அரசு-கூட்டமைப்பு பேச்சு ஒத்திவைப்பு

அரசுக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கும் இடையிலான 12ஆம் கட்டப் பேச்சு நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 8ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் நடைபெற இருப்பதனால் பிரசாரப் பணிகளில் அமைச்சர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளதன் காரணமாகப் பேச்சு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று உதயனுக்கு அறிய வந்தது. தேர்தல் பணிகளில் அமைச்சர்கள் தீவிரமாக இருப்பதால் அவர்கள் பேச்சுக்கு வரமாட்டார்கள் என்றே நாங்களும் எதிர்பார்க்கிறோம் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்  தெரிவித்தார்.

10ஆவது சுற்றுடன் தடைப்பட்டிருந்த அரசு கூட்டமைப்புப் பேச்சு கடந்த மாதம் மீண்டும் ஆரம்பமானது. செப்ரெம்பர் 10ஆம் திகதி நடைபெற்ற அந்தப் பேச்சில், இனப்பிரச்சினைக்கு 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண்பதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது. இனப்பிரச்சினைக்கு ஏற்கனவே முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டங்களான சந்திரிகாவின் தீர்வுப் பொதி, மற்றும் அனைத்துக் கட்சிக்குழுவின் யோசனைகள் என்பவற்றையும் அடிப்படைகளாகக் கொண்டு பேச்சை நடத்தவும் இரு தரப்பினரும் இணங்கி இருந்தனர்.
அந்தப் பேச்சின்போது, தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு ஒரு தீர்வை எட்டலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த யோசனையை அரசு நிராகரித்திருந்தது. தமக்கு வேறு பல பிரச்சினைகளும் இருப்பதால் மெல்லமெல்லவே பேச்சுக்களை நடத்த முடியும் என்றும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் நாளைய தினம் அடுத்த சுற்றுப் பேச்சு நடக்கும் என்று கடந்த பேச்சின் பின்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உள்ளூராட்சித் தேர்தலைக் காரணம்காட்டி அரசு இப்போது பேச்சைப் பின்போட்டுள்ளது.

பேச்சு ஒத்திவைக்கப்பட்டதாக இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு ஏதும் எமக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அது ஒத்திவைக்கப்படுவதற்கான சாத்தியங்களே அதிகம் உள்ளன என்றார் சம்பந்தன்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply