வன்னியில் சிங்களக் குடியேற்றம் தடுக்க நடவடிக்கை ஏதுமில்லை : சிவசக்தி ஆனந்தன்

வன்னி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றம் மற்றும் நிர்வாக எல்லைகளின் மாற்றம் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்த போதும் இந்த நடவடிக்கைகள் தடுக்கப்படாது தொடர்கிறது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டினார்.

நேற்று நாடாளுமன்றில் காணி சம்பந்தமான ஒத்திவைப்புப் பிரேரணையின் போது தனது பிரேரணையைச் சமர்ப்பித்து உரையாற்றியபோது சிவசக்தி ஆனந்தன் தெரிவித்ததாவது:

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட 80 வீதமான காணிகள் மகாவலி அதிகார சபைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன. தனிக்கல்லு, இலுப்பைக்குளம், ஒதியமலை ஆகிய மூன்று குளங்களின் கீழ் வரும் 500 ஏக்கர் வயல் காணிகள் இப்போதும் மிதிவெடி அகற்றப்படவில்லை. அத்துடன் வெலிஓயா உதவி அரச அதிபர் என்று சொல்லப்படும் ஒருவரால் மேற்படி காணிகளுக்குச் சொந்தக்காரர்கள் வரவழைக்கப்பட்டு உங்கள் காணிகள் வெலிஓயா பிரதேச செயலர் பிரிவுக்குள் உள்ளது என்றும் இங்குதான் நீங்கள் குடியேற வேண்டும் எனவும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

தவிர பட்டிக்குடியிருப்பு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட 250 தமிழ்க் குடும்பங்களுக்குச் சொந்தமான 450 ஏக்கர் வயல் காணிகளும் 2010 இல் வெலிஓயாவில் வாழும் சிங்கள மக்களுக்கு விவசாயம் செய்ய வழங்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற சம்பவம் பழைமை வாய்ந்த கிராமமான வெடிவைத்த கல்லு கிராமத்திலும் ஏற்பட்டுள்ளது. நெடுங்கேணியில் தனியாருக்குரியதான அநேக காணிகளை இராணுவமும் பொலிஸ{ம் அபகரித்து வைத்துள்ளன. இதனால் மக்கள் மீளக்குடியேற முடியாதுள்ளனர்.

கனகராயன்குளத்தில் மயானக் காணியில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். இவ்வாறான காணிகள் விரைவில் உரிய மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் கீழ் வரும் 9 கிராம சேவையாளர் பிரிவுகள், வெலிஓயா அரச அதிபர் பிரிவு என ஒன்றைப் புதிதாக உருவாக்கி அதற்குள் நிர்வகிக்க முல்லைத்தீவு அரச அதிபருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு வன்னியில் பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அதிகரித்துச் செல்கின்றன. இவற்றை வன்னி மக்கள் என்னிடம் தெரிவிக்கின்றனர். இவைதவிர தெரியாத நில ஆக்கிரமிப்புக்கள் பல இருக்கலாம்.

எனவே காணி மற்றும் நீர்ப்பங்கீடு என்பவை அரசியல் தீர்வுடன் தொடர்புபட்டிருப்பதால் தமிழ் மக்களுக்கு நிரந்திரத்தீர்வு எட்டப்படும் வரை காணி சுவீகரிப்பு மற்றும் அதற்கிசைவான புதிய காணிப் பதிவு முறைமைகளை கைவிடவேண்டும். மேற்படி செயற்றிட்டத்தின் மூலம் தமிழ் மக்களது பூர்வீக நிலங்களை கபளீகரம் செய்யும் திட்டத்தினை கைவிட்டு தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தலையும் சுற்றுநிருபங்களையும் உடன் நீக்க வேண்டும் எனவும் தனது பிரேரணையை முன்வைத்தார் சிவசக்தி ஆனந்தன்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply