அமெரிக்க செனட்டின் ஆதரவைப்பெற இலங்கை முயற்சி

அமெரிக்காவில் வாழும் இலங்கை மக்கள் தங்கள் நாட்டில் நடைபெறும் இனங்களுக்கிடையிலான இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு அமெரிக்க செனட் சபையின் அங்கத்தவர்கள் ஆதரவளிக்க வேண்டுமென்று கேட்கவுள்ளார்கள்.

அமெரிக்காவில் இலங்கை தூதுவராக இருக்கும் ஜாலிய விக்கிரமசூரியவின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அங்கு வாழும் இலங்கை மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு இப்போது புனர்வாழ்வளித்து வருவதுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டை இப்போது பாரிய ரீதியில் அபிவிருத்தி செய்கின்றது என்ற உண்மையை அமெரிக்காவின் செனட் சபை அங்கத்தவர்களுக்கு எடுத்துரைப்பதென்று முடிவெடுத்துள்ளார்கள்.

இலங்கைத்தூதுவர் அமெரிக்காவில் உள்ள இலங்கையர்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களை லொஸ் ஏஞ்சல்சில் உள்ள இலங்கையின் இணைத்தூதரகத்தில் சந்தித்து உரையாற்றினார்.

இப்போது அரசாங்கம் அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது என்று தெரிவித்த ஜாலிய விக்கிரமசூரிய, இலங்கை மக்கள் அமெரிக்காவின் வாக்குரிமை பெற்றவர்கள் என்ற முறையில் அந்நாட்டின் காங்கிரஸ் சபையின் அங்கத்தவர்களை இந்தக் கருத்தை வலியுறுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

இலங்கைத் தூதுவர் அமெரிக்காவில் வாழும் முன்னணி தமிழ் சமூகங்களின் பிரதிநிதிகளை சந்தித்து இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றி எடுத்துரைத்தார். தற்போது நாடு அரசியல் மற்றும் பொருளாதார துறையில் முன்னேற்றமடைந்திருப்பதனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 2009 மே மாதத்தில் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து அப்பிரதேசங்களில் வாழும் மக்கள் வலுவூட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவற்றுக்கு செவிமடுத்த தமிழ் சமூகம் அரசாங்கம் மேற்கொள்ளும் நற்பணிகளை வரவேற்பதாக கூறியது. வடக்கு கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளுக்காக வருடாந்தம் இலங்கை அரசாங்கம் ஒரு பில்லியன் டொலர்களை செலவிட்டு வருகிறதென்று தெரிவித்த இலங்கை தூதுவர் இப்போது புதிய வீடுகள், ஆஸ்பத்திரிகள், பாடசாலைகள், வீதிகள், நீர்விநியோகத் திட்டங்கள், பாலங்கள், ரயில் பாதைகள், நீர்ப்பாசன குளங்கள் என்பன மீள் நிர்மாணம் செய்யப்பட்டு வருவதாககவும் தெரிவித்தார்.

யுத்தம் முடிவடைந்த காலத்தில் சுமார் 3 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர். இப்போது அவர்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கும் புதிய வாழ்வாதாரங்களை ஆரம்பிப்பதற்கும் அரசாங்கம் நிதி உதவிகளை வழங்கி வருகின்றது.

இடம்பெயர்ந்த 3 இலட்சம் பேரில் ஒரு சிறு தொகையைத் தவிர அனைவரும் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர். வடபகுதியில் புலிகள் தரையில் புதைத்த 5 இலட்சம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் கண்ணிவெடிகள் அகற்றப்படுவதாகவும் தெரிவித்த ஜாலிய விக்கிரமசூரிய, இன்று நாட்டில் விவசாயம் மற்றும் மீன்பிடித்துறை வளர்ச்சியடைவதாகவும் வடக்கில் 2010ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 21சதவீதத்தை எட்டியிருக்கிறதென்றும் கூறினார்.

இந்த சந்திப்பின் போது தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பல பிரதிநிதிகள் தாங்கள் இலங்கையில் வந்து வர்த்தக முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு விருப்பம் தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த தூதுவர், அவர்கள் சிறிய மற்றும் நடுத்தர தொழில்களை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் பூரண ஆதரவளிக்கும் என்று கூறினார்.

இலங்கை அரசாங்கம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த சிறுவர் போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்தும் இருக்கிறது.

இத்துடன் அரசாங்கம் 11ஆயிரத்து 600 புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பை அளித்திருக்கிறதென்று தெரிவித்த இலங்கை தூதுவர், வேறொரு நாட்டில் பயங்கரவாதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளதா? என்று கேட்டார். இந்நிகழ்வில் சுமார் 30 பெளத்த பிக்குமாருக்கு தானமும் வழங்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள இலங்கை மக்கள் இன, மத பேதமின்றி கலந்து கொண்டார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply