வடபகுதியில் 50 ஆயிரம் வீடுகளை ஒரே சமயத்தில் நிர்மாணிக்க ஆர்வம் : விமல்
வடக்கில் 50 ஆயிரம் வீடுகளை ஒரே சமயத்தில் நிர்மாணித்து கொடுப்பதற்கான ஆர்வம் அரசாங்கத்திடம் இருக்கின்ற போதிலும் அதனை செயற்படுத்த வேண்டியது இந்திய அரசாங்கத்தின் கைகளிலேயே தங்கியிருக்கின்றது என நிர்மாணம், பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அமர்வில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. ரவி கருணாநாயக்க இந்திய அரசின் உதவியில் வடக்கில் நிர்மாணிக்கவிருக்கின்ற 50 ஆயிரம் வீடுகள் தொடர்பில் கேள்விகளை எழுப்பியிருந்தார். இத்திட்டத்திற்கு இந்திய அரசு 24 பில்லியன் ரூபாவினை வழங்கியமை இதுவரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் குறித்து கேள்விகளைத் தொடுத்திருந்தார். இவற்றுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், வடக்கில் 50 ஆயிரம் வீட்டுத் திட்டமானது இந்திய அரசாங்கத்தின் கடனுதவியால் மேற்கொள்ளப்படுகின்ற திட்டமல்ல. மாறாக அது இந்திய மத்திய அரசின் அன்பளிப்பினாலானதாகும். இதன் பிரகாரம் தற்போது அங்கு 1000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான முன்னோடி வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
அரசாங்கத்தை பொறுத்தவரையில் 50 ஆயிரம் வீடுகளையும் ஒரே சந்தர்ப்பத்தில் அமைத்துக் கொடுப்பதற்கு ஆர்வத்தைக் கொண்டிருக்கின்றது. எனினும் வீடுகளை அன்பளிப்பு செய்கின்ற இந்திய அரசாங்கமே அதனை செயற்படுத்த வேண்டும். கூடிய விரைவில் இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. மேற்படி 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில் விதவைகள், வயோதிபர்கள் மற்றும் குறை வருமானம் பெறுவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply