்கான தீர்வு அமைந்திருக்கிறது. அதற்காக முதலாளித்துவத்தை தோற்கடிக்கவும் புதியதோர் சோஷலிச சமூகத்தை கட்டியெழுப்புவதும் கட்டாயமான ஒன்றாகும்.

இப் பிரச்சினையின் போது ஏகாதிபத்தியவாதிகளுக்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இரண்டு தீர்வுகளே உள்ளன.

ஒன்று எதேச்சதிகார மையப்படுத்தல் இரண்டாவது ஏதேச்சதிகார பன்முகப்படுத்தாலாகும். இந்த இரண்டு வழிகளும் தவறானது.

பாட்டாளி வர்க்கத்தின் கோரிக்கை அதாவது இடதுசாரி இயக்கத்தின் கொள்கையாக இருப்பது ஜனநாயக மையப்படுத்தலாகும். அதன்போது அனைத்து மக்களுக்கும் ஜனநாயகத்தை உறுதிபடுத்தப்படல் வேண்டும். அதேபோன்று சமூக பொருளாதார வாழ்க்கையில் சம வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். எவருக்கும் விஷேட சலுகைகள் வழங்க வேண்டியதில்லை.

எனவே சகல வடிவிலான இனவாதத்தையும் தோற்கடிக்க வேண்டும். தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டும். தாம் விரும்பும் மொழியில் பணிகளை செய்யும் உரிமை, தாம் விரும்பும் பிரதேசத்தில் வாழும் உரிமை, தமது கலாசார தனித்துவத்தை தடைகளின்றி கொண்டுச் செல்லும் உரிமை உறுதிப் படுத்தப்படல் வேண்டும்.

விசேடமாக பொருளாதார அபிவிருத்திக்கு சகல மக்களையும் இணைத்துக் கொள்ளல் மற்றும் பொருளாதார அபிவிருத்தியின் பெறுபேறுகளை அனைவருக்கும் பகிரப்படுதல் வேண்டும் என்பதுடன் இம் முறையை நிர்மாணித்தலும் அவசியமானதாகும். இவைகளில் எதையும் முதலாளித்துவத்தால் வழங்க முடியாது. இவற்றுல் எதையும் அதிகாரத்தை பகிர்வதன் மூலம் பெற்றுக் கொள்ளவும் முடியாது.

தமிழ் மக்கள் உள்ளிட்ட சகல மக்களினதும் உரிமைகளை பெற்றுக் கொள்ள முடிவது முதலாளித்துவத்திற்கு எதிராக, அநியாயம் மற்றும் அநீதிக்கு எதிராக மேற்கொள்ளும் பொது போராட்டதின் மூலமாகவே ஆகும். அதனால் இப்போது தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க பொது போராட்டத்தில் பிரவேசிப்பதே இப்போதுள்ள பணியாகும். உண்மையான ஜனநாயகத்தையும், சம வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளக் கூடிய உண்மையான தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்பக் கூடிய புதியதோர் சமூகத்திற்காக போராடுவதைத் தவிர வேறு தீர்வுகள் தமிழ் மக்களுக்கு கிடையாதென்பது எமது கருத்தாகும்.

செஞ்சக்தி: இறுதியாக நீங்கள் தமிழ் மக்களுக்கு கூறும் செய்தி என்ன?

தோழர் ரில்வின் சில்வா: முதலாவதாக தமிழ் மக்களின் எதிரிகள் சிங்கள மக்களோ முஸ்லிம் மக்களோ அல்ல என்பதையும் அதேபோன்று சிங்கள மக்களின் எதிரிகள் தமிழர்களோ முஸ்லிம்களோ அல்ல என்பதும் நம் புரிந்துகொள்ளவேண்டும். அனைவரினதும் எதிரிகள் முதலாளித்துவ வர்க்கமும் ஏகாதிபத்தியவாதிகளும் இனவாதமும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கிணங்க வரலாறு முழுவதும் இடம்பெற்ற ஏமாற்றத்திலிருந்தும், ஒடுக்குமுறையிலிருந்தும், எதிர்பார்ப்புகள் சிதைக்கப்பட்ட வரலாற்றுப் பாடங்களை கற்றுக்கொண்டு புதியதோர் அரசியல் பயணத்தை முன்னெடுப்பதற்காக நாம் திடமாகவும் நம்பிக்கையுடனும் செயற்பட முன்வரவேண்டும்.

அதன்போது பல தசாப்பதங்களாக கறைபடிந்த போயுள்ள இனவாதத்திலிருந்து மீண்டெழுந்து வர்க்க ஒற்றுமைக்காக செயற்படுவது நாம் யாவரினதும் கடைமைப் பொறுப்பென நாம் கருதுகின்றோம்.

தமிழ் மக்கள் தம்மை விஷேடமாக பாதிக்கும் பிரச்சினைகளுக்காகவும், தமது உரிமைகளுக்காகவும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் முகம்கொடுக்கின்ற அநீதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்த பொது பேராட்டத்திற்கு வரவேண்டுமென நாம் திடமாக நம்புகிறோம். தற்போது தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் அவசர பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக போராட வேண்டும். வடக்கில் உருவாக்கப்படும் இராணுவ ஆட்சியின் பலாத்காரத்திற்கு எதிராகவும் ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்காகவும், விடுதலைக்காகவும் போராட வேண்டும்.

காணாமல் போனவர்களின் பிரச்சினை, கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்து கொள்வதற்காக, இடம்பெயர்ந்தவர்களின் மீள குடியேற்றம், அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக அரசாங்கத்திற்கு எதிராக போராட வேண்டும். அப் போராட்டத்திற்கு நாம் உயர்ந்த பட்ச பங்களிப்பினை வழங்கத் தயார் அதே போன்று நீண்ட காலத்திற்கான சமூக மாற்றத்திற்கான அரசியலை தெரிவு செய்தாக வேண்டும். அதற்காக அணிதிரளும்படி நாம் அவர்களை கேட்டுக் கொள்கின்றோம்.

மூலம்/ஆக்கம் : நேர்காணல்


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply