அரசாங்கத்துடன் இடம்பெறும் பேச்சுக்கு முஸ்லிம்களும் ஆதரவு வழங்க வேண்டும் : மாவை

இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு சர்வதேசம் தமிழ் மக்களுக்குப் பலமாகவிருக்கும் இவ்வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் நடத்தும் பேச்சு வார்த்தைக்கு ஆதரவு வழங்கி தீர்வைப் பலமுள்ளதாக மாற்ற முஸ்லிம் தலைவர்களும் மக்களும் முன்வரவேண்டும். என யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளருமான மாவை சேனாதிராஜா கூறினார்.

கல்முனை மாநகரசபைத் தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கல்முனை இரண்டாம் பிரிவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் கல்முனை மாநகர சபைத்தேர்தலுக்கான தமிழரசுக் கட்சியின் முதன்மை வேட்பாளருமான கு.ஏகாம்பரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

“தமிழ் மக்கள் எதிர்நோக்கிய இத்தனை பேரழிவுகளுக்குப் பிறகும் சர்வதேச சமூகம் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமென்று அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.

இவ் வேளையில் இந்நாட்டில் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு உருவாக வேண்டுமானால் முஸ்லிம் தலைமைகளும் எமக்கு ஆதரவு வழங்க வேண்டும்.

இதற்கென தமிழர்களும், முஸ்லிம்களும் ஒன்றுபட்டுத் தமது குரலை எழுப்ப வேண்டும். அதற்காக அரசிடம் வாதாடுவதன் மூலம் ஏன் மக்கள் போராட்டம் நடத்த வேண்டுமானால் அதிலும் நாம் இறங்க வேண்டும்.

அரசியல் தீர்வு எட்டப்படுவதற்கு சர்வதேசம் தமிழ் மக்களுக்கு பலமாக இருக்கும் இச் சந்தர்ப்பத்தில் தமிழர்கள் அப்படியொரு அரசியல் தீர்வை எட்டும் நேரத்தில் கிழக்கில் குறிப்பாக பரவலாக முஸ்லிம் மக்களின் ஆதரவு எமக்குத் தேவையாகவுள்ளது.

அதேவேளை முஸ்லிம் மக்களும் இந்த நாட்டில் ஆட்சி உரிமை, அரசியல் உரிமை, சுயநிர்ணய உரிமை கொண்டவர்களாக தங்களை நிரூபிக்க வேண்டுமானால் தங்கள் மண்ணில் தாங்களே ஆளுபவர்களாக இருக்க வேண்டுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் நடத்தும் பேச்சுவார்த்தைக்கு ஆதரவு தர வேண்டும்.

அந்த அரசியல் தீர்வில் பங்காளிகளாக மாறி அத் தீர்வைப் பலமுள்ளதாகவும் மாற்றி ஒன்று பட்ட வடக்குக் கிழக்குத் தாயகத்தில் ஆளுவோம் என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்தவும் முஸ்லிம்கள் முன் வரவேண்டும். அப்படி நடக்க வேண்டுமென நான் நினைக்கின்றேன்.

வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில் அங்குள்ள தமிழ் , முஸ்லிம் மக்கள் தங்கள் மண்ணை, தங்கள் நிலத்தில், தங்கள் பிரதேசத்தில் தாங்களே ஆளுகின்ற ஒரு அரசியல் தீர்வையே நாம் வேண்டிநிற்கின்றோம்.

அந்த தன்னாட்சி அரசியல் தீர்வில் முஸ்லிம் மக்கள் உரிமை அங்கீகரிக்கப்பட்டு அவர்களும் சம உரிமைகளோடு தங்கள் மாநிலத்தில் தங்கள் பிரதேசத்தில் ஆளுகின்றவர்களாக மாற கல்முனைமாநகர சபைத் தேர்தலும் முக்கியமாகும்.

முஸ்லிம் மக்கள் தாங்கள் சார்ந்திருக்கின்ற எந்தக் கட்சியாகவிருந்தாலும் முஸ்லிம் பிரதிநிதிகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளும் ஒன்று பட்டு அபிவிருத்தி மட்டுமல்ல தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கும் கல்முனை மாநகர சபை ஓர் உதாரணமாகத் திகழும்.

அரசு தென்னிலங்கையில் பெரும்பான்மை பலம் பெற்றுள்ளதாக மார்தட்டிக் கொள்கின்றது. ஆனால் அதேபோல் தமிழ் மக்களும் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக இறுதியாக நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் கூட எங்கள் மக்களும் வாக்களித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இப்பலமிருப்பதை நிரூபித்துள்ளனர்.

இத்தகைய எம்மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு ஆட்சியிலுள்ள மக்கள் அந்தத் திரீப்பின் அடிப்படையில் தமிழ் மக்கள் தங்கள் நிலத்தில் வாழவும்,ஆளவும் உள்ள உரிமையை அங்கீகரிக்கவேண்டுமென கடைசியாகச் சொன்னோம்.

இதனையே சர்வதேச அரங்கில் இந்தியா அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்ற அத்தனை நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.

இதற்குத் தமிழ் மக்கள் மட்டும்மல்ல முஸ்லிம் மக்களும் பலம் சேர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply