தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நாங்களும் தமிழ் இனத்தின் பங்காளிக் கட்சிகளாகும் : மனோ கணேசன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நாங்களும் தமிழ் இனத்தின் பங்காளிக் கட்சிகளாகும். அதில் நீங்கள் தலையிட்டு கருத்துத் தெரிவிப்பது முறையற்ற நடவடிக்கை. எங்களைப் பிரிக்க நினைக்கும் உங்களுக்கு தமிழர்கள் மறந்துபோயும் வாக்களிக்கமாட்டார்கள் என்று ஐனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பல கட்சிகள் மாறிய வரலாறு கொண்ட நீங்கள் நாளை அரசாங்க பக்கத்திற்கு தாவமாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கின்றது? முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக நேரடி அரசியலுக்கு வந்த நீங்கள் மாமனிதர் அஷ்ரபின் மறைவிற்கு பின்னர் அஸ்ரஃபின் தலைமையில் பொது ஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் இணைந்து நுவா கட்சியில் செயற்பட்டீர்கள். பின்னர் 2002 ஆம் வருடத்தில் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸிற்கு மீண்டும் கட்சி மாறி வந்தீர்கள். பின்னர் 2004 ஆம் வருடம் பொதுத் தேர்தலில் கட்சி மாறி ஐ.தே.க.வில் இணைந்து ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேர்தலில் வேலை செய்தீர்கள்.அதே வருடம் நடைபெற்ற மாகாணசபை தேர்தலில் மீண்டும் கட்சி மாறி நுவா கட்சியில் போட்டியிட்டு மாகாண சபைக்கு சென்றீர்கள். அதன் பிறகு மீண்டும் 2009 ஆம் ஆண்டு கட்சி மாறி ஐ.தே.க.வில் இணைந்து மாநகர சபை உறுப்பினராக தெரிவாகி விட்டு இன்று மேயர் வேட்பாளராக போட்டியிடுகின்றீர்கள். இன்றைய அமைச்சர் பௌசி ஆரம்பத்தில் ஐ.தே.க.வின் கொழும்பு மேயராக தெரிவு செய்யப்பட்டார். பின்னர் அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்து கொண்டார். இந்நிலையில் பல கட்சிகள் மாறிய வரலாறு கொண்ட முஸமில் ஆகிய நீங்கள் இன்னொரு பௌசி ஹாஜியாக மாறமாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் என எனது ஐ.தே.க. இஸ்லாமிய நண்பர்களே இன்று கேள்வி கேட்கின்றார்கள்.
இதற்கு உங்களது பதிலை கூறிவிட்டுத் தலைநகர தமிழர்களை பற்றி கருத்துத் தெரிவியுங்கள் என்றும் அவர் கூறினார். தன்னையும் தனது கட்சியையும் பெயர் குறிப்பிட்டு கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்து முஸம்மிலின் பெயரில் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு தனக்கு உள்ளதாக கூறிய மனோ கணேசன் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நாங்களும் தமிழ் இனத்தின் பங்காளிக் கட்சிகள். அதில் நீங்கள் தலையிட்டு கருத்து தெரிவிப்பது உங்களது தந்திரமான குள்ள நரித்தனத்தை காட்டுகின்றது. எங்களை பிரிக்க நினைக்கும் உங்களுக்கு தமிழர்கள் மறந்து போயும் வாக்களிக்கமாட்டார்கள். கூட்டமைப்பின் தலைவர்கள் எங்களுக்கு பகிரங்கமாக ஊடகங்களில் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளார்கள். கூட்டமைப்பு தலைவர்கள் எங்களது தேர்தல் பிரசாரங்களிலே நேரடியாக பெரியளவில் கலந்து கொள்ளாமைக்கு காரணம் இருக்கின்றது. இது தொடர்பிலே எங்களுக்கும் கூட்டமைப்பிற்கும் நல்ல புரிந்துணர்வு இருக்கின்றது. கூட்டமைப்பு தலைவர்கள் நேரடியாக கொழும்பு பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டால் புலிக்கூட்டம் ஒன்று சேர்ந்துவிட்டது என பிரசாரம் செய்வதற்கு நிறைய பேரினவாதிகளும் அவர்களது தமிழ் பேசும் தரகர்களும் தயாராக இருப்பது எங்களுக்குத் தெரியும். கடைசி நேரத்திலே எங்களது வெற்றியை தடுப்பதற்கு நீங்களும் கூட மறைமுகமாக இதைத்தான் செய்வீர்கள். இதுதான் சதிவலையாகும். இந்த சதிவலையில் புத்தியுள்ள தமிழர்களாகிய நாங்கள் சிக்கிக் கொள்ள மாட்டோம். இன்று அரசாங்கத்தை காப்பாற்றிக் கொண்டிருப்பது உங்களது ஐக்கிய தேசியக் கட்சிதான் என்று உங்களது கட்சியிலேயுள்ள ஐ.தே.க. அரசியல்வாதிகளே சொல்கிறார்கள். உங்களது தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐ.நா வரை சென்று பான்கீ மூனை சந்தித்து இன்றைய அரசாங்கத்தை காப்பாற்றிவிட்டு வந்துள்ளார் என்றும் அதற்குப் பிரதியுபகாரமாகவே இன்றைய அரசாங்கம் உங்களைக் காப்பாற்றுகின்றது என்றும் உங்களது ஐ.தே.க. அரசியல்வாதிகளே சொல்கிறார்கள்.
எங்களது கட்சியிலிருந்து அரச தரப்பிற்கு தாவிய தனி நபரின் அரசியல் பயணம் ஏற்கனவே முடிவிற்கு வந்து விட்டது. எதிர்வரும் தேர்தலுக்கு பிறகு அது பகிரங்கமாக தெரியவரும். அதை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம். ஆனால் எங்களது கட்சியைப் பற்றி பேசும் நீங்கள் உங்களது கட்சியின் பக்கம் திரும்பிப் பாருங்கள். கடந்த பாராளுமன்றத்திலும் சுமார் 25 ஐ.தே.க. எம்.பி.க்கள் அரச தரப்பிற்கு தாவினார்கள். இந்த பாராளுமன்றத்திலும் சுமார் 5 ஐ.தே.க. எம்.பி.க்கள் அரச தரப்புக்கு தாவியுள்ளார்கள். பல கட்சிகள் தாவி வந்த உங்களுக்கு இது பரீட்சயமான விடயமாகும்.
இன்னும் எத்தனை ஐ.தே.க. காரர்கள் பாராளுமன்றத்திலிருந்தும் மாகாண சபையில் இருந்தும் எதிர்கால மாநகர சபையில் இருந்தும் அரச தரப்பிற்கு தாவப் போகின்றார்கள் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். எனவே தான் ஆளுங்கட்சியும் வேண்டாம் எதிர்க் கட்சியும் வேண்டாம் என தலை நகர தமிழர்களின் சக்தியை ஒன்று திரட்டி எங்களது தனித்துவ அரசியல் பலத்தை உறுதிப்படுத்திக் கொள்ள நாங்கள் தயாராகி வருகின்றோம். எங்களுக்கு வாக்களிப்பதற்கு தலைநகர தமிழர்களும் தயாராக இருக்கின்றார்கள்.
நான் எனது கட்சியின் தலைவர் நீங்கள் உங்களது கட்சியின் தலைவர் அல்ல ஆனாலும் மாநகர சபை முதன்மை வேட்பாளர்கள் என்ற முறையிலும் நண்பர் என்ற நாகரீகத்தின் அடிப்படையிலும் தான் உங்களுடன் பலமுறை கலந்துரையாடி இருக்கின்றேன். ஆனால் அதற்காக நீங்கள் உங்களுக்குப் புரியாத விடயங்களை பற்றி பேசக்கூடாது. கட்சி தலைவர்கள் என்ற முறையில் நான் ரணில் விக்கிரமசிங்க அல்லது உங்களது பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பிரதி தலைவர் கரு ஜெயசூரிய ஆகியோருடன் பரிமாறிக் கொண்ட கருத்துக்கள் பற்றி உங்களுக்குத் தெரியாது.
உங்களது கட்சி எங்களை அரவணைத்து செல்வதற்கு தவறி விட்டது என நீங்களே ஏற்றுக்கொள்கின்றீர்கள். அது முற்றிலும் உண்மை. கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது கூட்டணி தமிழ் கட்சியான எங்களுக்கு கொடுக்க வேண்டிய தேசியப் பட்டியல் உறுப்புரிமையை தராமல் உங்களது கட்சி ஏமாற்றியது. ஆனால் முஸ்லிம் காங்கிரஸிற்கு இரண்டு தேசியப்பட்டியல் உறுப்புரிமைகளை உங்களது கட்சி வழங்கியது. இது ஏன் என்று போய் உங்கள் தலைவரிடம் கேளுங்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலிலே கொழும்பில் மூன்று தமிழ் வேட்பாளர்களை நாங்களே போட்டியிட வைத்திருக்கலாம்.
ஆனால் ஐ.தே.க.வின் தமிழ் வேட்பாளராக மாகாண சபை உறுப்பினர் சி.வை.ராமிற்கு அதை நாங்கள் விட்டுக் கொடுத்தோம். எனவே எங்களுக்காக மூன்றாவது தமிழ் வேட்பாளரைக் களமிறக்கவில்லை என்று நீங்கள் சொல்வது பொய். ஆனால் கடைசியில் மூன்றாவது தமிழ் விருப்பு வாக்கை பெற்றுக் கொள்வதற்காக ரவி கருணாநாயக்க சி.வை.ராமிற்கு போட்டியிட இடங்கொடுக்கவில்லை. அதற்கு பின்னர் உங்களது கட்சி தலைவர் மாகாண சபை உறுப்பினர் சி.வை.ராமை அழைத்து அவரை கொழும்பு மேயர் வேட்பளாராக போட்டியிட வைப்பதாக உறுதியளித்து சமாதானம் செய்தார். இவற்றை சி.வை.ராமே ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் மூன்றாவது முஸ்லிம் வேட்பாளராக ஐ.தே.க.வில் போட்டியிட்டு தோல்வியடைந்த உங்களை தற்சமயம் மேயர் வேட்பாளராக உங்களது தலைவர் நியமித்துள்ளார். இதன் மூலம் உங்களது கட்சியை சார்ந்த தமிழ் உறுப்பினராகிய சி.வை.ராமை பொதுத் தேர்தலிலும் ஏமாற்றி தற்சமயம் மாநகர சபைத் தேர்தலிலும் ஏமாற்றியுள்ளீர்கள். இதுதான் ஐ.தே.க. தமது கட்சியின் தமிழர்களையும் தம்முடன் கூட்டுச் சேர்கின்ற தமிழ் கட்சிகளையும் நடத்துகின்ற முறையாகும்.
ஐ.தே.க. எப்பொழுதும் தமிழ் மக்களின் வாக்குகளை மாத்திரம் பயன்படுத்தப்பார்க்கின்றது என்பது தான் இதன் காரணமாகும். எங்கள் மக்களின் வாக்குகளை பயன்படுத்தி உங்கள் தலைவருக்கு ஆயுட்காலம் பூராவும் எதிர்க்கட்சி தலைவராக இருப்பதற்கும் நீங்கள் மேயராகிவிட்டு அரசாங்கப் பக்கம் தாவுவதற்கும் நாங்கள் உதவ முடியாது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply