இலங்கைப்போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கவேண்டும் : சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளது . மன்னிப்புச் சபையின் இலங்கை விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் நிபுணரான ஜிம் மக் டொனால்ட் இந்த மனுவை வெள்ளை மாளிகைக்கு அனுப்பிவைத்துள்ளார். போரின்போது விடுதலைப் புலிகளும், அரச படையினரும் போர்க் குற்றங்களையும்,  மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களையும் புரிந்திருந்தனர் எனவும் மனுவில் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர் பான் கீ மூன் நியமித்த மூவர் கொண்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டுக்களை நம்புவதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என கூறப்பட்டுள்ளது.
 
தமது படைகளால் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசு காத்திரமான விசாரணைகளை மேற்கொள்ளத்தவறியுள்ளது எனவும் இந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதற்கு போரின்போது இருதரப்பினரும் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.சர்வதேச விசாரணைக ளுக்கு வெளிப்படையான ஆதரவை அமெரிக்கா வழங்கவேண்டும் எனவும்,  அதன்மூலம் இலங்கையில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் மற்றும் மீறல்களுக்குப் பொறுப்புக் கூறுவதற்கான நகர்வில் முதலடியை எடுத்து வைக்கமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
ஒக்டோபர் 29ஆம் திகதிக்கு முன்னர் ஐயாயிரம் பேரின் கையொப்பங்களுடன் இந்த மனுவைக் கையளித்தால்,  அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என வெள்ளைமாளிகை தமக்கு அறிவித்துள்ளது எனவும் ஜிம் மக் டொனால்ட் தெரிவித்துள்ளார்.  எனினும் மனித உரிமை அமைப்புக்கள் தெரிவிக்கும் போர்க் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு தொடர்ந்து நிராகரித்து வருகிறது. அவை அடிப்படை ஆதாரங்கள் அற்றவை என அவை கூறுகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply