அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்கு எதிரணியினரை அழைக்க வேண்டும்

யாழ்.குடாநாட்டில் இடம்பெறும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை. இத்தகைய நிலை தொடருமானால் அகிம்சை வழியில் போராட்டங்களை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோமென்று ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் இது குறித்து கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.அந்தக் கடிதத்திலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்கள் பல தடவை நடைபெற்றுள்ள போதிலும் எதிர்க்கட்சியினரான எமக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை. இதேபோல் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்கும் எம்.பி. என்ற வகையில் எனக்கோ அல்லது எதிர்த்தரப்பைச் சேர்ந்த ஏனைய உறுப்பினர்களுக்கோ அழைப்பு விடுக்கப்படுவதில்லை.

காரைநகர் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் காரைநகர் தியாகராஜா மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றுள்ளது. இதில் ஆளுநர் சந்திரசிறி உட்பட அரசாங்க எம்.பி.க்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்துக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கோ அல்லது உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை. காரைநகர் பிரதேசசபையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கைப்பற்றியுள்ளது. அதில் எமது கட்சியின் சார்பில் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த உறுப்பினர்கள் எவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. யாழ்.மாவட்ட எம்.பி. என்ற அடிப்படையில் எனக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.

பாடசாலை நேரத்தில் பாடசாலையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. இதனால் இங்கு கல்வி நடவடிக்கை பாதிக்கப்படும் நிலையும் தோன்றியிருக்கும். எனவே, இத்தகைய கூட்டங்களை சனி,ஞாயிறு தினங்களில் அல்லது பாடசாலை முடிவடைந்த பின்னர் நடத்துவது சிறந்ததாகும்.
குடாநாட்டில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளை கூட்டமைப்பே கைப்பற்றியுள்ளது. எனவே, பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் இடம்பெறும்போது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அதில் பங்குபற்ற வேண்டியது அத்தியாவசியமானதாகும். எனவே மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்கு கட்சி பேதமின்றி அனைத்துப் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட வேண்டும். இதன் மூலமே அனைவரும் ஒன்றிணைந்து அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு குடாநாட்டை கட்டியெழுப்ப முடியும்.

இதனைவிடுத்து தனியொரு கட்சியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு கூட்டங்களை நடத்துவதனால் பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் புறக்கணிக்கப்படும் நிலை காணப்படுவதுடன், அபிவிருத்தித் திட்டங்களில் உரிய பயனை எட்ட முடியாது போகும். எனவே, இவ்விடயத்தில் தாங்கள் தலையிட்டு இத்தகைய கூட்டங்களுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு கட்டளையிட வேண்டும். இதன் மூலமே நாம் அனைவரும் ஒன்றிணைந்து அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள முடியும்.

தொடர்ந்தும் இத்தகைய புறக்கணிப்புகள் மேற்கொள்ளப்படுமானால் மக்களை ஒன்றிணைந்துப் போராட்டங்களை நடத்த வேண்டிய நிலையேற்படும். எனவே, இவ்விடயம் குறித்து கவனம் செலுத்துமாறு கேட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply