பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இலங்கை வகித்து வரும் அங்கத்துவத்தை இடைநிறுத்துமாறு அவுஸ்திரேலியாவின் கிறீன் கட்சி கோரிக்கை
பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இலங்கை வகித்து வரும் அங்கத்துவத்தை இடைநிறுத்த வேண்டுமென அவுஸ்திரேலியாவின் கிறீன் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்படும் வரையில் உறுப்புரிமை இடைநிறுத்தி வைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் உறுப்புரிமையை இடைநிறுத்துவது தொடர்பிலான பிரச்சார நடவடிக்கைகளை கிறீன் கட்சி ஆரம்பித்துள்ளது.
எதிர்வரும் மாதம் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் பொதுநலவாய நாடுகள் அமர்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மனித உரிமை செயற்பாட்டாளர்கள், நீதித்துறையைச் சார்ந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பங்களிப்புடன் அவுஸ்திரேலிய பாராளுமன்றில் கிறீன் கட்சி வட்டமேசை மாநாடு நடத்தவுள்ளது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் குற்றம் சுமத்தப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சாட்சியங்களைத் திரட்டும் நோக்கில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
சரியான ஆதாரங்கள் திரட்டப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டால் இலங்கையின் சார்பில் பேர்த் மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகளுக்கு வீசா மறுக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக கிறீன் கட்சி செனட்டர் லீ ரியான்னான் தெரிவித்துள்ளார்.
கனடாவிலும் இதே போன்றதொரு எதிர்ப்பலை உருவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கடந்த ஜூலை மாதம் கிறீன் கட்சி முன்வைத்த யோசனைத் திட்டத்திற்கு அமோக ஆதரவு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, உறுப்பு நாடு என்ற காரணத்தினால் குற்றச் செயல்களில் ஈடுபடுவதனை அனுமதிக்க முடியாது என நியூ சவுத் வேல்ஸின் முன்னாள் சட்ட மா அதிபர் ஜோன் டொவுட் தெரிவித்துள்ளார்.
1999ம் ஆண்டு பாகிஸ்தானில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்ட போது பொதுநலவாய நாடு உறுப்புரிமை மறுக்கப்பட்டதுடன், 2007ம் ஆண்டு பிஜீ தீவுகளின் உறுப்புரிமையையும் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply