இலங்கை விவகாரத்தில் ஐ.நா.மனித உரிமை பேரவைக்கு தோல்வி
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தோல்வியைச் சந்தித்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கடந்த ஒரு ஆண்டு செயற்பாடுகள் தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று 69 பக்க அறிக்கை ஒன்றை ஜெனீவாவில் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் 2010 ஜூலை தொடக்கம் 2011 ஜூன் வரையிலான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.
சில நாடுகள் விடயத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் செயற்பாடுகள் வெற்றிகரமாக அமைந்தபோதும் முக்கியமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான், இலங்கை, பஹ்ரெய்ன் ஆகிய நாடுகள் விடயத்தில் நடவடிக்கை எடுப்பதில் தோல்வியைச் சந்தித்துள்ளதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் ஐ.நா. நிபுணர்குழு இலங்கையில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றதற்கு நம்பகமான சாட்சியங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை இதுபற்றி மீள் விசாரணை நடத்த வேண்டும் என்றும் பரிந்துரை செய்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆனால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இன்னமும் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் விவகாரத்தை மீள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளவில்லை என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவை மீள் விசாரணை செய்ய வேண்டும் இலங்கை சிறிலங்கா அரசின் பொறு ப்புச் செயற்பாடுகள் சரியான முறையில் முன்னெடுக்கப்படவில்லை என்ற கவலை யை வெளிப்படுத்த வேண்டும் என்றும் இந்த அறிக்கையில் கோரப்பட் டுள்ளது.
அனைத்துலக போர்க்குற்ற விசாரணைகளை பொறிமுறையை அமைத்தல் உள்ளிட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஐ.நா.பொதுச் செயலரை மனித உரிமைகள் பேரவை ஊக்குவிக்க வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply