இந்தியா, அமெரிக்கா மீண்டும் பிரிவினை வாதத்தை உருவாக்க முயற்சி
இந்தியாவும் அமெரிக்காவும் மீண்டும் இலங்கையில் பிரிவினைவாதப் போராட்டங்களை உருவாக்க முயற்சிகளை மேற் கொண்டுள்ளன. இதற்காக நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தவும் போராட்டங்களுக்கு தேவையான புறச் சூழலை அமைக்கவுமே தெற்காசிய பிராந்தியத்திற்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரொபட் ஓ பிளேக் இலங்கை வந்துள்ளார் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
லிபியா உட்பட அரேபிய நாடுகள் மற்றும் மத்திய ஆபிரிக்க வலய நாடுகளில் அமெரிக்காவும் ஏனைய மேற்குலக நாடுகளும் திட்டமிட்டு சூழ்ச்சிகரமான முறையில் புரட்சிகளை ஏற்படுத்தி அந்நாடுகளின் அபிவிருத்திகளையும் பாதுகாப்பையும் கேள்விக்குரியாக்கிவிட்டுள்ளன. இதே போன்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக இலங்கையிலும் தமது நோக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள அந் நாடுகள் முயற்சிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
மஹரகமலில் நடைபெற்ற விஷேட நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,
அமெரிக்கா, இந்தியா உட்பட மேற்குலக நாடுகளின் தற்போதைய அவசர தேவையானது இலங்கையில் அதிகாரப் பகிர்வுகளின் ஊடாக பிரிவினைவாத கட்சிகளுக்கு உயிரூட்டுவதேயாகும். இதற்கான முயற்சிகளை தேசிய அரசியலில் சூழ்ச்சிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி தலையீடுகளுக்கான சூழலை உருவாக்குவது இந்தியாவினதும் அமெரிக்காவினதும் திட்டமாகும்.
இதுவரை காலமும் இலங்கை வந்த அமெரிக்க பிரதிநிதிகள் யாரும் உள் நாட்டு பல்கலைகழக மாணவர்களை சந்தித்து பேசியது கிடையாது. ஆனால் தற்போது இலங்கை வந்துள்ள ரொபட் ஓ பிளேக்கின் நிகழ்ச்சி நிரலில் மாணவர்களின் சந்திப்பு இடம் பெற்றுள்ளது. இது வேலொன்றுக்கும் அல்ல. மாணவர்களை கொண்டு அரசிற்கும் இராணுவத்திற்கும் இடையே மோதல்களை ஏற்படுத்துவதேயாகும்.
இதற்கு ஏற்ற வகையிலேயே ஜே.வி.பி. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றன. அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது. போதாது என்று பயங்கரவாத தடுப்புச் சட்டத்தையும் நீக்குமாறு மேற்படி கட்சிகள் வலியுறுத்துகின்றன.
எனவே நாட்டிற்கு எதிரான மேற்குலக நாடுகளின் சூழ்ச்சிகளை இனங்கண்டுக் கொள்ள வேண்டும். ஐ.நாவின் தேவையும் இலங்கைக்கு எதிரான விசாரணைகளை ஆரம்பிப்பதாகும். ஐ. நாவின் தலைமை அதிகாரியான கிறிஸ்டோப் ஹெய்ன் லிபியாவை போன்ற தலையிடு இலங்கைக்கும் அவசியம் என கூறியிருந்தார். இதுவே இன்று நாட்டிற்கு எதிரான சூழ்ச்சியாக அமைந்துள்ளது எனக் கூறினார். _
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply