அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள்

இலங்கை சிறைச்சாலைகளில் வருடக் கணக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை கைதிகள் தினத்தையொட்டி மனிதாபிமான ரீதியில் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டும் என்று கைதிகளின் உறவினர்கள் நேற்று திங்கட் கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர்.

யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகின்றது. யுத்த மோதல்கள் காரணமாக நாட்டில் நடைமுறையில் இருந்த அவசரகால சட்டமும் நீக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மாவட்டங்களில் உள்ள அரசாங்க அதிபர்களின் ஊடாக இந்தக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ள விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்குப் பொதுமன்னிப்பளித்து, புனர்வாழ்வுப் பயிற்சிகள் வழங்கி விடுதலை செய்வதைப் போன்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைகளில் வாடுகின்றவர்களுக்கும் மன்னிப்பளிக்கப்பட வேண்டும் என்று அந்த மகஜரில் கோரப்பட்டிருக்கின்றது.

இந்த மகஜர்களின் பிரதிகள் மட்டக்களப்பு, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட ஆயர்கள் உள்ளிட்ட மதத்தலைவர்களிடமும் கையளிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த கைதிகளின் விவகாரம் குறித்து கருத்து வெளியிட்ட மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப், சட்ட திட்டங்களுக்கு அமைய அவர்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் அல்லது விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply